சிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது!

0

Loading


சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், அதன் தலைப்பு முக்கியத்துவம் காரணமாக ஒரு  உற்சாகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. நிச்சயமாக, சிபிராஜின் தந்தை சத்யராஜ் அவரது திரை வாழ்வில் மறக்க முடியாத ‘வால்டர் வெற்றிவேல்’ கதாபாத்திரத்தின் மூலம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும், தலைப்பு தொடர்பாக எதிர்பாராத சர்ச்சையில் இந்த படமும் சிக்கியது. தற்போது அத்தகைய பிரச்சினைகள் நீங்கி, இந்த படத்திற்கு ‘வால்டர்’ என்ற தலைப்பு கிடைத்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.
இது குறித்து தயாரிப்பாளர் பிரபு திலக் கூறும்போது, “சிபிராஜ் அவர்களின் தந்தை சத்யராஜ் சாரின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் முக்கியத்துவம் காரணமாக இந்த படத்துக்கு ‘வால்டர்’ என்று பெயரிட விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக, தலைப்பு தொடர்பான சில சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில் எல்லாம் முடிந்து தலைப்பு எங்கள் வசமானது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது, ‘வால்டர்’ படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் கோவில் நகரமான கும்பகோணத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த கிரைம் திரில்லர் திரைப்படத்தை சுவாரஸ்யமான கூறுகள் மூலம் தொகுத்துள்ளார் இயக்குனர் அன்பு. ஸ்கிரிப்ட்டை  கேட்கும்போதே ஒரு பார்வையாளனாக என்னை ஆச்சரியப்படுத்தியது. கும்பகோணத்தில் ஒரு க்ரைம் த்ரில்லரை படமாக்குவது குறித்த அவரது அடிப்படை யோசனையே எனது கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் கும்பகோணம் என்றாலே பெரும்பாலும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் மற்றும் காதல் படங்களை தான் படமாக்குவார்கள். இந்த படத்தின் இறுதி வடிவத்தை திரையில் பார்க்கும் நாளை எண்ணி உற்சாகமாக காத்திருக்கிறேன். குறிப்பாக சமுத்திரகனி சார் போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் இந்த படத்தில் இருப்பதால் அந்த ஆவல் மேலும் அதிகமாகி இருக்கிறது” என்றார்.11:11 ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் பிரபு திலக் மற்றும் ஸ்ருதி திலக் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தில் நடித்து இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கிறார். திடுக்கிடும் திருப்பங்களுடன் அமைந்த ஒரு அற்புதமான கதை என்பதை தவிர, ராட்சசன் புகழ் விக்கி வடிவமைத்த அதிரடி காட்சிகள் இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும் என்று உறுதிப்படுத்துகிறார் தயாரிப்பாளர் பிரபு திலக். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஒருவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

 
Share.

Comments are closed.