![]()
கருப்பு பல்சர்_ விமர்சனம்
நாயகன் அட்டகத்தி தினேஷ் சிறிய அளவில் வாட்டர் பியூரிஃபையர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
திருமணத்துக்கு பெண் தேடும் இவருக்கு மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் நாயகி ரேஷ்மா வெங்கடேஷ் அறிமுகம் கிடைக்கிறது.
ஒருவருக்கொருவர் பிடித்து விடவே நேரில் சந்தித்து பேசுகின்றனர்.
தான் ஒரு பிளாக் பல்சர் வண்டி வைத்திருப்பதாக அப்போது பொய் சொல்லுகிறார் தினேஷ்.
இந்தப் பொய்யை உண்மையாக்க மதுரையில் இருக்கும் மன்சூர் அலி கானிடமிருந்து கருப்பு பல்சரை ‘செகண்ட் ஹேண்ட்’ ஆக வாங்கி வருகிறார்.
இந்த வண்டியில், தான் மணந்து கொள்ளவிருக்கும் ரேஷ்மாவுடன் மகிழ்ச்சியாக செல்லும் போது விபத்தில் சிக்குகிறார் தினேஷ்.
இந்தக் கருப்பு பல்சர் தொடர்பாக மேலும் பல அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.
இதன் பின்னணியில் இருக்கும் அமானுஷ்யம் என்ன என்பது சுவையான பிளாஷ் பேக் கதையாக விரிகிறது.
இறுதியில் நாயகன் தினேஷும் நாயகி ரேஷ்மாவும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கருப்பு பல்சர் படத்தின் கதை.
பயமுறுத்துகிறோம் என்ற பெயரில் கிச்சுகிச்சு மூட்டும் திகில் வகை படங்களுக்கு மத்தியில் கருப்பு பல்சர் உண்மையிலேயே ஒரு வித்தியாசமான திரை அனுபவம்தான்.
நாயகன் தினேஷுக்கு இரட்டை வேடங்கள். இரண்டு வேடங்களுக்கும் உடல் மொழியில் பெரிதாக வித்தியாசம் இல்லை என்றாலும் தினேஷ் இயன்றவரை திறம்பட நடித்து கவனம் ஈர்க்கிறார்.
படத்துக்கு பாடல்கள் எழுதி இசையமைத்திருப்பவர் இன்பா.
இசை சுமார் ரகம் என்றாலும் பாடல் வரிகள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு ஜல்லிக்கட்டு காட்சிகளில் பளிச்சிடுகிறது.
படத்துக்காக படமாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காட்சிகளுடன் உண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு காட்சிகளை இணைத்து படத்துக்கு மெருகேற்றி இருக்கிறார் படத்தொகுப்பாளர் சசி தக்ஷா.
துவக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் படத்தை கொண்டு செல்லும் இயக்குனர் முரளி கிருஷ் முதல் படத்தை பெரிதாக குறை இல்லாத அளவுக்கு சிறப்பாகவே இயக்கி இருக்கிறார்.
மதிப்பெண் 3/5


