Monday, April 20

ஜாக்கி _ விமர்சனம்

Loading

ஜாக்கி _ விமர்சனம்

மதுரையை சுற்றி உள்ள கிராமங்களில் நடைபெறும் சேவல் சண்டை போல், மற்றும் ஒரு புகழ் பெற்ற பாரம்பரிய போட்டி கிடா சண்டை ஆகும்.

ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார் செய்வதுபோல் நிறைய செலவு செய்து பயிற்சி அளித்து போட்டியில் கலந்து கொள்ளும் கிடாவை வளர்ப்பார்கள்.

வீர விளையாட்டாக தொடங்கும் போட்டி, பின்னர் சண்டையாக மாறி, கௌரவ பிரச்சனை வடிவெடுத்து, வெட்டு குத்து என்று ரணகளமாக மாறுவது சாதாரண விஷயம்தான்.

இந்தப் பின்னணியை கொண்டு உயிர்ப்புடன் ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரகபல்.

சாதாரணமாக வீட்டில் வளர்க்கப்படும் ஓர் ஆட்டுக்குட்டியை கூட சினிமாவில் நடிக்க வைப்பது கடினமான செயல்  என்ற நிலையில் தலையிலேயே முட்டி ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் கிடா வகை ஆட்டை வைத்து இத்தகையா ஒரு படத்தை கொடுத்ததற்காக படக்குழுவை தாராளமாக பாராட்டலாம்.

மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டும் யுவன் கிருஷ்ணா, காளி என்ற கிடாவை வளர்த்து அதை போட்டியில் பங்கு பெற வைக்கிறார்.

பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று ஜாக்கி மெடலையும் வாங்கி இருக்கும் ரிதான் கிருஷ்ணாஸ் கிடாவை யுவன் கிருஷ்ணாவின் காளி வெற்றி கொள்கிறது.

அத்துடன் கிடா சண்டையில் ரிதான் கிருஷ்ணாஸ் கிடாவின் ஒரு கொம்பும் முறிந்து விடுகிறது.

இதனால் ஆத்திரமடையும் ரிதான் இந்த சண்டையை தன் கௌரவத்துக்கு ஏற்பட்ட இழுக்காக்க்  கருதி, யுவன் கிருஷ்ணாவை பழிவாங்க என்னென்ன முயற்சிகள் செய்கிறார் என்பதும் அதை யுவன் எப்படி முறியடித்து வெற்றி கொள்கிறார் என்பதும்தான் ஜாக்கி படத்தின் கதை.

துவக்கத்திலிருந்து இறுதிவரை படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் ‘பரபர’ திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

முரட்டு கிடா சண்டைக்கு மத்தியில் யுவன் கிருஷ்ணா_அம்மு அபிராமி ஜோடியின் காதல் பாலைவனச் சோலை போல மலர்ந்திருப்பது ரசிக்க வைக்கிறது.

கிடா சண்டை குரோதமாக மாறுவதை உணர்ந்து தக்க சமயத்தில் பிரேக் போடும் மதுசூதன ராவ்,  உயிருக்கு போராடும் கிடாவை உயிர்ப்பிக்கும் சித்தன் மோகன்,  நாயகன் யுவன் அக்காவாக வரும் சரண்யா ரவிச்சந்திரன் என்று அனைவருமே நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் பிரகபல், சூர்யா பாண்டியன், சூர்யா பாலா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கும் வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கின்றன.

படத்தொகுப்பாளர் என் பி ஸ்ரீகாந்த், தன் கத்தரிக்கோலை இன்னும் சற்று அதிகமாக பயன்படுத்தி இருந்தால் விறுவிறுப்பு கூடி இருக்கும்.

நாயகன் யுவன் கிருஷ்ணா மற்றும் வில்லன் ரிதான்கிருஷ்ணா இருவருமே மண்ணின் மைந்தர்களாக தோற்றமளிக்காததுடன், அவர்களின் வசன உச்சரிப்பும் மதுரை ‘ஸ்லாங்’கில் இல்லை என்பதுதான் குறை.

விறுவிறுப்பாக செல்லும் இந்தப் வித்தியாசமான படத்தை மாறுபட்ட திரை அனுபவத்திற்காகவே தாராளமாக ரசிக்கலாம்.

மதிப்பெண் 3.5/5