Monday, March 9

ஸ்வீட்டி நாட்டி கிரேசி_ விமர்சனம்

Loading

ஸ்வீட்டி நாட்டி கிரேசி_ விமர்சனம்

கல்லூரியில் படிக்கும் திரிகுண், தன்னுடன் படிக்கும் ஸ்ரீஜிதா கோஷ் என்ற மாணவியை காதலிக்கிறார். அவரும் திரிகுண்ணை காதலிக்க, அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டிய இந்தக் காதல் பிரச்சனையில் சிக்குகிறது.
காதலர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த பிறகு காதலன் திடீரென்று கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார்.
காதலி அதை கண்டு காரணம் கேட்க, அழுது கொண்டே தனக்கு பாடம் நடத்திய ஆசிரியையுடன் தான் கொண்ட உறவை சொல்லுகிறார்.
அடுத்ததாக ஹைதராபாத்தில் ஷாப்பிங் மால் ஒன்றில் சந்தித்த ‘ஆன்டி’யுடன் உடலுறவு கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதையும் சொல்கிறார்.
இதைத் தொடர்ந்து காதலர்களிடம் பூகம்பம் ஏற்படுகிறது.
அதிரடி முடிவெடுக்கும் காதலி காதலனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பதிவு திருமணம் செய்து கொண்டு தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அங்கே ஒரு பேரதிர்ச்சி காதலனுக்கு காத்திருக்கிறது.
திரிகுண் உறவு கொண்டதாக சொல்லும் ஆசிரியைதான் காதலியின் அக்கா…
மேலும் ஹைதராபாத் வணிக வளாகத்தில் சந்தித்து உறவு கொண்ட ஆன்ட்டிதான் தன் மாமியார் என்பதும் தெரிய வருகிறது.
இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை காமெடி உடன் மன்னிக்கவும் காம நெடியுடன் சொல்லும் படம் தான் ஸ்வீட்டி நாட்டி கிரேசி. காமம் பிளஸ் காமெடி கலந்த கதையை திரையில் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டதால் இயக்குனர் ராஜசேகர் ஜி எதைப் பற்றியும் கவலைப்படாமல் படத்தை இயக்கி இருக்கிறார். இயக்குனரின் நோக்கத்துக்கு உதவும் வகையில் ஒளிப்பதிவாளர் சி விஜய்ஸ்ரீயின் கேமரா நடிகைகளின் அழகை மட்டுமே பிரதானப்படுத்தி காட்சிகளை கவர்ச்சியாக்கி இருக்கிறது. பாடல்களும் பின்னணி செய்யும்… அட அது கிடக்கட்டும் விடுங்கப்பா… இந்த வகை படங்களில் அதை எல்லாம் கவனம் செலுத்தி பார்த்துக் கொண்டிருப்பார்களா என்ன?
நாயகி ஸ்ரீஜிதா கோஷ், அவரது அக்காவாக வரும் இனியா, அம்மாவாக வரும் சுந்தரா ட்ராவல்ஸ் ராதா மட்டுமின்றி அவர்கள் வீட்டு வேலைக்காரியைக்கூட விட்டு வைக்காமல் கவர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். நாயகனின் அப்பாவாக வரும் தம்பி ராமையா மற்றும் அக்கா கணவராக வரும் சத்யன் ஆகியோரின் நகைச்சுவை பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறது.
சாப்பாட்டு இலையின் ஓரத்தில் தொட்டுக் கொள்வதற்கு ஊறுகாய் இருந்தாள் சாப்பாட்டின் சுவை கூடலாம். ஆனால் அதையே முழு சாப்பாடாக சாப்பிட முடியுமா?