உலக அழகிப்போட்டியில் பட்டம் வென்ற அக்ஷரா நடிகையாக அறிமுகம்!
2021 ஆம் ஆண்டு விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்று நடத்திய “பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனவர் அக்ஷரா ரெட்டி. இவர் தமிழ் திரை உலகில் “ரைட் ” என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
திரையுலகுக்கு வருவதற்கு முன்பே அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு நடிகையாக அறிமுகமாகியிருக்கும் அக்ஷரா ரெட்டியிடம் பேட்டி கண்டபோது பல்வேறு ருசிகர விஷயங்களை கூறினார்.
அக்ஷரா ரெட்டி கூறியதாவது:
2021 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல் சார் பங்கேற்று நடத்திய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நான் பங்கேற்று 87 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தேன். அது எனக்கு பல்வேறு அனுபவங்களை கற்றுத் தந்தது. கமல் சாருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவில் ஒன்று. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு நான் நடிப்பேன். அதற்கு முன்னதாக பிக் பாஸில் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் அனைவருக்குமான ஒரு அறிவுரையை சொன்னார் குறிப்பாக அந்த அறிவுரை எனக்கு மனதில் பசுமையாக பதிந்துவிட்டது. “உன்னுடைய வாழ்க்கையின் ஸ்கிரிப்ட்டை நீதான் எழுதுகிறாய் உன் வாழ்வில் நாளைக்கு என்ன நடக்க வேண்டும் என்பதைக்கூட நீதான் முடிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார். அந்த அறிவுரை எனக்கு வாழ்நாள் அறிவுரையாக அமைந்துவிட்டது. அதைப் பின்பற்றி என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். என் வாழ்வில் நாளை என்ன நடக்க வேண்டும் என்பதையும் நான்தான் முடிவு செய்கிறேன்.
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்.
சினிமாவைப் பொறுத்தவரை ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி ஆகியோரின் ரசிகை நான். நடிப்பு பாடல், இசை, நடனம் என பல்வேறு திறமைகள் கொண்ட ஸ்ருதிஹாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனது தந்தை சுதாகர் ரெட்டி ஐஐடி படிப்பை முடித்தவர். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் புல்லட் ப்ரூப் பாதுகாப்புக்கான அத்தனை தொழில்நுட்ப அம்சங்களையும் அவர்தான் செய்து கொடுத்தார். எனது தாய் கௌரி சுதாகர் ரெட்டி. என் வாழ்வில் எல்லாவுமாக இருந்தார். நான் நடிகையாக வர வேண்டும் என்பது அவரது எண்ணம். சிறுவயதிலேயே அந்த எண்ணத்தை எனக்கு அவர் விதைத்தார்.. என் மனதிலும் அந்த ஆசை பதிந்துவிட்டது.
தற்போது நான் “ரைட் ” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறேன். ஆனால் இன்று எனது தாய் இல்லை. அது எனக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் இறந்த பிறகு சினிமா துறையே வேண்டாம் என்று தான் நான் எண்ணியிருந்தேன். ஆனால் ரைட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தின் கதையை எனக்கு இயக்குனர் கூறிய போது எனது கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இப்படத்தில் அருண்பாண்டியன், நட்டி, மூணாறு ரமேஷ் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் நடிக்கிறார்கள். அவர்களுடன் நான் நடித்தபோது நடிப்பு பற்றி பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டேன். சில இடத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்றுகூட அவர்கள் எனக்கு சொல்லித் தந்தார்கள். அது எனக்கு பயனுள்ளதாக அமைந்தது.
ஏற்கனவே நான் கன்னடத்தில் “பில்கேட்ஸ்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். ஆனால் நல்ல கதை அம்சமுள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன்.
நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே மார்ஷல் ஆர்ட்ஸ், மற்றும் பாக்சிங் பயிற்சி பெற்றிருக்கிறேன். சினிமாவில் ஆக்சன் ஹீரோயினாக நடிக்க ஆசை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் உடனடியாக ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறேன். மேலும் வில்வித்தை பயிற்சியும் பெற்றுக் கொண்டு வருகிறேன். பைக் ஓட்டுவேன், குதிரை ஏற்றம் தெரியும். மேலும் சிறு வயதிலிருந்து சங்கீதம்
பயின்றிருக்கிறேன். பாடல்கள் பாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரது தீவிர ரசிகை.
நான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக ஜார்ஜியாவில் யுனிவர்சிட்டி ஆப் பிப்ளிசியில்( University of PIBILISI) சைக்காலஜி படித்தேன்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மிஸ் சூப்பர் குளோப் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்று வென்றேன். பின்னர் அதே ஆண்டு துபாயில் நடந்த மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்ட் அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றேன். இந்த போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த 23 அழகிகள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாடலிங் செய்வதற்கு எனக்கு ரோல் மாடலாக இருப்பவர் உலக அழகி பட்டம் என்ற ஐஸ்வர்யா ராய்தான்.
எனக்கு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழிகள் நன்றாக பேச தெரியும். கன்னடம் மலையாளம் மொழிகளை புரிந்து கொள்வேன். தமிழ் தவிர பிற மொழி படங்களிலும் நடிக்க ஆசை உள்ளது.
“ரைட்” படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் எனக்கு அனைவரும் ஆதரவும், ஆசியும் தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அக்ஷரா ரெட்டி கூறினார்.