![]()
மக்கள் தலைவா விமர்சனம்
கிராமத்தில் வேலை வெட்டி எதுவும் இல்லாமல், வாய்ச்சவடாலில் வாழ்க்கையை ஓட்டி வரும் ரவி மரியா, தன்னைப் பெற்றவர்களுக்கு பாரமாக இருந்தாலும் நண்பர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிகள் செய்பவராக இருக்கிறார்.
சமூக சேவை என்ற பெயரில் பொது பிரச்சனைகளில் களமிறங்கி பெரிய அளவில் காசு பணம் பார்ப்பது ரவி மரியா அண்ட் கோவின் வேலையாகவே இருக்கிறது.
பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான தொழிலதிபர் ராதா ரவி மூலம் ரவி மரியா வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பம் ஏற்படுகிறது.
ஏராளமான பொருட் செலவில் ரவி மரியாவை கதாநாயகனாக வைத்து திரைப்படம் ஒன்று தயாரித்து வெற்றி பெற வைக்கும் ராதாரவி, அடுத்ததாக மரியாவை வைத்து புதிதாக கட்சி ஒன்றை ஆரம்பிக்கிறார்.
கட்சி அரசியல் அரங்கில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி ஆட்சியைப் பிடிக்கிறது இந்த புதிய கட்சி.
ராதாரவி யார் ?அவர் எதற்காக ரவி மரியாவை தேர்வு செய்து திரைப்படத்தில் நடிக்க வைத்ததுடன் அரசியல் கட்சியையும் தொடங்க வைக்கிறார்? என்பதுதான் மக்கள் தலைவா படத்தின் அடித்தளமாக அமைந்த கதை.
அரசியல் நையாண்டிப் படமாக உருவாகியிருக்கும் மக்கள் தலைவா பல வசனங்களில் அதிரடியான விமர்சனங்களையும் வைக்கிறது.
உதாரணமாக ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று ஆரம்பித்த வாக்குறுதி பின்னர் இலவச தொலைக்காட்சி வாஷிங் மெஷின் மிக்ஸி என்று இப்போது பணம் என்ற அளவில் வளர்ந்து விட்டது என்று வரும் வசனம் திரையரங்குகளில் கைத்தட்டல் பெறுகிறது.
கதையின் நாயகனாக வரும் ரவி மரியா ஏற்ற பாத்திரத்தை திறம்பட நடித்து கதையின் நாயகனாக நடிக்க தான் தகுதியான ஆள்தான் என நிரூபித்திருக்கிறார்.
நிஜ அரசியல்வாதிகளான பழ கருப்பையா நாஞ்கில் சம்பத் போன்றவர்கள் பேசியாருக்கும் பல வசனங்கள் அரங்கையே அதிர வைக்கின்றன.
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக வாங்கும் அரசியலைக் கூட மக்கள் தலைவா விட்டு வைக்கவில்லை.
கார்த்திக் எஸ் நாயகன் ஒளிப்பதிவு மிக இயல்பாக அமைந்திருக்கிறது .
பாடல் மற்றும் இசையில் பாஸ் மார்க் பெற்று விடுகிறார் இசையமைப்பாளர் துளசிராமன்.
முதல் படத்திலிருந்து மிகத் துணிச்சலான அரசியல் கருத்துக்களை முன்வைத்த இயக்குனர் ராம்தேவ் அவர்களுக்கு தனியாக ஒரு பாராட்டு தெரிவிக்கலாம்.
நாடக பாணியில் அமைந்த காட்சிகளை தவிர்த்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருந்தால் மக்கள் தலைவா எல்லோரும் கொண்டாடப்படும் படமாக அமைந்திருக்கும்.
மதிப்பெண் 3/5


