![]()
கொடைக்கானலில் விளையும் ஒருவகை போதை காளான் பற்றி அவ்வப்போது செய்தித்தாள்களில் வரும் செய்திகளை படித்து இருக்கலாம்.
இந்த போதைக் காளானை வைத்து உருவான முழு நீள திரைப்படம் தான் வட்டக்கானல்.
இங்கு விளையும் போதை காளானை உள்நாட்டு சந்தையிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யும் போதை மாஃபியா ஆர் கே சுரேஷ்.
திருமணமே செய்து கொள்ளாத சுரேஷுக்கு மூன்று வளர்ப்பு மகன்கள்.
இளைஞர்களான இந்த மூவரும் தான் தந்தையின் போதை சாம்ராஜ்யம் வளர துணை நிற்கின்றனர்.
இதே போதை காளான் வியாபாரத்தில் மற்றொரு பெரும் புள்ளியான ஆடுகளம் நரேனை சுரேஷ் கொலை செய்து விடுகிறார்.
இதனால் அவரது மனைவி வித்யா பிரதீப் ஆர் கே சுரேஷை கொல்ல தருணம் பார்த்து காத்து நிற்கிறார்.
சிறுவயதில் காரில் தந்தையுடன் இருந்தபோது, மரம் விழுந்து தன் தந்தை இறந்ததை நேரடியாக பார்த்து அதிர்ச்சி அடைந்ததால் வாய் பேச்சு வர முடியாமல் போனவர் மீனாட்சி கோவிந்தராஜன். அவருக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தையும் கைப்பற்ற திட்டமிடுகிறார் ஆர் கே சுரேஷ். இந்த நிலையில் ஆர்கே சுரேஷின் மகன்களில் ஒருவரான துருவன் மனோவுக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் காதல் மலர்கிறது. இந்தக் காதல் வெற்றி அடைந்ததா?
ஆர் கே சுரேஷ் 200 ஏக்கர் நிலத்தை கைப்பற்றினாரா இல்லையா? என்பதுதான் வட்டக்கானல் படத்தின் கதை.
வாய் பேச முடியாத பெண்ணாக படம் முழுவதும் வரும் மீனாட்சி கோவிந்தராஜனுக்கு முழுக்க முழுக்க முக பாவங்களில் தன் மனதில் இருப்பதை புரிய வைக்கும் அருமையான வேடம்.
இதை கொஞ்சமும் குறைவின்றி நிறைவாகவே செய்திருக்கிறார் மீனாட்சி கோவிந்தராஜன்.
பின்னணி பாடகர் மனோ சில நிமிடங்களே வந்தாலும் நாயகியின் அப்பா வேடத்தை அழகாக செய்து மனதில் நிறைகிறார்.
இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல் மலைப்பகுதியின் அழகை அப்படியே அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது எம் ஏ ஆனந்தின் கேமரா.
அப்பா இறந்து போன காரை ஆர்கே சுரேஷ் மகனிடம் இருந்து வாங்க நினைக்கும் நாயகி மீனாட்சி கோவிந்தராஜன், அவரை காதலிக்க ஆரம்பித்த பிறகும் காரைப் பற்றி கேட்காமல் பேசாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.
மாரிஸ் விஜய் இசையில் உருவான பாடல்கள் சுமார் ரகம்தான்.
போதை காளான் வியாபாரம் என்ற புதுமையான விஷயத்தை கதை கருவாக எடுத்த இயக்குனர் பித்தாக் புகழேந்தி, அதற்கு விறுவிறுப்பான முறையில் திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் சிறப்பான படமாக உருவாகி இருக்கும் இந்த வட்டக்கானல்


