Wednesday, November 19

கும்கி 2 _ விமர்சனம்

Loading

 

கும்கி 2 _ விமர்சனம்

மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் சிறுவன் பூமி, ஒரு நாள் பள்ளியில் இருந்து திரும்பும்போது பள்ளத்தில் சிக்கிக்கொண்ட யானை குட்டி ஒன்றை காப்பாற்றுகிறான்.

அப்போது முதல் அந்த யானைக் குட்டியுடன் சொந்த சகோதரனைப் போல் நெருக்கமாக பழகி வருகிறான்.

சாராயம் விற்கும் தாயார், மற்றும் தாயார் கணவனாக தன்னுடன் ‘சேர்த்துக் கொண்ட நபர்’ ஆகியோருடன் வசித்து வரும் பூமிக்கு ஒரே ஆறுதல் அந்த யானை குட்டி தான்.

யானை சற்றே வளர்ந்த பிறகு வியாபாரி ஒருவருக்கு அந்த யானையை விற்று விடுகிறார் பூமியின் தாயார்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வரும் பூமி, தன் செல்ல யானையைத் தேடி அலைந்து ஒரு வழியாக கண்டுபிடித்து விடுகிறார்.

ஆனால் இப்போது வேறு ஒரு பெரிய பிரச்னை முளைத்திருக்கிறது.

அரசியல்வாதிகள் சிலர் பதவி சுகத்துக்கு ஆசைப்பட்டு அந்த யானையை பலி கொடுக்க திட்டமிடுகின்றனர்.

யானையை விற்பதற்கு ஒத்துக்கொண்டு பணத்தை வாங்கிக் கொண்ட வியாபாரி, யானையை பலியிடும் இடத்திற்கு அனுப்புவதற்கு முன்பாகவே பூமி அங்கு சென்று யானையை அழைத்து வந்து விடுகிறார்.

இந்த சதித்திட்டங்களை எல்லாம் முறியடித்து யானையை பூமி காப்பாற்றுகிறாரா இல்லையா என்பது தான் கும்கி 2 படத்தின் கதை.

பூமி வேடத்தில் நாயகனாக நடித்திருக்கும் மதி அறிமுக நடிகர் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயற்கையாகவும் திறம்படவும் நடித்திருக்கிறார்.

யானை திடீரென காணாமல் போகும்போது ஏற்படும் இழப்பை தன் பதைபதைப்பான நடிப்பால் வெளிப்படுத்தி நம் கவனம் ஈர்க்கிறார்.

கதாநாயகி ஷிரதா ராவுக்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை.

வனத்துறை அதிகாரியாக வரும் அர்ஜுன் தாஸ் அமைதியாக இருந்து காணாமல் போன யானையை கண்டுபிடிக்கும் காரியவாதியாக வெகு சிறப்பாக நடித்திருக்கிறார்.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போல் பூமியிடம் நண்பனைப் போல நடித்து யானையை பலியிட நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு உதவும் நயவஞ்சக நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

குறிப்பாக யானையிடம் இருந்து மைக்ரோ சிப்பை அகற்றும் போது உண்மையில் அர்ஜுன் தாஸ் என்ன செய்யப் போகிறார் என்று ஒரு கணம் நமக்கே திகைப்பு ஏற்படும்.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் சுகுமாரின் ஒளிப்பதிவு தான்.

பறவை பார்வையில் நீர்வீழ்ச்சியின் அழகை படம் பிடித்திருப்பது ஆங்கில படங்களுக்கு நிகராக இருக்கிறது.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசை பரவாயில்லை ரகம்தான்.

யானையைத் தேடும் படலத்தில் பூமிக்கு துணையாக வரும் நண்பனின் நகைச்சுவை சில காட்சிகளில் மட்டுமே சிரிப்பை வரவழைக்கிறது.

கும்கி படத்தின் முதல் பாகத்தை ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது என்றாலும் அந்தப் படத்தை மறந்து விட்டு புதிதாக கும்கி2 படத்தைப் பார்த்தால் வெகுவாகவே ரசிக்கலாம்.