அழுத்தமான காதல், உருகவைக்கும் க்ளைமாக்ஸுடன் கழுகு-2!

0

 503 total views,  1 views today

2012ல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சத்யசிவா.. இடையில் சில படங்களுக்கு பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.. முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி என அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் என முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களும் இந்த படத்தில் உடன் பயணிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

கழுகு முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பாக அந்த படத்தின் கிளைமாக்ஸ்.. இதனாலேயே இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ‘கழுகு 2’ படம் எப்படி உருவாகி இருக்கிறது என்பது பற்றி படம் பார்க்கப் போகும் ரசிகர்களுக்கு லேசாக ஒரு முன்னோட்டம் காட்டுகிறார் இயக்குனர் சத்யசிவா..

“கழுகு படம் போலவே இந்தப் படத்தின் கதையும் முழுக்க முழுக்க காட்டில் நடக்கும் கதைதான்.. கழுகுக்கு சமமான விஷயம் இந்தப் படத்திலும் இருக்கிறது இரண்டுக்குமே காடு என்பது பொதுவான அம்சமாக இருந்ததால் இந்த படத்திற்கு கழுகு-2 என்கிற டைட்டில் பொருத்தமானதாக இருக்கும் என முடிவு செய்தோம். அதேசமயம் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காமெடியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரில்லர் படம் என்று ‘கழுகு-2’வை சொல்லலாம்..

மீண்டும் கிருஷ்ணா, பிந்து மாதவி என எனக்கு நன்கு அறிமுகமான நட்சத்திரங்கள் என்பதால் படப்பிடிப்பில் எந்தவித சங்கடங்களும் ஏற்படவில்லை. கழுகு படத்தில் அறிமுகமான அதே பிந்துமாதவி தான் இப்போதும்.. எந்தவித மாற்றமும் இத்தனை வருடங்களில் அவரிடம் ஏற்படவில்லை.. கழுகு படம் இயக்கும்போது எனக்கு புதியவராக இருந்த கிருஷ்ணா இப்போது கிட்டத்தட்ட உறவினர் போல மாறிவிட்டார்..

அது மட்டுமல்ல இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கருக்கும், காளிவெங்கட்டுக்கும் மிக அழுத்தமான கதாபாத்திரங்கள்.. இருவரும் சிறந்த நடிகர்கள் என்பதை அவ்வளவு அழகாக நிரூபித்திருக்கிறார்கள்.. யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்திற்கு இன்னொரு புதிய வடிவத்தை கொடுத்திருக்கிறது.

என் சொந்த ஊர் மூணார்.. அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த கதையை உருவாக்கி உள்ளேன்.. ரொம்ப நாளைக்கு முன்பே உருவாக்கிய இந்த கதையை கழுகு படம் முடித்தவுடனே அடுத்து இயக்கலாம் என்று தான் தீர்மானித்திருந்தேன்.. அதற்கு இப்போதுதான் நேரம் அமைந்திருக்கிறது.. மூணார் மற்றும் அதன் அருகில் உள்ள மறையூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்..

காடுகளில் படப்பிடிப்பு நடத்துவது எப்போதுமே சவாலானது தான்.. மலைப்பாங்கான பகுதிகளில் எந்த வாகன வசதியும் இல்லாமல் மலைச்சரிவுகளில் கால்நடையாகவே ஏறியும் இறங்கியும் அட்டைகளின் கடிக்கு ஆளாகியும் ஒருவழியாக படப்பிடிப்பை சிறப்பாகவே நடத்தி முடித்தோம்.

படப்பிடிப்பு சமயத்தில் நிறைய துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தி காட்சிகளை எடுத்தோம்.. வனத்துறையின் அனுமதி பெற்று இருந்தாலும் கூட, யாரோ ஒரு சிலர் மரம் வெட்டவும் மான் வேட்டையாடவும் நாங்கள் வந்துள்ளதாக தவறாக புகார் கொடுத்து, அதனால் ஒரு நாள் முழுதும் படப்பிடிப்பு நடத்தமுடியாமல் போன நிகழ்வும் கூட நடந்தது..

கேரளாவைப் பொறுத்தவரை காடுகள் அப்படியே பாதுகாப்பாக தான் இருக்கின்றன.. அங்கு உள்ளவர்கள் காடுகள் குறித்து எந்தவித அப்டேட்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை.. ஒரு மரத்தைக்கூட, அவ்வளவு ஏன் ஒரு செடியைக்கூட வெட்டுவதற்கு அவர்கள் அனுமதிப்பதில்லை. வனத்துறையினரும் இதில் கவனமாக இருக்கிறார்கள்.. பின்னே அங்கே மழைக்கு கேட்கவா வேண்டும்.

இந்தப்படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான செந்நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா.. அதேசமயம் இந்த படத்தின் கதை ஒரே திசையை மட்டுமே நோக்கி போகும் விஷயம் இல்லை.. ஒரு பயணம் போல வெவ்வேறு விஷயங்களை நோக்கி கதை அதன் போக்கில் பயணிக்கும்..

கழுகு படத்தைப் போல இந்த படத்திலும் அழுத்தமான ஒரு காதல் இருக்கிறது.. அதே போல மனதை உருக வைக்கும் சென்டிமென்டான கிளைமாக்ஸ் காட்சியும் இந்த படத்தில் இருக்கிறது.. இந்த படத்திற்கு அப்படிப்பட்ட கிளைமாக்ஸ் அவசியம் தேவைப்பட்டதால் மட்டுமே இடம் பெற்றுள்ளதே தவிர, வழிந்து எதையும் திணிக்கவில்லை.. இந்தக் கதையை எழுதும்போதே அப்படி ஒரு உணர்வுப்பூர்வமான கிளைமாக்ஸ் உருவாகிவிட்டது. அது மட்டுமல்ல நம் சினிமாவை பொறுத்தவரை என்னதான் நகைச்சுவையுடன் படங்களை நகர்த்தினாலும் இறுதியில் சென்டிமெண்ட் கலந்த ஒரு கிளைமாக்ஸ் கொடுக்கும்போதுதான் ரசிகர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிச்சயம் ‘கழுகு 2’, படம் பார்த்துவிட்டு வெளியே செல்பவர்களிடம் ஒரு பாதிப்பை உருவாக்கும்..” என உறுதியுடன் கூறுகிறார் சத்யசிவா.

மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் வரும் ஆக-1ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடுகிறது.

Share.

Comments are closed.