வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கும் படம் எல்.கே.ஜி. வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படத்தின் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது பேசிய தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் கூறும்போது, “எல்.கே.ஜி எனது ஹோம் பேனரின் முதல் தயாரிப்பாகும். என் தந்தை ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைவதற்கு ஒரு கனவு கண்டார், ஆனால் துரதிருஷ்டவசமாக 46 வயதில் காலமானார். இந்த படத்தின் மூலம் அந்த கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவருடைய மொத்த குழுவும் சொன்னபடியே படத்தை முடித்து தந்திருக்கிறார்கள். எனவே அது எங்கள் ஸ்டூடியோவில் வெளியாகும் முதல் படமாகி இருக்கிறது. காரில் ஒன்றாக பயணிக்கும்போது ஆர்.ஜே. பாலாஜி இந்த படத்தின் அடிப்படை கருத்தை எனக்கு விளக்கினார், அது என்னை மிகவும் ஈர்த்தது. உடனடியாக படத்தை தயாரிக்க முடிவு செய்தோம். நேற்று இரவு நாங்கள் இந்த படத்தின் இறுதி பிரதியை பார்த்தோம். ஆர்.ஜே.பாலாஜியை பாராட்டுவதை என்னால் நிறுத்த முடியவில்லை. இது மற்றவர்களை கலாய்த்து எடுக்கப்படவில்லை, ஒரு நல்ல செய்தியை தாங்கி வந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில், இப்போது வரை கொண்டாடப்படும் சத்யராஜ் சாரின் அமைதிப்படை படத்தின் மிகத் தீவிரமான ரசிகன். அந்த வரிசையில் இப்போது LKG படமும் சேரும்” என்றார்.
ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்துக்கு இசையமைக்க முதல் முறையாக என்னை அணுகியபோது, நான் மிகவும் உற்சாகமாகமானேன். படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், பின்னணி இசையமைக்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். படத்தை பார்த்த உடனேயே ஆர்.ஜே. பாலாஜியை அழைத்து சமீபத்தில் என்னை கவர்ந்த முதல் அரசியல் திரைப்படம் இது தான் என்று கூறினேன். அதனால் சிறந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசையை வழங்கும் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருந்தது” என்றார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.
கடந்த 4-5 ஆண்டுகளாகவே ஆர்.ஜே. பாலாஜி அண்ணாவுடன் நான் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறேன். அவர் செய்யும் நல்ல செயல்களுக்கு எல்லாம் அவ்வப்போது அவரை வாழ்த்துவேன். இந்த படத்தை முடிவு செய்ததும், கதையின் படி நிறைய விஷயங்கள் தேவைப்பட்டன. அவற்றில் முக்கியமான ஒன்று கூட்டம். சரியான திட்டமிடல் மற்றும் நல்ல குழுவால், நாங்கள் திட்டமிட்ட நேரத்தில் படத்தை முடிக்க முடிந்தது. படம் நிச்சயமாக பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தில் குடிப்பது, புகைப்பது போன்ற காட்சிகள் ஏதும் கிடையாது. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என்றார் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா.
ஆரம்பத்தில் இந்த திரைப்படத்திற்கு என்னை அணுகியபோது, அது பாஸிடிவ்வான முன்னணி கதாபாத்திரமாக இருக்கும் என நினைத்தேன். இந்த படத்தில் ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்று இப்போது வரை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் உண்மையில் ஜிகர்தண்டா பாபி சிம்ஹா கதாபாத்திரம் போன்றது தான் என் நிலை என்பதை இப்போது நான் உணர்கிறேன். நடிகர்கள் மற்றும் ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்குகளில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஆர்.ஜே. பாலாஜியை உங்கள் படங்கள் எதிலும் தவற விடக்கூடாது என்று ஐசரி கே கணேஷ் அவரிடம் நான் அடிக்கடி சொல்லுவேன். அவரின் எனர்ஜியும் அர்ப்பணிப்பும் அப்படிப்பட்டது” என்றார் நடிகர் ஜே.கே.ரித்தீஷ்.
ஆர்.ஜே. பாலாஜி உடன் பணிபுரிய மிக மகிழ்ச்சியான காரணம், சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதன் முதலில் சித்தார்த்துடன் இணைந்து உதவியது அவர் தான். ஒட்டு மொத்த குழுவும் மிகவும் உற்சாகமாக வேலை செய்தனர். இந்த படத்தில் உள்ள அனைவரும் நல்ல மனதுடன் இருக்கிறார்கள், இதுவும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும்” என்றார் நடிகர் மயில்சாமி.
