நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி சாய்குமார் தன் முயற்சியாலும், சிறந்த நடிப்பாலும் படிப்படியாக முன்னேறி தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தெலுங்கு சினிமாவில் தனது திறமையை நிரூபித்த ஆதி, தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் இந்த படத்தை MG ஆரா சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் காவ்யா மகேஷ், திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் சி.வி.குமார் மற்றும் நியூ ஏஜ் சினிமா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இரட்டை இயக்குனர்களான கார்த்திக் – விக்னேஷ் சகோதரர்கள் படத்தை இயக்குகிறார்கள்.
எம்.ஜி.ஆரா சினிமாஸ் தயாரிப்பாளர் காவ்யா மகேஷ் கூறும்போது, “ஆதி சாய்குமார் வளர்ச்சி படிப்படியாக அதிகரித்து வருகிறது. அவரது திரை ஆளுமை மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் மூலம் அவருக்கு தமிழ் ரசிகர்களிடையேயும் மிக நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று உணர்ந்தோம். குறிப்பிடத்தக்க வகையில், வேதிகா அவரது அழகான தோற்றத்துக்காக மட்டும் பேசப்படவில்லை, அவரது நடிப்பு மற்றும் தேர்ந்தெடுக்கும் தனித்துவமான கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளால் தென்னிந்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருக்கிறார். கார்த்திக் மற்றும் விக்னேஷ் சொன்ன கதையை தனிப்பட்ட முறையில் நான் ஒரு பார்வையாளராக மிகவும் ரசித்தேன். சினிமா மீதான அவர்களின் பேரார்வம் மற்றும் புதுமையான கூறுகளை முடிந்தவரை படத்தில் சேர்க்கும் அவர்களின் முயற்சி மிக சிறப்பானது” என்றார்.
இயக்குனர் கார்த்திக் கூறும்போது, “மகிழ்ச்சியாக உணர்வதை விட நான் மற்றும் விக்னேஷ் இப்போது கடுமையாக உழைக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம். தென்னிந்திய சினிமாவில் மொழி மற்றும் எல்லை போன்ற தடைகள் குறைந்து கொண்டு வரும் வேளையில், தமிழ் ரசிகர்களையும் கவரும் வகையில் படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறோம். இயற்கையாகவே, இந்த படத்தின் கதை மற்றும் கூறுகள் உலகளாவிய ஒரு விஷயம், இது அனைத்து பகுதிகளிலும் உள்ள பார்வையாளர்களையும் ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
சி.சத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 2.0 படத்தில் நிரவ் ஷாவிடம் உதவியாளராக பணிபுரிந்த கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தலக்கொண்டா மற்றும் சித்தூருவின் அழகிய இடங்களில் தொடங்கி, நடைபெற்று வருகிறது.