![]()
Casting : Santosh Soban, Manasa Varanasi, Yogi Babu, Sunil Reddy, Livingston, Sriranjani
Written & Directed By : Ashwin Chandrasekar
Director of Photography: Dinesh Purushothaman
Music & Original Score: Aditya Ravindran
Editor: Ganesh Siva
Art Director: Micheal
Produced By : UV Creations – Ajay Kumar Raju P
முந்தைய நாள் இரவு எதிர்பாராமல் சந்திக்கும், பைக் பூலிங் செய்யும் நாயகன் ஷிவாவிடம், பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்படி உதவி கேட்கிறாள் நாயகி மித்ரா. முதலில் மறுக்கும் வேலையில்லாத நாயகன், பணத்திற்காக உதவ ஒப்புக் கொள்கிறான்.
ஊருக்குப் போகும் தன் முடிவை மாற்றிக் கொள்ளும் மித்ரா, அன்றைய நாள் முழுவதும் பெண்கள் விடுதி தேடி ஷிவாவுடன் பைக்கில் சுற்றுகிறாள்.
விடுதிகளில் எங்கும் இடம் கிடைக்காத சமயத்தில், வாடகையைப் பகிர்ந்து கொள்ளலாம் எனக் கூறி மித்ராவைத் தன் வசிப்பிடத்திற்கு அழைத்துச் செல்கிறான் ஷிவா.
இன்டீரியர் டிசைனிங் துறையில் வாய்ப்புத் தேடும் ஷிவாவும், ஐ.டி. துறையில் வேலை தேடும் மித்ராவும் மெல்ல நண்பர்களாகி, அப்படியே லிவிங்-டுகெதரில் இணைந்து வாழ ஆரம்பிக்கின்றனர்.
மித்ராவின் யோசனை படி, ஒரு நிறுவனம் தொடங்கி வாய்ப்பிற்காக இணையத்தில் வலை வீசத் தொடங்குகிறான் ஷிவா.
சின்னதாக வரும் ஒரு வாய்ப்பு, அடுத்துப் பெரிய வாய்ப்பை ஷிவாவுக்குப் பெற்றுத் தருகிறது.
பொருளாதார நிலையில் ஷிவா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட, மித்ராவோ இன்னும் வேலை தேடியபடி இருக்கிறாள். இது அவர்களுக்குள் சிறு விரிசலை ஏற்படுத்திய பொழுது, மித்ராவின் தந்தைக்கு இவர்களது லிவிங்-டுகெதர் உறவு தெரிய வந்து பெரிய பிரச்சனையாகி விடுகிறது.
இந்த இருவரும் அந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிக்கின்றனர் என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லுகிறது படம்.
தெலுங்கு, தமிழ் என இருமொழியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பெரும்பகுதியான படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் படப்பிடிப்பிற்கு அனுமதி கிடைப்பது சிரமம் என்ற நிலையில், கொரிலா ஷூட்டிங் பாணியில் ஒளிப்பதிவு செய்துள்ளார் தினேஷ் புருஷோத்தமன். அதற்காக ஏனோதானோவென்று அவசரமாக ஷாட்ஸ் வைக்காமல், கலையம்சம் பொருந்த அழகுற ஒவ்வொரு ஃப்ரேமையும் வடித்துள்ளார்.
பார்வையாளர்களை வசப்படுத்தித் தனக்குள் இழுத்துக் கொள்ளும் மேஜிக்கைச் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன்.
பின்னணி இசையையும், பாடல்களையும், மனதில் கவித்துவமான தாக்கத்தினை ஏற்படுத்தும்படி ரம்மியமாக இசையமைத்துள்ளார் ஆதித்யா ரவீந்திரன்.
எல்லா அம்சங்களிலும் படக்குழு செலுத்தியுள்ள நேர்த்தியான பங்களிப்பு, படத்தை ஒரு விஷுவல் கவிதையாக உருவாக்க உதவியுள்ளது.
காதல் படமாக மட்டும் நின்றுவிடாமல், இயக்குநர் அஷ்வின் சந்திரசேகரின் எழுத்தில் ஒரு எமோஷ்னல் டிராமாகவும் ரசிக்க வைக்கிறது.
சாதி, கெளரவம், தன் மகள் அனுபவிக்கும் வலி என நாயகியின் தந்தை முரண்டு பிடிக்கும் பொழுது, அதுவரை அமைதியாக இருக்கும் நாயகியின் அக்காவும், நாயகனின் அண்ணியும் வெகுண்டெழும் இடம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. நாயகன், நாயகியைப் புரிந்து கொள்ளவே அண்ணியின் அழுத்தமான சுட்டிக் காட்டலே உதவுகிறது.
ஷிவாவாக நடித்துள்ள சந்தோஷ் சோபனும், மித்ராவாக நடித்துள்ள மானசா வாரணாசியும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். வேறு எவரையும் அப்பாத்திரங்களில் யோசித்துப் பார்க்க முடியாதபடி மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றனர். இயல்பான, நட்பு கலந்த முதிர்ச்சியான அவர்களது நெருக்கத்தைத் திரையில் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதை மேலும் அழகாக்கும் வண்ணம் அட்டகாசமான வனங்களை எழுதியுள்ளார் இயக்குநர். யோகிபாபு, லிவிங்ஸ்டன், சென்னை மாநகரம் என அக்மார்க் தமிழ்ப்படத்தைப் பார்க்கும் உணர்வைக் கொண்டு வந்துவிடுகின்றனர்.
இரவு 11 மணிக்கு பதில் காலை 11 மணிக்கு ரயில் டிக்கெட் எடுத்து விட்டதாக ஒரு காட்சி வருகிறது. ரயில்வே டைம் என்பது 24 மணி நேரம். ஒருவேளை இரவு பகல் என்பது மாறினால் டிக்கெட்டில், அடுத்த நாள் தேதியை காட்டும். இந்த விஷயத்தை சரியான முறையில் இயக்குனர் திரையில் சொல்லி இருக்கலாம்.
இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு வந்துள்ள நிறைவானதொரு படைப்பாக மனதை லேசாக்குகிறது இத்திரைப்படம்.
பொதுவாக, ஒரு கொண்டாட்ட மனநிலையையோ, சமூக கோபத்தையோ, வயதைக் குறைத்து நினைவுகளைப் பின்னோக்கி இட்டுச் செல்லும் குறுகுறுப்பையோ, பிரதான கதாபாத்திரங்களின் வெற்றியை நமதாகப் பாவிக்கும் மகிழ்ச்சியையோ, மொக்கையான படத்தில் சிக்கிக் கொண்டோமே என்ற மன உளைச்சலையோ, இயல்பு வாழ்க்கையின் பிக்கல் பிடுங்கல்களில் இருந்து சிறிது நேர ஆசுவாசத்தையோ தான் திரைப்படங்கள் பெரும்பாலும் வழங்கும்.
ஆனால் இப்படத்தின் மூலம், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தையும், நாளை என்பது நிச்சயமான ஒன்று என எண்ணி வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும் கண்மூடித்தனத்தையும், மறுபரிசீலணை செய்ய வைத்துள்ளார் இயக்குநர் அஷ்வின் சந்திரசேகர்.
மதிப்பெண்4/5


