
பல்டி _ விமர்சனம்
கபடி விளையாட்டை மையப்படுத்தி அதிரடி சண்டைக் காட்சிகளுடன் ஒரு பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம்.
பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி குழுவில் விளையாடும் ஷேன் நிகமும் சாந்தனுவும் மிக நெருங்கிய நண்பர்கள்.
பொற்றாமரை பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் செல்வராகவனும் பொற்றாமரை அணி என்ற பெயரில் கபடி குழு ஒன்றை நடத்தி வருகிறார்.
ஒரு கபடி போட்டியின் போது செல்வராகவன் அணியை தோற்கடித்து பஞ்சமி ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று விடுகிறது.
இதைத் தொடர்ந்து தங்களது பொற்றாமரை அணிக்காக விளையாடுவதற்கு ஷேன் நிகம் மற்றும் சாந்தனுவை செல்வராகவன் அழைக்கிறார்.
பொருளாதார தேவைக்காக செல்வராகவன் அணியில் விளையாட சம்மதிக்கும் இருவரும், தங்களை அறியாமல் அவரது அடாவடி கந்து வட்டி வியாபாரத்தில் சிக்கி தவிப்பதும், அதிலிருந்து மீள முயற்சிப்பதும் தான் பல்டி படத்தின் கதை.
உண்மையில் விளையாடும் நோக்கத்தில் பொற்றாமரை அணிக்கு சென்ற நண்பர்கள் எவ்வாறு தங்களை அறியாமலே செல்வராகவனின் அடியாட்கள் அளவுக்கு சென்று விடுகிறார்கள் என்பதை மிக அழகாக திரையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் உன்னி சிவலிங்கம்.
படத்தின் மிகப்பெரிய பலம் சண்டை காட்சிகள்தான். ஆபத்தான சண்டைக் காட்சிகளில் நாயகன் முகம் தெரியாத அளவுக்கு டூப் நடிகரை வைத்து தான் சண்டைக் காட்சிகளை படமாக்குவார்கள்.
ஆனால் பல்டி படத்தில் பல ஆபத்தான காட்சிகளில் தானே துணிச்சலுடன் நடித்திருக்கிறார் ஷேன் நிகம்.
ப்ரீத்தி அஸ்ரானியுடன் உள்ள காதல், நண்பர்களுடன் உள்ள ஆழமான நட்பு என அனைத்து தளங்களிலும் அட்டகாசமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஷேன் நிகம்.
எதார்த்தமான நடிப்பால் தான் ஏற்ற பாத்திரத்திற்கு பலம் சேர்த்து கவனம் ஈர்க்கிறார் சாந்தனு.
ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி என்றெல்லாம் வசூலிக்கும் செல்வராகவனுக்கு ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆரம்பிக்க ரிசர்வ் வங்கி எப்படி அனுமதி கொடுக்கும்?
இன்னும் சில அனுமதிகள் வர வேண்டியிருக்கிறது என்று சொல்லும் செல்வராகவன் பொற்றாமரை ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற பெயரை வைத்தது எப்படி?
இது போன்ற காட்சிகளை இயக்குனர் தவிர்த்து இருக்கலாம்.
கபடி போட்டிகளின்போதும்,  இரவுக்  காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ.புலிக்கல் திறமை பளிச்செடுக்கிறது.
சாய் அபயங்காரின் இசையில் உருவான பாடல்கள், படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
விளையாட்டை மையமாக வைத்து விறுவிறுப்பான முறையில் உருவாக்கப்பட்ட பல்டி படம் அனைத்து தரப்பினரையும் கவரும்.
மதிப்பெண் 3.75/5


