Wednesday, September 30

தக்ஸ் – திரைப்பட விமர்சனம்

Loading

தக்ஸ் திரைப்பட விமர்சனம்

ஆழமான காதல் கதையை அழகியல் மதிப்பீடு மிக்க ‘ஹே சினாமிகா’ என்ற பெயரில் படமாக்கி இயக்குநராக அறிமுகமான டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, ‘தக்ஸ்’ என்ற தனது இரண்டாவது படத்தில் அடிதடி ஆக்ஷன் கதையை குமரி மாவட்ட பின்னணியில் உருவாக்கியிருக்கிறார்.

நாகர்கோவில் பகுதியில் பெரும் புள்ளியாக வலம் வரும் பி.எல்.தேனப்பனிடம் கணக்கு வழக்குகளை பராமரிக்கும் பணியைச் செய்து வருகிறார் நாயகன் ஹிர்து ஹாரூன். தேனப்பன் செய்த கொலைக்காக அவரைப் பழி வாங்கக் காத்திருக்கும் நண்பனுடன் சேர்ந்து தேனப்பனின் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தனது காதலியுடன் ஆஸ்த்ரேலியாவுக்கு செல்லத் திட்டமிடுகிறார் நாயகன்.

இதற்கிடையில் காதலிக்கு தொந்தரவு செய்த ஒருவனைக் கொலை செய்துவிட்டு சிறைக்குச் செல்கிறார். சிறையில் இருக்கும் பாபி சிம்ஹா, மூனீஸ் காந்த் உள்ளிட்ட வேறு சிலரும் தப்பிக்கத் திட்டமிடுகிறவர்கள்தான்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து சிறை அறையிலிருந்து குழி ஒன்றை வெட்டி,  சுரங்கம் தோன்றுகின்றனர். அந்த மண்ணை கழிப்பறையில் கொட்டி தண்ணீர் ஊற்றுகின்றனர்.

திட்டமிட்டபடி சுரங்கத்தை சிறுகச் சிறுக தோண்டுகிறார்கள். சிறை அதிகாரிகள் கண்களில் மண்ணைத் தூவி இறுதியில் அவர்கள் திட்டமிட்டபடி தப்பித்தார்களா இல்லையா… ஹிர்து ஹாரூன் தன் காதலியுடன் இணைந்து புதிய வாழ்வைத் துவக்கினாரா என்பதுதான் தக்ஸ் படத்தின் கதை.

காட்சிகளின் பெரும்பகுதி சிறையிலேயே நடக்கிறது. எனவே படம் பார்க்கும் பார்வையாளர்களே சுமார் இரண்டு மணி நேரம் சிறையிலிருந்த வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.

சிறைச் சாலை அறையிலிருந்து தப்பிக்க சுரங்கம் தோண்டுவது பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த கிரேட் எஸ்கேப் ஆங்கிலப் படத்தை நினைவு படுத்துகிறது.

நாயகன் ஹிர்து ஹாரூன் ஆக்ஷன் காட்சிகளில் அசத்துகிறார். புதுமுகத்தைப்போல் இல்லாமல் வெகு சிறப்பாக நடித்திருக்கிறார்.

அறிமுக நாயகிக்கு அதிகமான ஸ்கோப் இல்லை என்றாலும் சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

கடுமையான போலீஸ் அதிகாரி வேடத்தில் வரும் ஆர்.கே.சுரேஷூக்கு அவரது உடல் மொழியும் உருவத்தோற்றமும் நன்கு ஒத்துழைக்கிறது.

பாபு சிம்ஹா, முனீஷ்காந்த் ஆகியோரும் தாங்கள் ஏற்ற வேடத்தை சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.

படத்தின் மிகப் பெரிய பலம் ப்ரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவும், சாம் சிஸ்ஸின் பின்னணி இசையும்தான்.

வித்தியாசமான திரை அனுபவத்தைப் பெற நினைக்கும் ரசிகர்கள் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

மதிப்பெண் 3 /5