“மாநாடு சிலம்பரசனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும்” – ஒய்’ஜி.மகேந்திரன்!

0

 291 total views,  1 views today

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது மாநாடு திரைப்படம்.. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், ஒய்.ஜி,மகேந்திரன், உதயா, பிரேம்ஜி, மனோஜ் கே. பாரதி, அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், மகத் ராகவேந்திரா, டேனி, அரவிந்த் ஆகாஷ் என நட்சரத்தேர்விலேயே பிரமிக்க வைக்கிறார் வெங்கட் பிரபு.

குறிப்பாக இந்தப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தால் தான், பொருத்தமாக இருக்கும் என அவரை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர் இயக்குநர் வெங்கட் பிரபுவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும்.

நடிகர் திலகம் சிவாஜி ரஜினி, கமல் என ஒரே சமயத்தில் 3 ஜாம்பவான்களுடன் நகைச்சுவையில் கலக்கிய ஒய்.ஜி.மகேந்திரன், இப்போது சிலம்பரசன் காலகட்டத்திலும் அதே உற்சாகத்துடன் வளைய வருகிறார் என்பது ஆச்சர்யம்.

“மாநாடு” படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் பணியாற்றுவது மற்றும் மற்றும் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஒய்.ஜி.மகேந்திரன்.

“கடந்த வருடமே “மாநாடு” படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.. எனக்கு வெங்கட்பிரபுவின் படங்கள் பிடிக்கும்..

நானும் வெங்கட்பிரபுவும் நகைச்சுவை என்கிற ஒரே ஏரியாவில் பயணிப்பவர்கள் என்பதால் “மாநாடு” படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன்..

ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த வருடம் நிலவிய அசாத்திய சூழல் காரணமாக படப்பிடிப்பு சில மாதங்கள் தள்ளிப் போனாலும், இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சிலம்பரசனை நான் சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன்.. அவருடன் இதற்கு முன் “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்” என்கிற படத்தில் நடித்திருந்தேன்..

அதில் அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் கொஞ்சமே இருந்தன.. ஆனால் இந்தப் படத்தில் படம் முழுதும் வருகின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன்..

அதேபோல சிம்புவுடன் பல காட்சிகளில் நடித்தாலும், படத்தில் நான் எஸ்.ஜே.சூர்யா தரப்பு ஆளாக வருகிறேன்.. “வாலி” பட சமயத்தில் இருந்தே எஸ்.ஜே.சூர்யா பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் இப்போதுதான் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன்.

எங்களது காம்பினேஷன் பெரிய அளவில் பேசப்படும்.

படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்னவென்று இப்போது என்னால் சொல்ல முடியாது. காரணம் கதையில் பல திருப்பங்களுக்கு காரணமான ஒரு கதாபாத்திரம் என்னுடையது. என்னுடைய ஸ்டைலிலேயே நடிக்கும்படி எனக்கு சுதந்திரமும் கொடுத்து விட்டார் வெங்கட்பிரபு.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்தப்படத்தில் வெங்கட்பிரபு கையாண்டுள்ள திரைக்கதை மிகச்சிறந்த திரைக்கதைகளில் ஒன்றாக இருக்கும்.

இப்போது நான் சொல்வதை விட, படமாக நீங்கள் பார்க்கும்போது அதை நிச்சயம் உணர்வீர்கள்..

பொதுவாக பெரும்பாலான படங்களின் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதே இல்லை. இன்னும் சிலரோ தினசரி வந்து ஏதாவது குறுக்கீடுகள் செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தினசரி படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். படக்குழுவினரின் தேவைகளை அருகில் இருந்து கவனிப்பதுடன் படைப்பாளியின் சுதந்திரத்தில் எந்த குறுக்கீடும் செய்யாமல் அனைவருக்கும் சுதந்திரம் அளித்து ஒரு மிகச்சிறந்த தயாரிப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுவரை கிட்டத்தட்ட முன்னூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளேன்.. குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே, உடனே திரையில் பார்த்தாக வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்.. “மாநாடு” படம் அப்படி ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தியுள்ளது… இதற்கு முன்பு சில படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்தேன். அது நகைச்சுவை நடிகனான என்னாலும் எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்பதற்காகத்தான்.

மலையாளத்தில் கூட “ஷ்யாமா ராகம்” என ஒரு படத்தில் நடித்துள்ளேன்.. கிட்டத்தட்ட “சங்கராபரணம்” படம் மாதிரி..

அதேபோல பா.விஜய், ராகவேந்திரா லாரன்ஸ் ஆகியோரின் படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடிக்கிறேன்..

தவிர இப்போதிருக்கும் காமெடி ஸ்டைலும் வேற மாதிரி இருக்கிறது. முக்கியமாக மேக்கிங்கே மாறி இருக்கிறது.

நான் நாடக நடிகன் என்பதால், எதுவாக இருந்தாலும் அதிலும் என்னை பொருத்திக்கொண்டு முட்டி மோதி நடிக்க முடியும்.

அந்த வகையில் “மாநாடு” படத்தின் கதையும் வித்தியாசமாக இருந்ததுடன் என்னுடைய கதாபாத்திரமும் சவால் நிறைந்ததாக இருந்தது.

சிலம்பரசன் சினிமாவைப் பற்றி அனைத்தும் தெரிந்தவர். திறமையானவர். இந்த “மாநாடு” படம் அவரது திரையுலகப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும்.. அந்த அளவுக்கு படப்பிடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்துள்ளார்.

அவர் இதுபோன்ற கதைகளையும் கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்தார் என்றால் இன்னும் மிகப்பெரிய இடத்துக்குச் செல்வார்.,

சிலம்பரசனைப் பொறுத்தவரை ஸ்பாட்டில் நடிக்கும்போது புதிது புதிதாக நிறைய விஷயங்களை மெருகூட்டிக் கொள்வார். என்னைப் போன்ற நாடகக் கலைஞர்கள் கையாளும் பாணி அது.. இதைவிட ஒரு விஷயம் சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்.. “இந்தப்படம் எல்லாம் முடிந்து ப்ரீ ஆனதும் உங்களுடன் சேர்ந்து ஒரு நாடகம் நடிக்கவேண்டும் சார்” எனக் கூறினார். அது நடந்தால் நன்றாக இருக்கும்” என்கிற புதிய தகவலுடன் உரையாடலை நிறைவு செய்தார் ஒய்.ஜி.மகேந்திரன்..

Share.

Comments are closed.