இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் ஆட்டம் கண்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலரும் உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட நடிகர் அபி சரவணன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். தற்போது மதுரையில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமுக்கு சென்று அங்கு இருப்பவர்களுக்கு உதவி இருக்கிறார். அங்கு இருக்கும் சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 1300 நபர்களுக்கும், மதுரையில் இருக்கும் எளிய 300 குடும்பங்களுக்கும் 1 வாரத்திற்கு தேவையான 13 வகையான காய்கறிகள் மற்றும் அரிசிகளை நண்பர்கள் உதவியுடன் கொடுத்திருக்கிறார்.
மேலும் திருநங்கைகள் 50 பேருக்கும் நெசவாளர்கள் 50 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்டவைகளை கொடுத்திருக்கிறார்.
தினக்கூலியை நம்பி இருக்கும் இலங்கை தமிழர் அகதிகள் வறுமையில் இருப்பதை அறிந்த அபி சரவணன், இவ்வாறு உதவி இருக்கிறார். மேலும் நம் நாட்டு மக்களுக்கு உதவுவது போல, நம் நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் உதவுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.