Friday, October 23

அருண்-விஜய் அறிவழகன் இணையும் திரில்லர் படம் ‘ஏவி31’!

Loading

பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே இழுத்து வரும் திரில்லரான ‘குற்றம் 23’ படத்தை யாரால் மறக்க இயலும்? மருத்துவக் குற்றம் பற்றிய, தென்னிந்தியாவின் முதல் படம் என்று வெகுவாகப் பாராட்டப்பட்ட இப்படம், ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத நிறைவான அனுபவத்தைத் தந்து, வசூலிலும் பரபரப்பைக் கிளப்பியது. இப்படத்தின் இயக்குநர் அறிவழகனும், நாயகன் அருண் விஜயும் இப்போது மீண்டும் இணைகின்றனர். தற்காலிகமாக ‘ஏவி 31’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவத்துக்காக விஜய் ராகவேந்திரா தயாரிக்கிறார். சம்பிரதாயமான பூஜையுடன் இன்று (9-12-2019) துவங்கிய படப்பிடிப்பில், படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பங்கு பெற்றனர்.

இது குறித்து தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா கூறியதாவது…

“என் நீண்ட கால நண்பரான அருண் விஜயின் கடின உழைப்பையும், சீரான வளர்ச்சியையும், நான் நன்கறிவேன். அற்புதமான முயற்சிகளுக்குப்பின் இப்போது அவர் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் விரும்பும் நடிகராக தன்னைத் தானே செதுக்கிக் கொண்டிருக்கிறார். இயக்குநர் அறிவழகனைப் பொறுத்தவரை புதுமையான உள்ளடக்கம் கொண்ட திரில்லர் வகைப் பட முயற்சிகளில் புதிய சிகரங்களைத் தொட முயற்சிப்பவர். எல்லைகளைத் தாண்டிய வெற்றிகளுக்காக எப்போதும் குறிவைப்பவர் அறிவழகன். இவ்விருவரும் முன்னர் இணைந்த ‘குற்றம் 23’ படம் பல மொழிகளின் திரைக்கலைஞர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. வலுவான தனித்துவம் மிக்க கதைக்களனுடன் தங்கள் திரைப்படத்தை இணைத்துக் கொள்ளும் இந்த இரட்டையர்களுடன் நான் இணைவதில் பெருமைப் படுகிறேன்.

பல மொழிகளிலும் நடித்து வரும் ரெஜினா கஸாண்ட்ரா, ஏற்கும் வேடம் எதுவானலும் சிறப்பான நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதால், அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் படத்துக்கு படம் அதிகரித்து வருகிறது. இந்தக் கலைஞர்கள் இணைந்து நிகழ்த்தப் போகும் மாயாஜாலத்துக்காக நான் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். உயர் தொழில் நுட்ப நேர்த்தியுடன், எல்லையற்ற திரில்லிங் அனுபத்தைத் தரும் படமாக இது திகழும் என்பதை மட்டும் உறுதிபடக் கூறுகிறேன்” என்கிறார் தயாரிப்பாளர்
விஜய் ராகவேந்திரா.

ஸ்டிஃபி படேல் மற்றொரு நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் பகவதி பெருமாள் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். சாம் சி.எஸ்.இசையமைக்கும் இப்படத்துகு பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். வி.ஜே.சாபு ஜோஸப் படத்தொகுப்பையும், சக்தி வெங்கடராஜ் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.