டிமான்ட்டி காலனி _ விமர்சனம்
ஏற்கெவே 2015 ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்து + அருள்நிதி கூட்டணி இணைந்து வெற்றி பெற்ற டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் தற்போது வெளியாகி இருக்கிறது.
முந்தைய பாகத்தில், நாயகன் ஸ்ரீனிவாசன் மரணமடைந்துவிடுவார். ஆனால் அவர் உயிருடன்தான் இருக்கிறார் என துவங்குகிறது இரண்டாம் பாகம். அதே நேரம் அவரது உயிருக்கு ஆபத்து என்கிற ட்விஸ்ட்டையும் வைக்கிறது.
அவரை காப்பாற்றியது யார், ஏன் இந்த நிலை என்பதை த்ரில்லராக விவரிக்கிறது இரண்டாம் பாகம்.
இயக்குர் அஜய் ஞானமுத்துவுக்கு முதல் பாராட்டு. வெவ்வேறு காலகட்டங்களில் கதையை கொண்டு சென்றாலும், குழப்பியடிக்காமல்.. சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்.
அடுத்த பாராட்டு அருள் நிதிக்கு.
வழக்கம்போலவே – நம்ம வீட்டுப் பையன் இமேஜுடன் – இயல்பான நடிப்பை அளித்து உள்ளார். சொத்துக்கு ஆசைப்படுவது, சித்தப்பாவையே மிரட்டுவது, திகில் காட்சிகளில் மிரள்வது -மிரட்டுவது என சிறப்பான நடிப்பு. வாழ்த்துகள் அருள்நிதி.
நாயகி பிரியா பவானி ஷங்கரும் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளார். காதலனை நினைத்து ஏங்குவது, அமானுஸ்ய பிரச்சினையை தீர்க்க போராடுவது என்று அசத்தி இருக்கிறார்.
சார்பட்டா முத்துக்குமார், அருண் பாண்டியன், சீன நடிகர் செரிங் டோர்ஜி உள்ளிட்ட அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
அமானுஷ்ய படத்துக்கு ஏற்ற திகில் பின்னணி இசையை அளித்து உள்ளார் சாம் சி.எஸ். அதேபோல ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார் ஹரிஷ் கண்ணன், படத்தொகுப்பாளர் குமரேஷ் கன கச்சிதமான எடிட்டிங்கால் ரசிக்க வைக்கிறார்.
துவக்கத்தில் இருந்து இறுதிவரை, திகில் குறையாமல் பயப்படவைத்து வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.