நேற்று இரவு இந்த படத்தை பார்க்க நேர்ந்தது, படம் உருவாக்கப்பட்ட விதம் முற்றிலும் வியப்பாக இருந்தது. ஆர்.ஜே. பாலாஜிக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் சாதாரணமாக ஒரு படத்தில் நடித்து விட்டு போயிருக்கலாம். ஆனால் அவர் ஒரு அவசியமான திரைப்படத்தில் நடித்திருக்கிறார், அவர் எனக்கு ஜூனியர் சோ ராமசாமி சார் போல தெரிகிறார். சமூகத்தை பற்றிய அவரது சிந்தனை அப்படி தான் இருக்கிறது. சார்லி சாப்ளின் ஹிட்லர் படத்தை எடுத்தது போல, சோ ராமசாமி சார் முகம்மது பின் துக்ளக் படத்தை எடுத்தது போல, எல்.கே.ஜி படம் ஆர்.ஜே.பாலாஜிக்கு இருக்கும் என்று நிச்சயமாக உறுதியளிக்கிறேன்” என்றார் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன்.
இத்தகைய ஒரு நல்ல படக்குழுவின் ஒரு பகுதியாக நானும் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, ஆர்.ஜே.பாலாஜி போன்ற யாரையும் புண்படுத்தாத நல்ல சிந்தனைகளை உடைய ஒருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. மேலும், நான் அவருடன் பல கல்லூரிகளுக்கு சென்றிருக்கிறேன், அவர் அங்கு பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசுவதை எண்ணி பெருமைப்படுகிறேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி” என்றார் நாயகி பிரியா ஆனந்த்.
ஆர்.ஜே. பாலாஜி உடன் பணிபுரிவது எனது தம்பியுடன் நேரம் செலவழிப்பது போன்றது. அவரது கிரியேட்டிவிட்டி அபாரம். அவர் புது புது விஷயங்களை சிந்தித்துக் கொண்டே இருக்கிறார். அது போஸ்டர்களில் கூட தெரிகிறது” என்றார் கலை இயக்குனர் டி.பாலசுப்ரமணியம்.
படத்தை பற்றி சக்திவேலன் சார் சொன்னது தான் முற்றிலும் உண்மை. கணேஷ் சார் இந்த படத்துக்கு தயாரிப்பாளராக இருந்தது எனக்கு பெருமை. இங்கு எல்லோரும் படத்தை பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு இது ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும், அவர்களும் படத்தின் சொல்லப்படும் கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் கே.ஆர்.பிரபு.
ராம் குமார் சாரின் நடிப்பை நாம் ஒரு சில படங்களை தவிர வேறு எதிலும் பார்த்ததில்லை. இந்த படத்தில் அவர் நடித்தது எங்களுக்கு கிடைத்த வரம். நாஞ்சில் சம்பத் சார் ஒரு தாழ்மையான மனிதர். இந்த படத்திற்கு நாங்கள் அவரை அணுகியபோது, அவர் கேட்ட முதல் விஷயம், அவருடைய மகனின் கல்லூரி கட்டணத்திற்கு பணம் கட்ட முடியுமா என்பது தான். இத்தகைய மோசமான சூழ்நிலையில் அவரைப் பார்க்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு மோசமான அரசியல்வாதியின் கதாபாத்திரத்திற்காக நாங்கள் அவரை அணுகிணோம். ஆனால் அவரைப் பற்றிய எனது கருத்துகள் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருந்தன. அவர் ஒரு அற்புதமான மனிதர். இப்போது சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அவர் நடித்து வருகிறார், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் பிஸியான நடிகராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்.
கடந்த சில ஆண்டுகளாகவே நான் நகைச்சுவை நடிகராக நடிக்கவில்லை, அதில் எனக்கு திருப்தியே இல்லை. நிறைய பேர் கிடைக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணாத, நடிச்சி நல்லா பணம் சம்பாதி என அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அந்த நேரத்தை நான் LKG ஸ்கிரிப்ட் எழுத உபயோகித்துக் கொண்டேன். சென்னை வெள்ளம் முடிந்து வந்த தேர்தலில் வெறும் 57% வாக்குகள் பதிவான போது தான், இளைஞர்கள் யாருக்கு, ஏன் வாக்களிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். LKG படத்தை பார்த்த பிறகு, அவர்கள் நிச்சயம் வெளியே வந்து வாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பார்கள் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். இது ஒரு ஸ்பூஃப் படம் அல்ல, பார்வையாளர்களை ஏதாவது ஒன்றை பற்றி சிந்திக்க வைக்கும் படம். இது என் சொந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு படம் அல்ல, சமூகத்திற்கு ஏதாவது செய்யும் படம். பிப்ரவரி 22 அன்று படம் வெளியான ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து இந்த படத்தை ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார் நாயகன் ஆர்.ஜே.பாலாஜி.