![]()

பேரன்பும் பெருங்கோபமும் _ விமர்சனம்
அரசு மருத்துவமனையில் குழந்தை ஒன்று களவு போக, அந்த மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வரும் விஜித் பச்சானை காவல்துறை கைது செய்கிறது.
அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தும் போது சுமார் 25 வருடங்களுக்கு முன்பு நடந்த பல கொடூரமான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
ஆனால் காவல்துறை இந்த விசாரணையை மிக மிக ரகசியமாகவே நடத்துகிறது.
ஜாதி வெறியால் ஆட்டம் போடும் அமைச்சர் மைம் கோபி, அவருடைய வலது கரம் அருள் தாஸ், இருவரும் ஜாதி தலைவர் ஒருவரின் துணையோடு ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகின்றனர்.
காவல்துறையின் புலன் விசாரணை விரிவடைந்து செல்லும்போது விஜித் பச்சான் தானாகவே கைதாகி சிறைச்சாலைக்குள் வந்திருப்பது தெரிய வருகிறது .
இப்போது சிறையில் இருக்கும் விஜி தச்சான் தன் தரப்பு ஆட்டத்தை ஆரம்பிக்கும் போது அமைச்சர் மைம் கோபியும் அவரது வலதுகரமான அருள் தாஸும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
மேலும் ஜாதி வெறி பிடித்து அலையும் அமைச்சர் மற்றும் ஜாதி தலைவர் ஒருவரின் தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு செய்தி ஒன்றை விஜித் பச்சான் தொலைபேசியில் சொல்லி விடுகிறார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடூரம் என்ன?
விஜித் பச்சான் சொன்ன என்ன செய்திக்கு அமைச்சரும் ஜாதி தலைவரும் தூக்கம் தொலைத்து நிற்கின்றார்கள் என்பது படத்தின் பிற்பகுதி.
கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் விஜய் பச்சானுக்கு இதுதான் முதல் படமாம். ஆனால் அவரது நடிப்பு அப்படி தெரியவில்லை.
பல படங்களில் நாயகனாக நடித்த அனுபவப்பட்டவரைப் போல் மிகத் திறம்பட நடித்திருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக வரும் ஷாலிக்கும் உணர்ச்சிகரமாக நடிக்க நிறையவே வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவற்றை சரியாகப் பயன்படுத்தி தன் திறமையை நிரூபித்திருக்கிறார் புதுமுகம் ஷாலி.
குறிப்பாக தன்னைக் கொல்ல வரும் மாமியாரிடமும் அருள்தாஸிடமும் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடும் காட்சியில் நெஞ்சை நெகிழ வைக்கிறார்.
இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்தை இன்னும் உயரத்துக்கு எடுத்துச் செல்கின்றன.
ஜே பி தினேஷ்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
ஆணவக் கொலை தான் படத்துக்கு ஆதாரம் என்றாலும் அதை வேறு ஒரு புதிய கோணத்தில் சொல்லி இருப்பதன் மூலம் கவனத்தை ஈர்த்து இருக்கிறார் இயக்குனர் சிவப்பிரகாசம்.

