ஐந்தாம் வேதம் _ விமர்சனம்
அக்டோபர் 25ஆம் தேதி முதல் ஜி5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய இணைய தொடர் ஐந்தாம் வேதம்.
சாய் தன்ஷிகா, தேவதர்ஷினி, சந்தோஷ் பிரதாப், பொன்வண்ணன் உட்பட பலர் நடித்திருக்கும் இத்தொடரை அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில் அபிராமி ராமநாதன் மற்றும் நல்லம்மை ராமநாதன் தயாரித்திருக்கிறார்கள்.
‘மர்மதேசம்’ தொடர் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் நாகா இத்தொடரை இயக்கியிருக்கிறார். தன் தாயின் அஸ்தியை கரைக்க காசி செல்லும் சாய் தன்ஷிகாவிடம் அங்குள்ள சாமியார் ஒருவர் ஒரு பெட்டியை கொடுத்து அதை தமிழகத்தின் தென்கோடியில் உள்ள அய்யங்கார் புரம் என்ற ஊரில் உள்ள கோவிலில் கொடுக்கச் சொல்கிறார். இதை சொல்லி முடித்ததும் மர்மமான முறையில் இறந்து போகிறார் அந்த சாமியார்.
தன்ஷிகாவுக்கு இந்த வேலையை செய்ய இஷ்டமில்லை என்பதால் அவர் தொடர்ந்து தனது பணியின் நிமித்தமாக திருவனந்தபுரம் செல்ல திட்டமிடுகிறார்.
பெட்டியை கோவிலில் ஒப்படைக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள எவ்வளவோ திட்டமிட்டாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அந்தப் பெட்டியை திரும்பத் திரும்ப தன்ஷிகாவிடம் கொண்டு வருகின்றன.
திட்டமிட்டபடி திருவனந்தபுரம் செல்வதும் தடைபட்டு ஏதோ ஒரு சக்தி அவரை ஐயங்கார் புரம் கோவிலுக்கு வரவழைத்து விடுகிறது.
தொடர்ந்து பல அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. பெட்டியை கோவில் அர்ச்சகரிடம் தன்ஷிகா கொடுக்க அப்பட்டியைப் பற்றி தெரிந்த அவர், அதை வாங்க மறுக்கிறார்.
அய்யங்கார்புரத்திலிருந்து வெளியேற முயற்சிக்கும் தன்ஷிகாவின் தொடர் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன. இந்தப் பெட்டியை கைப்பற்ற வேறு சிலரும் முயற்சி செய்கின்றனர்.
அந்தப் பெட்டியில் உள்ள மர்மம் என்ன என்பதை விறுவிறுப்பாக விளக்குவது தான் ஐந்தாம் வேதம் இணைய தொடர். ஏற்கனவே இருக்கும் நான்கு வேதங்களை பற்றி அநேகமாக நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஐந்தாவது வேதத்தைப் பற்றி இதில் கற்பனை செய்திருக்கிறார் இயக்குனர் நாகா.
இதிகாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆன்மீக கதை என்றாலும், இதில் தற்கால செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படும் ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் இணைத்திருக்கிறார் நாகா.
இந்த இணைய தொடரின் மிகப்பெரிய பலம் ஸ்ரீனிவாசன் தேவராஜனின் கண்ணைக் கவரும் ஒளிப்பதிவுதான். துவக்கத்தில் வரும் கங்கை காட்சிகள், அப்பகுதியில் நாமே உலவி விட்டு வந்தது போல் இருக்கிறது.
ஐயங்கார் புறம் கிராமமும் அங்குள்ள கோவில் மற்றும் கோபுரம் ஆகியவை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் படமாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பறவை பார்வையில் வரும் கோபுரம் காட்சிகள் அருமை.
ரேவாவின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது என்றால் மிகை இல்லை.
புராணம் மற்றும் ஆன்மீகத்தை விரும்பும் பார்வையாளர்களையும், சஸ்பென்ஸ் மற்றும் அமானுஷ்ய காட்சிகளை விரும்பும் பார்வையாளர்களையும் ஒருசேர திருப்தி படுத்த வேண்டும் என்ற நாகாவின் நோக்கம் நன்றாகவே நிறைவேறி இருக்கிறது.
அனைவரும் கண்டு ரசிக்கக்கூடிய தொடர் ஐந்தாம் வேதம்.