பாதி எரிந்த நிலையில் கிடக்கும் பிரேதம் குறித்து போலீஸ் விசாரணை செய்வதில் துவங்கும் கொலைகாரன் திரைப்படம், துவக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பு சற்றும் குறையாமல் பயணப்படுகிறது. கொலை செய்யப்பட்டவன் யார், அவனை யார், எதற்காக கொலை செய்தார் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறரார் அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்.
அடுக்ககம் ஒன்றில் குடியிருக்கும் ஆஷிமா நார்வல், அவரது தாயார் சீதா ஆகியோர்மீது போலீஸ் புலனாய்வு அதிகாரி அர்ஜுனின் சந்தேகப் பார்வை விழுகிறது. இவர்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் வசிக்கும் விஜய் ஆன்டனியும் போலீஸ் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுகிறார்.
விஜய் ஆன்டனி நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா கொலை எதற்காக நடந்தது என்று மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக பின்பாதியில் சுவராஸ்யமான முறையில் அவிழ்க்கப்படுகின்றன.
அளவெடுத்து தைத்த உடைபோல் அப்படியே பொருந்தும் பாத்திரத்தில் அழகாகப் பொருந்துகிறார் விஜய் ஆன்டனி. சந்தேகக் கண்களுடன் போலீஸ் விசாரிக்கும்போதும் சரி, கொலை செய்ததாக ஒத்துக்கொண்டு தானாகச் சென்று சரணடையும்போதும் சரி முகபாவங்களில் விஜய் ஆன்டனி வித்தியாசம் காட்டாதுபோல் நமக்குத் தோன்றினாலும், அந்த கதாபாத்திரம் அப்படித்தான் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டால் ரசித்துப் பார்க்கலாம்.
ஆயினும் வழக்கம்போல் காதல் காட்சிகளில் சோபிக்காமல், டிபிகல் விஜய் ஆன்டனி படமாக சோதனை செய்கிறார் வி.ஆ.
நடிப்பதற்கு நல்ல வாய்ப்பும் பலமான வசனங்களும் அமைந்த காரணத்தால் ஒப்பீட்டளவில் விஜய் ஆன்டனி வேடத்தைவிட அர்ஜுன் வேடம் ஒரு படி மேலே அமைந்திருக்கிறது என்றால் மிகையாகாது.
இந்த பிளாட்டில் ஒரு சிசி டிவிகூட இல்லை என்று ஒரு போலீஸ்காரர் கேட்க, அதற்கு அர்ஜுன் அவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியிலேயே சிசி டிவி இல்லை என்ற அலட்டிக்கொள்ளாமல் போகிற போக்கில் பதில் சொல்லும் காட்சி அட்டகாசம்.
நாயகி ஆஷிமா நார்வலுக்கு இரண்டு வேடங்கள் என்றாலும் காலேஅரைக்கால் வேடத்தில்கூட நடிக்க வாய்ப்பு இல்லை. சஸ்பென்ஸ் த்ரில்லர் வேட நாயகிகள் சந்தித்தே தீரவேண்டிய சாபக்கேடு இது.
ஹைதராபாத்தில் பார்த்த காவல்துறை அதிகாரி பணியை விட்டுவிட்டு வந்து கட்டுமான நிறுவனத்தில் விஜய் ஆன்டனி பணியாற்றுவதற்கு வலுவான காரணம் எதுவும் படத்தில் சொல்லப்படுவதில்லை என்பதைக்கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடலாம் என்றாலும், எதிர்வீட்டில் வசிக்கும் நாயகி வீட்டில் அவருக்கே தெரியாமல் ஒலி வாங்கி கருவையை மறைத்து வைத்து ஒட்டு கேட்பதற்கு கண்டிப்பாக காரணம் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
படத்திற்கு மிகப் பெரிய பலம் திரைக்கதையும் சைமன் கே.கிங்கின் பின்னணி இசையும்தான். குறிப்பாக படத்திற்கான தீம் ம்யூசிக் காதுகளில் ஓலித்துக் கொண்டே இருக்கிறது.
முகேஷின் ஒளிப்பதிவும் வெகு சிறப்பாக அமைந்திருப்பது படத்துக்கு மற்றொரு கூடுதல் பலம்.
மொத்தத்தில் ரசிக்க வைக்கிறான் இந்த கொலைகாரன்.