அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘இறுகப்பற்று’! !

0

Loading

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது ’இறுகப்பற்று’ ட்ரெய்லர்: அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

’இறுகப்பற்று’ திரைப்படத்தின் டீஸரை வெளியிடுவதில் தயாரிப்பு நிறுவனமான பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் மகிழ்ச்சியடைகிறது.

மாயா, டாணாக்காரன், மான்ஸ்டர், மாநகரம் என விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுள்ள படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம், இறுகப்பற்று படத்தைத் தயாரித்துள்ளது. விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ராம ஸ்ரீநாத், விதார்த், அபர்ணதி, ஸ்ரீ மற்றும் சானியா ஐயப்பன் உள்ளிட்ட நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார்

முன்னதாக கடந்த மாதம் இந்தப் படத்தின் புதுமையான டீஸர் ஒன்று வெளியானது. இதில் உண்மையான திருமணமான ஜோடிகள் தங்களின் துணை குறித்து சரியாக தெரிந்து கொள்ளும் வகையில், தங்கள் திருமண வாழ்க்கை குறித்து, புரிதல் குறித்து பேசி, கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தனர். இந்த நிகழ்வு டீஸராக வெளியானது.

‘THE GAP’ என்று பெயரிடப்பட்ட இந்த பரீட்சார்த்த முயற்சிக்கு ரசிகர்களிடமிருந்து அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதன் புதுமையான அணுகுமுறைக்காக பரவலாக பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீஸரும், அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படமும் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

“நவீன காலத்தில் உறவுகளில் நிலவும் சிக்கல்கள், சவால்கள், அதை வெல்லும் இந்தக் கதாபாத்திரங்கள் மூலம் சிந்தனையைத் தூண்டும் ஒரு திரை அனுபவத்தை ரசிகர்கள் எங்கள் படத்தில் எதிர்பார்க்கலாம்” என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

மேலும் படம் குறித்துப் பேசிய இயக்குநர் யுவராஜ், “அன்பும், காதலும் தொடர்ந்து சோதனைக்கு உள்ளாகி வரும் தற்போதைய நிலையில் எங்களது இறுகப்பற்று, நவீன உறவுகளில் இருக்கும் நுணுக்கமான பிரச்சினைகள் குறித்து பார்வையாளர்களை யோசிக்க வைக்கும். வெவ்வேறு பின்புலன்களைச் சேர்ந்த மூன்று ஜோடிகளின் கதை இது. காதல், கடமை மற்றும் மகிழ்ச்சிக்கான தேடலில் இருக்கும் உயர்வுகளையும், தாழ்வுகளையும் இவர்களின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக அலசுகிறது. எங்கள் டீஸருக்குக் கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் அளித்திருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாகத் திரைப்படம் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

அக்டோபர் 6ஆம் தேதி ‘இறுகப்பற்று’ திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்ரெய்லர் இணைப்பு – https://www.youtube.com/watch?v=x82MBPDCOmU

Share.

Comments are closed.