Thursday, October 29

மெட்ராஸ் மேட்னி _ விமர்சனம்

Loading

மெட்ராஸ் மேட்னி _ விமர்சனம்

எழுத்தாளரான சத்யராஜ் நடுத்தர குடும்பம் ஒன்றின் கதையை எழுத திட்டமிடுகிறார்.
இதற்காக அவர் ஆட்டோ டிரைவர் காளி வெங்கட்டின் குடும்பத்தை தேர்வு செய்கிறார்.
காளி வெங்கட்டுக்கு. நடுத்தர வர்க்கத்திற்குறுய சிற்சில இயல்பான பிரச்சனைகள் இருந்தாலும், மனைவி ஷெல்லி, மகள் ரோஷினி மற்றும் மகன் விஷ்வா ஆகியோருடன் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துகிறார்.

 மனைவி, மகள், மகன் மட்டுமே தனது உலகம் என்று வாழும் காளி வெங்கட், தன் குடும்பத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காதவர்.

பெங்களூரில் பணியாற்றும் மகள் ரோஷினி திருமணத்துக்காக தன் பெற்றோர் தேர்வு செய்த ஒரு வரனை சந்திக்கச் செல்கிறார்.

இருவரும் தனியாக சந்தித்து பேசும் முதல் கட்ட பேச்சு வார்த்தை சுமூகமாக இருந்தாலும்,  அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போது ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.

ரோஷினி தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை சுட்டிக்காட்டி பையனின் தாயார் பேசுவதை ரோஷினியால் தாங்க முடியவில்லை.

அந்தப் பையனை நிராகரித்து விட்டு ரோஷினி திரும்புகிறார்.

காளி வெங்கட்டின் மகன் விஷ்வா வளர்க்கும் நாய், மின்சாரம் தாக்கி இறந்து விடுகிறது.
அடிக்கடி மின்தடை ஏற்படுவதை சுட்டிக்காட்டி மின்வாரிய அலுவலகத்தில் கேட்கப் போனபோது மின்வாரிய செயற்பொறியாளருடன் பிரச்சனை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை செல்ல நேரிடுகிறது.

இந்தப் பிரச்சனை எப்படி தீர்த்து வைக்கப்படுகிறது?
ரோஷினி தன் வாழ்க்கை துணையாக யாரை தேர்வு செய்கிறார் என்பது படத்தின் இறுதிப் பகுதி.

எழுத்தாளரான சத்தியராஜ் இந்த படத்தின் கதையை சொல்வது போல் அமைந்த யுக்தி புதிதாக இருந்தாலும், ஆரம்பத்தில் அது சற்று அலுப்பு தட்டுகிறது.
ஆனால் போகப் போக இந்த கதைக்கு இப்படிப்பட்ட திரைக்கதை தான் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தை நமக்கு வர வைத்து விடுகிறார் இயக்குனர் கார்த்திகேயன் மணி.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டே படம் முழுக்க மெலிதாக இழையோடும் நகைச்சுவைதான்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலுக்கு டூப் போட்டு அதிவேகமாக கார் ஓட்டியதாக சொல்லி, தற்போது கார் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வரும் ஜார்ஜ் மரியன் காமெடி வேறு லெவல்.

அரசியல்வாதியாக வரும் கீதா கைலாசம் செய்யும் அலப்பறைகளும் அமர்க்களமான நகைச்சுவை.

ஜி கே ஆனந்தின் தரமான ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் கேசி பாலசாரங்கள் தன் பணியை நிறைவாகவே செய்திருக்கிறார்.

கதையின் நாயகனாக வரும் காளி வெங்கட் பாத்திரத்தை உள்வாங்கி திரையில் வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.

அம்மா அப்பா இல்லாமல் தனியாக தான் பெற்ற மகளை மணமகன் வீட்டாருடன் பேச அனுமதித்தது குறித்து புழுங்கித் தவித்தபடி தொலைபேசியில் விசாரிக்கும் போது நெகிழ்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார் காளி வெங்கட்.

காளி வெங்கட்டின் திரை வாழ்வில் மெட்ராஸ் மேட்னி படம் மிக முக்கியமானது என்பதில் ஐயமில்லை.

குடும்பத்துடன் சென்று பார்க்கத் தக்க தரமான திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.

மதிப்பெண் 4/5