![]()

வேதா _ விமர்சனம்
என்னதான் அறிவியல் யுகத்தில் வாழ்கிறோம் என பெருமைப்பட்டுக் கொண்டாலும், இன்னமும் சாதீய ஏற்றத்தாழ்வு கொடுமைகள் நிகழ்ந்தபடிதான் உள்ளன என்பதை சொல்லும் படம் வேதா.
வட இந்தியாவின் பின்தங்கிய கிராமம். இந்த காலத்திலும் சாதிய அடிமை முறை நிலவுகிறது. சுற்றுப்பட்டு கிராமங்களை அடக்கிவைத்திருக்கும் ஜமீன் குடும்பத்தின் எதேச்சகாரம் தூள் பரத்துகிறது.
இங்கே ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பெண், குத்து சண்டை கற்க விரும்புகிறாள். அவளது அண்ணனும், ஓர் உயர் சாதி பெண்ணும் காதலிக்கிறார்கள். இவர்களுக்கு என்ன ஆனது என்பதை ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கும் படம்தான் வேதா.
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணாக, தனது வர்க்க வலியை கண்முன் நிறுத்தி இருக்கிறார் ஷர்வாரி. சாதி இழிவுக்கு ஆளாவது, அதிலிருந்து மீள போராடுவது, அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் என இந்தப் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ஷர்வாரி. அற்புதமான நடிப்பு.
அவருக்கு உதவும் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக வருகிறார் ஜான் ஆபிரகாம். அவரது தோற்றமும், உடல் மொழியும் ராணுவ வீரரை கண்முன் நிறுத்துகிறது. மெதுவான அதே நேரம் உறுதியான அவரது பேச்சும், உடல் மொழியும் கதாபாத்திரத்துக்கு கூடுதல் பலத்தை சேர்க்கிறது.
அவரது காதலியாக வந்து இரண்டு டூயட்டுகள் பாடி, மரணிக்கிறார் தமன்னா. பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் வருகிற காட்சிகளில் கவர்கிறார்.
மற்ற பாத்திரங்களின் தோன்றியிருப்பவர்களும் நன்றாகவே நடித்துள்ளனர்.
வட இந்திய பின் தங்கிய கிராமம், காஷ்மீர் என அனைத்து பகுதிகளையும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ‘ஹோலியான்’, ‘மம்மி ஜி’ உள்ளிட்ட பாடல்கள் மயக்குகின்றன. பின்னணி இசையும் அபாரம்.
சாதீய கொடுமைகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் இழப்புகளையும் அழுத்தமாம சொல்லியிருக்கும் இயக்குநருக்கு கை கொடுக்கலாம்.
அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

