அபிநயா கிரியேஷன்ஸ் ஜே.கே. கொரோனா தொற்றால் காலமானார்!

0

 277 total views,  1 views today

கும்பகோணத்தைச் சேர்ந்த ஜேகே அவர்கள் (அவருடைய முழுபெயர் ஜே. கிருஷ்ணசாமி) கல்லூரிப் படிப்பை முடித்ததும் சுங்க இலாகாவில் முக்கிய அதிகாரியாக பணியாற்றிவர்

சன் டிவி தொடங்கிய காலம்.

ஜே.கே. அவர்களின் மகன்கள் விஜய், ஆனந்த், பிரசன்னா ஆகியோருடன் இணைந்து ஜே.கே. அவர்களின் மனைவி திருமதி ராதா கிருஷ்ணசாமி அவர்கள், அபிநயா கிரியேஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை  தொடங்கி, தயாரிப்பில் இறங்கினார்.

1996 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கோவை அனுராதா இயக்கத்தில் ‘காஸ்ட்லி மாப்பிள்ளை’ என்கிற தொடர் உருவாகி சன் டிவியில் ஒளிபரப்பானது. அதிக ரசிகர்களை கவர்ந்து  பெரும் புகழ் பெற்ற அந்த தொடர், சன் டிவியின் நம்பர் ஒன் தொடராக விளங்கியது.

அபிநயா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் தொடர் என்றால், குழந்தைகளுடன் அனைவரும் பார்த்து ரசிக்கலாம் என்கிற நன்மதிப்பை காஸ்ட்லி மாப்பிள்ளை தொடர் ஏற்படுத்தியிருந்தது.

அடுத்து மாண்புமிகு மாமியார், மகாராணி செங்கமலம், க்ரீன் சிக்னல், செல்லம்மா, மங்கள அட்சதை, கேள்வியின் நாயகனே, என் பெயர் ரங்கநாயகி என எட்டு வார தொடர்கள் அபிநயா கிரியேஷன்ஸ் தயாரித்து சன் டிவியில் ஒளிபரப்பானது. அனைத்து தொடர்களும் ரசிகர்களிடம் பேராதரவை பெற்றது.

அதன் பிறகு, தனது சுங்க இலாகா பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஜே.கே. அவர்கள் அபிநயா கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் கதை இலாக்கவை தொடங்கி, பத்ரி இயக்கிய மாங்கல்யம் மெகா தொடரில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டார்.

330 பகுதிகள் ஒளிபரப்பான மாங்கல்யம் மெகாத்தொடர், மெகா தொடர்களை தொடர்ந்து தயாரிக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அபிநயா கிரியேஷன்ஸ்க்கு வழங்கியது.

அதன்பிறகு ஆடுகிறான் கண்ணன், தீர்க்கசுமங்கலி, செல்லமடி நீ எனக்கு, திருப்பாவை, அனுபல்லவி, வெள்ளைத் தாமரை, தேவதை என்று ஏழு மெகாத் தொடர்கள் அபிநயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாக்கி சன் டிவியில் ஒளிபரப்பாகின.

இதில் திருப்பாவை மெகா தொடரை கதை, வசனம் எழுதி ஜே.கே. இயக்கினார். அவருக்குள் உள்ள எழுத்தாளனை இந்த தொடர் பயன்படுத்திக் கொண்டது. மற்ற தொடர்களும் அவருக்குள் இருந்த படைப்பாளனை பயன்படுத்திக் கொண்டன.

இன்று முன்னணி இயக்குனராக விளங்கும் சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் சத்யா உட்பட ஏராளமான கலைஞர்களை தமிழ் திரை உலகிற்கும், சின்னத்திரை உலகிற்கும் தந்த நிறுவனம், ஜே.கேயின் அபிநயா கிரியேஷன்ஸ்….

ஜீ தமிழில் அடுத்தடுத்து ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி தொடரின் இயக்குநர் பிரியன், செம்பருத்தி தொடரின் இயக்குனர் நீராவி பாண்டியன் ஆகியோரும் அபிநயா கிரியேஷன்ஸ் அறிமுகப்படுத்திய இயக்குநர்களே….

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வாரமாக குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜே.கே. நேற்று இரவு 11 மணிக்கு காலமானார். இன்று 1 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

Balan.G

Share.

Comments are closed.