வளர்ந்து வரும் இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ரவிப்ரியன்!

0

 48 total views,  1 views today

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஹை ஃபை படத்துக்கு இசையமைத்திருக்கும் ஆர்.எஸ்.ரவிப்ரியன் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்த இசையமைப்பாளர்.
இசையும் கவியும் என்ற யூட்யூப் சேனலில் சுமார் 130 பாடல்களுக்கு மேல் இசையமைத்து பதிவேற்றம் செய்திருக்கிறரா். இப்பாடல்கள் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. சமீபத்தில் இசையமைப்பாளர் .ஆர்.எஸ்.ரவிப்பிரியனை சந்தித்து பேசியதிலிருந்து சில பகுதிகள்….
“என் தாத்தா பாலகிருஷ்ணன் ஓர் இசைக்கலைஞர். குடும்பமே இசைப் பின்னணியில் இருந்ததால் சிறு வயதிலேயே எனக்கு இசையில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நான் தேவாரம் பாடல்களைப் பாடுவேன். தொடர்ந்து நானே பாடல்களை கம்போஸ் செய்ய ஆரம்பித்தேன்.
நான் இசையமைத்த “ஓ வண்ண வெண்ணிலவே…”  என்ற பாடல் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. கனடா நாட்டிலுள்ள டொராண்டாவில்தான் படித்தேன். அங்கிருந்து ஒரு முறை வந்தபோது ‘காற்று’ என்ற சுயாதீன இசை ஆல்பத்தை உருவாக்கினேன்.
இருபத்தி இரண்டு பின்னணி பாடகர்கள் இதில் பங்கெடுத்து பாடியிருந்தனர். இந்த ஆல்பத்தில் பா விஜய், சினேகன், கலைக்குமார் ஆகியோர் பதினொரு பாடல்கள் எழுதியிருந்தார்கள்.
அமுல்பேபி மாதிரி இருக்கும் இவர் என்ன சாதித்துவிடப்போகிறார் என்று சிலர் என்னை ஏளமான பேசவே, என்னை நான் பல விதங்களிலும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். எனவே ‘காற்று’ ஆல்பத்தில் நானும் மூன்று பாடல்கள் எழுதியருந்தேன். இந்தப் பாடல்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தன.
தொடர்ந்து ஜீவரத்னம் இயக்கத்தில் ‘மேகம்’ என்ற படத்துக்கு இசையமைத்தேன். 2009ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் 100 நாள்கள் ஓடியது.
நான் இசையமைத்த ‘சாந்தன்’ என்ற படம் வணிக ரீதியில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் என் பாடல்கள் பேசப்பட்டன. பல நாடுகளில் இருக்கும் பாடகர்களை ஆன்லைன் மூலமே ஒருங்கிணைத்து இந்தப்படத்தின் பாடல்களை நான் உருவாக்கியிருந்தேன்.
தற்போது என் இசையில் வெளிவர இருக்கும் ‘ஹை ஃபை’ படத்தில் பால்கி எழுதி, அனல் ஆகாஷ் பாடிய பாடல் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என நம்புகிறேன். படத்தின் காட்சி என்னவென்றால் பெரியவர் ஒருவரை வீட்டைவிட்டு வெளியேற்றி விடுகின்றனர். அப்போது நிலவும் அந்த இறுக்கமான சூழலுக்கு உருவான சோகப் பாட்டு இது.
காட்சியைப் பார்க்காமல் பாடலை மட்டும் கேட்டால் தாத்தா தன் காதலியை இழந்த சோகத்தையும் இந்தப் பாடல் வெளிப்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என்று படத்தின் இயக்குநர் கூறினார். இது புதுமையாக இருந்தாலும், சவால் மிக்கதாக இருந்தது. இயக்குநர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த பாடலை உருவாக்கி அவரை நான் திருப்திபடுத்தியிருக்கிறேன்.
இப்போது ‘மதிவதம்’, ‘சூரியனும் சூரிய காந்தியும்’ , ‘தினசரி மூன்று காட்சிகள்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். இப்படங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என நம்புகிறேன்.
மனதில் பதியும் லகுவான மெட்டுடன், நல்ல பாடல் வரிகள் அமைந்தால்தான் பாடல் ஹிட் ஆகும். எனது தோழி கவிஞர் செண்பா எனது மெட்டுகளுக்கு நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அவரது பாடல்களுக்கும் நான் மெட்டமைத்து இசை கோர்த்திருக்கிறேன்.
இவ்வாறு நாங்கள் உருவாக்கிய 130க்கும் மேற்பட்ட பாடல்களைத்தான் ‘இசையும் கவியும்’ என்ற யூட்யுப் சேனலிலும், முக நூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்து வருகிறோம். இவற்றுக்கு கிடைக்கும் வரவேற்புதான் எங்களை மேலும் உற்சாகமடையச் செய்து, இசையமைப்பாளராகவும், கவிஞராகவும் எங்கள் பணியை புதிய உத்வேகத்துடன் செய்ய வைக்கிறது என்கிறார் இசையமைப்பாளர் ஆர்.எஸ்..ரவிப்ரியன்.

 

Share.

Comments are closed.