![]()
கருப்பு _ விமர்சனம்
நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் அநீதிகளை அச்சமின்ற தோலுரித்துக் காட்டும் அட்டகாசமான படம் கருப்பு.
ஆதிக்கம் மிக்க மனித சக்திகளால் நடைபெறும் அக்கிரமங்களை தட்டிக்கேட்க, எளியோர்களின் சாமியான கருப்பு மனித உருவில் வந்து நின்றால் எப்படி இருக்கும் என்கிற ஃபேண்டஸி + அதிரடி மசாலாதான் கருப்பு!
கேரளாவிலிருந்து சென்னைக்குத் தன் மகள் பினுவின் அறுவை சிகிச்சைக்காக, வருகிறார் தந்தை இந்திரன்ஸ்.
ஆனால், சென்னை நகரம் அவர்களுக்குப் புதியது என்பதால் வழி தெரியாமல் தவித்து, துரதிர்ஷ்டவசமாக சில சமூக விரோதிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.
மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த நகைகள் அனைத்தையும் திருடர்கள் பறித்துச் செல்ல, செய்வதறியாது திகைக்கும் அந்தத் தந்தை, நியாயம் கேட்டு காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைகிறார்.
அங்குதான் கதையின் முக்கியத் திருப்பம் ஏற்படுகிறது. அநீதிக்குத் துணை போகும் வழக்கறிஞராக இருக்கும் பேபி கண்ணன் (ஆர்.ஜே. பாலாஜி), அந்தத் தந்தையின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு அவரை அலைக்கழித்து ஏமாற்றுகிறார்.
இதனால் மனமுடைந்துப் போகும் அந்தத் தந்தை, வேறு வழியே இல்லாமல் நேராக வேட்டைக் கருப்பசாமி சந்நிதிக்குச் சென்று, சிலைக்கு மிளகாய் சாந்து தேய்த்துத் தன் கண்ணீரை நியாயமாகக் கேட்கிறார்.
பாதிக்கப்பட்ட அந்த ஏழையின் குரலுக்குச் செவிசாய்த்து, அநீதியை வேட்டையாட அந்தக் கருப்பசாமியே (சூர்யா) மனித உருவில் நேரில் வருகிறார். அதன் பிறகு தொடங்கும் அதிரடியான ஆட்டமும், அநீதிக்கு எதிரான வேட்டையும்தான் ‘கருப்பு’ படத்தின் அதிரடியான மீதிக்கதை.
வழக்கறிஞர் சரவணன் மற்றும் கருப்புசாமி என நடிப்பில் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார், சூர்யா.
கடவுள் பிம்பத்தை ஆக்ஷன் காட்சிகளில் நம்பகத்தன்மையுடன் கடத்தியதோடு, அந்த இன்ட்ரோ பாடலில் செம ஆட்டம் போட்டு தியேட்டரை அதிர வைக்கிறார். ‘சிங்கம்’ சூர்யாவை மீண்டும் பார்த்த எனர்ஜி!
கம்பீரமான வக்கீல் உடையில் கச்சிதமாகப் பொருந்துகிறார் த்ரிஷா. அநீதி கண்டு குமுறுவதும், ஏதும் செய்ய இயலாத நிலையில் குமைவதும், கடவுளே வந்துவிட்ட நிலையில் குதூகலிப்பதுமாய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வழக்குரைஞர் பேபி கண்ணன் கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி மிரட்டி இருக்கிறார்.
இதுவரை நகைச்சுவை மற்றும் அப்பாவி கதாபாத்திரங்களில் நடித்தவரா இவர் என்கிற ஆச்சரியக் கேள்வியை எழுப்புகிறார் ஆர்.ஜே.பாலாஜி.
வில்லத்தனம் நிறைந்த சிரிப்புடன் வலம் வரும் அவரைப் பார்த்தால் பயமாகத்தான் இருக்கிறது. அதுவும், களவுபோன நகையில் கொஞ்சம் “எடுத்து வைத்திருக்கும்” போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டி, நகையை வாங்குவதாகட்டும், அதையும் உரியவரிடம் தராமல் ஆட்டையைப் போடுவதாகட்டும். சிறப்பான நடிப்பு.
சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் அனைத்தும் தூள் கிளப்புகிறது. ஆட்டம் போட வைக்கும் அதிரடியான இசை.. பின்னணி இசையும் படத்தின் ஆக்ஷன் மூடை எகிற வைக்கிறது. ஒவ்வொரு சீனுக்கும் தேவையான ‘ஹைப்’பை கச்சிதமாகக் கொடுத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு, பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கிறார். காட்சிகளில் இருக்கும் அந்த பிரம்மாண்டமும், கருப்புசாமியின் பிம்பத்தைச் செதுக்கிய விதமும் டாப்!
ஆர். கலைவாணனின் எடிட்டிங் கச்சிதம்தான். ஆனால் நீளமான சண்டைக் காட்சிகளை குறைத்திருக்கலாம்.
நடிப்பில் மட்டுமின்றி இயக்கத்திலும் மிரட்டி இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. வழக்கமான தனது காமெடி ரூட்டை விட்டுவிட்டு, சீரியஸான ‘டிவைன்’ சப்ஜெக்ட்டை கையில் எடுத்து ஜெயித்திருக்கிறார்.
“கருப்பு… அநீதியை அழிக்கும் நெருப்பு!” என்கிற பழைய கான்செப்ட்தான் என்றாலும், பொது விசயத்துடன் இணைத்து, பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ், அதிரடி இசை.. மாஸ் ஹீரோ, ஹீரோயின் என கலந்து ரசிக்க வைத்து செம ட்ரீட் கொடுத்திருக்கிறார்!


