Thursday, April 16

பரிசு _ விமர்சனம்

Loading

பரிசு _ விமர்சனம்

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஆடுகளம் நரேனின் மகள் ஜான்விகா தந்தையைப் போலவே  நாட்டுப் பற்று மிக்கவராகவும், ராணுவத்தில் சேர்ந்து தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர் ஆகவும் இருக்கிறார்.

இதற்காக தந்தையின் உதவியுடன் துப்பாக்கிச் சூடும் பயிற்சியில் இருந்து அனைத்து வகை பயிற்சிகளையும் பெற்று அதற்கு தகுதியானவராகவும் தன்னை உருவாக்கிக் கொள்கிறார்.

கல்லூரியில் படிக்கும் ஜான்விகாவுக்கு உடன் படிக்கும் மாணவர்கள் சிலர் காதல் வலை விரிக்க,  அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறார் ஜான்விகா.

வேளாண்மையில் ஈடுபாடு கொண்ட ஜான்விகாவை லேடி நம்மாழ்வார் என்று அவரது தோழிகளும் செல்லமாக கிண்டல் செய்வது உண்டு.

ஒரு நாள் கார் ஒன்றின் மீது லாரி மோதி விட்டு செல்லும் ‘ஹிட் அண்ட் ரன்’  சம்பவத்தை நேரில் பார்க்கும் ஜான்விகா, அடிபட்டு காரில் இருந்தவரை காப்பாற்றுகிறார்.

அத்துடன் விபத்துக்கு காரணமான குற்றவாளிகளை போலீஸ் கண்டுபிடிக்க உதவியாகவும் இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து சதிகாரர்கள் ஜான்விகாவை கடத்துகிறார்கள்.

அவர்களிடமிருந்து ஜான்விகா எப்படி தப்பித்தார்?

தன் லட்சியத்தை எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதுதான் பரிசு படத்தின் கதை.

பெண் மையக் கதாபாத்திரத்தில் உருவான பரிசு, நயன்தாரா மாதிரி லேடி சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டிய பாத்திரம் என்றால் மிகையாகாது.

இந்த ஜான்வி வேடத்தில் நடித்திருக்கும் ஜான்விகா சண்டைக் காட்சிகளில் கூட டூப் போடாமல் நடித்து அசத்தி இருக்கிறார்.

பெண்கள் மனதில் நம்பிக்கை நாற்றுகளை விதைக்கும் வகையில் கதைகளையும் காட்சி அமைப்புகளையும் உருவாக்கிய இயக்குனர் கலா அல்லூரி பாராட்டுக்குரியவர்.

சங்கர் செல்வராஜின் ஒளிப்பதிவும் ராஜூஷ் கே இசையில் உருவான பாடல்களும் படத்துக்கு வலு சேர்த்து இயக்குனருக்கு துணை நிற்கின்றன.

கல்லூரி மாணவர் ஒருவர் “ஜான்… ஜான்…” என்று அழைத்து நாயகியை காதலிப்பது ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.

இரண்டு பாடல் காட்சிகளிலும் அருமையாக நடனமாடி கவனம் ஈர்த்திருக்கிறார் இந்த புதுமுகம்.

பழம்பெரும் நடிகை சச்சுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டப்பிங் வாய்ஸ் பொருத்தமாக இல்லை.

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை அவ்வப்போது வசனங்களில் வெளிப்படுத்தி டாக்குமென்ட்ரி பாணியில் ஓரிரு காட்சிகள் அமைந்திருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

இதுபோன்ற ஓரிரு சிறு குறைகள் இருந்தாலும், நல்ல கதையில் நாட்டுப்பற்றை முதன்மை ஆக்கி,  வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் பரிசு திரைப்படம் பாராட்டுக்குரிய ஒரு நல்ல முயற்சி என்பதில் ஐயமில்லை.

அனைவரும் கண்டு ரசிக்கத்தக்க தரமான படம் இது.