Monday, April 20

இட்லி கடை _ விமர்சனம்

Loading

இட்லி கடை _ விமர்சனம்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற இந்த ஒன்றரை வரி குறளை வைத்து  எடுக்கப்பட்ட ஓர் அற்புதமான திரைப்படம் தான் இட்லி கடை என்று ஒரே வரியில் விமர்சனம் செய்து விடலாம்.

முந்தைய மூன்று படங்களில் இருந்து மாறுபட்ட முறையில் தனது இயக்கத்தில் உருவான  இட்லி கடை படத்தை கொடுத்திருக்கிறார் தனுஷ் .

தேனி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சிறிய அளவில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார் ராஜ் கிரண். இந்தக் கடையின் சிறப்பு என்னவென்றால் ஆட்டுக்கல்லில் மாவை ஆட்டி, இட்லி சுட்டு விற்பனை செய்வதுதான்.

வருமானத்திற்கான தொழிலாக மட்டும் இட்லி கடையை கருதாமல் அதை ஆத்மார்த்தமாக செய்து வரும் ராஜ்கிரணைப் பார்த்து அவரது மகனான தனுஷுகும் சிறுவயதிலிருந்தே சமையல் கலையில் ஆர்வம் ஏற்படுகிறது.

இதனால் கேட்டரிங் படித்து முடித்துவிட்டு இட்லி கடை தொழில் விரிவுபடுத்த எண்ணுகிறார்.

இதற்காக உரிமை கிளைகளை திறக்க திட்டமிடும்போது ராஜ் கிரண் மறுத்து விடுகிறார்.

மேலும் தனுஷ் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்  நகரில் பிரபல உணவு விடுதியில் சமையல் கலைஞராக பணியில் சேர்கிறார். தன்னுடன் வரும்படி ராஜ்கிரனை அழைக்க இந்த மண்ணையும் மக்களையும் விட்டுவிட்டு வர முடியாது என்று அவர் மறுத்து விடுகிறார்.

பாங்காக்கில் பணியாற்றும் தனுஷின் திறமை மற்றும் ஒழுக்கத்தை பார்த்து தன் மகள் ஷாலினி பாண்டேயை திருமணம் செய்து தர திட்டமிடுகிறார் அவர் வேலை பார்க்கும் ஹோட்டல் முதலாளி சத்தியராஜ்.

ஆனால் அவரது மகனான அருண் விஜய்க்கு இதில் விருப்பமில்லை.

திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது தனுஷின் தந்தை இறந்து விட்டதாக செய்தி வர,் உடனே அவர் புறப்பட்டு ஊருக்கு வருகிறார்.

அப்பா இறந்த சோகத்தில் அம்மாவும் மரணம் அடைகிறார்.

அப்பா உயிரோடு இருந்தபோது அவர் சொன்ன விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளாத தனுசுக்கு,  இப்போது அவை ஒவ்வொன்றாக புரிய ஆரம்பிக்கும் வகையில் சில சம்பவங்கள் நடக்கின்றன.

தனுஷை திருமணத்திற்காக அழைத்துச் செல்ல சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே மூவரும் கிராமத்துக்கு வருகின்றனர். அவர்களுக்கும் தனுஷுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

தனுஷ் அவர்களுடன் பாங்காக் சென்றாரா? அல்லது அப்பாவின் ஆசைப்படி இட்லி கடையை இங்கே நடத்துகிறாரா என்பதுதான் படத்தின் பிற்பகுதி.

யதார்த்தமான நடிப்பால் நம் நெஞ்சில் நிறைகிறார் தனுஷ். மிக இயல்பான அதே சமயம் ஆழமான நடிப்பை  அற்புதமாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார் தனுஷ். 

பணக்கார திமிரை வெளிப்படுத்தும் வில்லன் வேடத்தை தன் வலிமையான நடிப்பின் மூலம் நியாயப்படுத்தி இருக்கிறார் அருண் விஜய்.

நாயகனாக பல படங்களில் நடிக்கும்போது இடையே வில்லன் வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கும் துணிச்சல் எல்லோருக்கும் வராது. இதை சவாலாக ஏற்றுக்கொண்டு சாதித்து காட்டியிருக்கிறார் அருண் விஜய்.

தனுஷின் பள்ளிப் பருவத்து தோழியாக வரும் நித்யா மேனனின் யானை பசிக்கு இந்த படத்தில் கொஞ்சம் சோளப் பொரிதான் கிடைத்திருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

தனுஷின் தந்தை வேடத்தில் ராஜ்கிரண் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

தாயார் வேடத்தில் வரும் கீதா கைலாசம், பாங்காக் ஹோட்டல் அதிபர் சத்யராஜ், இன்ஸ்பெக்டராக வரும் பார்த்திபன்,  மற்றும் இளவரசு ஆகியோர் நிறைவாக  நடித்திருக்கின்றனர்.

சத்யராஜின் மகனான அருண் விஜய்க்கு துவக்கத்திலிருந்து தன் தங்கை ஷாலினியை தனுசுக்கு மணம் செய்து தர விருப்பமில்லை என்றால் அவர் எதற்காக தனுசை அழைக்க தமிழ்நாட்டில் உள்ள கிராமத்திற்கு வர வேண்டும் என்ற கேள்விக்கு இயக்குனர் தனுஷ் என்ன பதில் சொல்வார்?

கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்தது இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் உருவான பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன.

பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

உண்மைக்கு மிக நெருக்கமாக நின்று யதார்த்தமாக காட்சிகளை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் தனுஷ்.

கத்தி, அரிவால், துப்பாக்கி, பழிக்குப் பழி, ரத்தத்துக்கு இரத்தம் என்ற வகையிலே திரும்பத் திரும்ப ஏராளமான படங்கள் வந்து கொண்டிருக்கையில், அகிம்சையே மிகச்சிறந்த ஆயுதம், அதன் மூலமே வெற்றி வசப்படும் என்ற உயர்ந்த கருத்தை உன்னதமான முறையில் படமாக்கியதற்காகவே தனுஷுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்.

அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய அருமையான படம் இட்லி கடை.

மதிப்பெண் 4/5