முழுநீள பொழுதுபோக்கு படம் கோமாளி!

0

 528 total views,  1 views today

ஜெயம் ரவியின் தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல, பிரதீப் ரங்கநாதன் போன்ற இயக்குனர்களும் கூட இதை எதிர்பார்த்திருந்தனர் போல இருக்கிறது. முந்தைய படமான “அடங்க மறு” உட்பட தொடர்ந்து கோபக்கார இளைஞர் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த ஜெயம் ரவி, அடுத்து வரவிருக்கும் கோமாளி படத்தை காமெடி மற்றும் எமோஷன் கலந்த முழுநீள பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.
 
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறும்போது, “ஆம், நாங்கள் நகைச்சுவை அம்சங்களை கொண்ட குடும்பத்துடன் ரசிக்கும் முழுநீள பொழுதுபோக்கு படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாகவே, ஜெயம் ரவி சார் தனி ஒருவன் மற்றும் அடங்க மறு போன்ற திரைப்படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடிப்பதையே பார்த்து வந்திருக்கிறோம். இது காமெடி மற்றும் எமோஷன் கலந்த ஒரு குடும்பப் படம். இது சமூக ஊடகங்களில் பரவி வரும் எதிர்மறை கருத்துகளை பற்றி பேசும் படம், இறுதியில் நல்ல ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயம் ரவி சார் 9 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுவார், 90களின் பின்னணியில் அவரின் தோற்றம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். யோகிபாபு ஒரு வழக்கமான நகைச்சுவை நடிகராக இல்லாமல், ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க இருப்பார். கே.எஸ்.ரவிகுமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் ஆகியோர் படத்தின் நகைச்சுவை காட்சிகளை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றிருக்கிறார்கள். YouTube பரிதாபங்கள் புகழ் RJ ஆனந்தியை இந்த படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அவர் ஒரு தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காஜல் அகர்வால் ஒரு நல்ல அனுபவமுள்ள நடிகை, அவர் எப்போதும் நடிப்பை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருப்பார். ஒவ்வொரு முறையும், ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் ஜோடியை நான் பார்க்கும் போது, ஒரு மேஜிக்கை உணர்வேன். ரசிகர்களும் அதை உணர்வார்கள் என நம்புகிறேன். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரம் இந்த கதைக்கு தேவைப்பட்டது. அத்துடன் அவர் சிறப்பாக நடிப்பவராகவும் இருக்க வேண்டும்.  எனவே கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே அதை சரியாக செய்வார் என்று நினைத்து அவரை நடிக்க வைத்திருக்கிறோம். கன்னட படமான கிரிக் பார்ட்டி மூலம் தென்னிந்திய சினிமாவில் பரபரப்பான நடிகையாக புகழ் பெற்றவர் அவர். அவரது நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும், பாராட்டப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.
 
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழாவை பற்றி அவர் கூறும்போது, “அவர் இளைஞர்களின் இசை சின்னமாக மாறிவிட்டார், மேலும் இந்த படத்தில் மிகவும் சுவாரஸ்யமான பாடல்களை எங்களுக்கு வழங்கியிருக்கிறார். குறிப்பாக ‘பைசா நோட்டு’ பாடல் அதன் இசைக்காகவவும், தயாரிப்புக்காகவும் நிச்சயம் பேசப்படும். இது ஒரு கற்பனை பாடல், காஜல் அகர்வால்க்கு கோயில் கட்டப்பட, அது ஒரு பப்பாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதாக இருக்கும். பாடல்கள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது, ரசிகர்கள் அதை கேட்டு ரசிப்பதை எதிர்நோக்கியிருக்கிறோம்” என்றார்.
 
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள இந்த கோமாளி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

 

Share.

Comments are closed.