Tuesday, February 17

உயிருள்ளவரை உஷா _ விமர்சனம்

Loading

43 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த டி ராஜேந்திரரின் உயிருள்ளவரை உஷா ரசிகர்களை மகிழ்விக்க மறு வெளியீடாக தற்போது வந்திருக்கிறது.

இப்போது பார்த்தாலும் ஃபிரஷ் ஆக இருக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பம்சம்.

நாயகனாக கங்காவும், நாயகியாக நளினியும் அறிமுகமான இந்தப் படத்தில் ஜெயின் ஜெயபால் என்ற முக்கியமான வேடத்தில் தோன்றும் டி ராஜேந்தர் அசத்தலான நடிப்பில் அட்டகாசம் செய்கிறார்.

கல்லூரியில் படிக்கும் கங்கா, தன்னுடன் படிக்கும் மாணவி நளினியை அடிக்கடி கேலியும் கிண்டலும் செய்வதுமாக இருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நளினி கங்கா மீது வெறுப்புடனே இருக்கிறார்.

ஒரு நாள் கங்காவிடம் ஆட்டோகிராப் வேண்டும் என்று நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கும் நளினி, அதில் ஒரு பொய்யாக காதல் கடிதம் எழுதி கங்கா மீது புகார் செய்கிறார்.

இதற்கு பழி வாங்குவதற்காக கங்கா கல்லூரியில் நடக்கும் ஒரு நாடகத்தில் நளினியை முத்தமிட்டு விடுகிறார்.

இதனால் ஆத்திரம் கொண்ட நளினியின் அண்ணன் ராதாரவி கங்காவை நையப் புடைக்கிறார்.

இதன் பின்னர் கங்கா மீது நளினுக்கு ஏற்படும் பரிதாபம் காதலாக பரிணாமம் பெறுகிறது.

அண்ணன் ராதாரவி இந்த காதலுக்கு குறுக்கே நிற்கிறார்.

இறுதியில் இந்த காதல் என்னவாகிறது?

காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் உயிர் உள்ளவரை உஷா படத்தின் கதை.

படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் ஒவ்வொன்றும் இப்போது கேட்டாலும் அற்புதமாகத்தான் இருக்கிறது.

சாகா வரம் பெற்ற இந்தப் பாடல்கள் தான் உயிர் உள்ளவரை உஷா படத்தின் ஹைலைட்.

கல்லூரி பேராசிரியராக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி, ராதா ரவியின் அடியாட்களாக வரும் கவுண்டமணி மற்றும் இடிச்ச புளி செல்வராஜ் ஆகியோர் நகைச்சுவைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

செயின் ஜெயபாலாக டி ராஜேந்தர் திரையில் தோன்றி, அடுக்கு மொழி வசனங்களை பேசும்போது எல்லாம் அரங்கமே கைத்தட்டலில் அதிர்கிறது.

அந்தக் காலத்து இளைஞர்களுக்கு பிடித்தமான படமாக இருந்த உயிருள்ளவரை உஷா, இப்போது 2கே கிட்ஸ் மற்றும் ஜென் இசட் தலைமுறை வரை எல்லோரையும் கவரும் வகையில் அமைந்திருப்பதுதான் ஆச்சரியமான விஷயம்.