![]()


யூகி – திரைப்பட விமர்சனம்
படத்தின் துவக்கத்தில் அழுதுகொண்டே வரும் ஆனந்தி, பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கையில் காரில் வந்த நபர்களால் கடத்தப்படுகிறார்.
அடுத்ததாக முன்னணி திரைப்பட நாயகன் ஜான் விஜய் மது அருந்தியபடி தொலைக்காட்சியில் படம் பார்க்கும்போது யாரோ அவரை சுட்டுக் கொள்கின்றனர்.
முன்னாள் போலீஸ் அதிகாரி பிரதாப் போத்தன் தன் மகளை காணவில்லை என்றும், அவளைக் கண்டுபிடித்துத் தரும்படியும் ப்ரைவேட் டிடக்டிவ் நரேனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். உதவிக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரையும் அனுப்பி வைப்பதாகக் கூறுகிறார்.
இது தவிர அரசியல்வாதி ஒருவர் காணாமல் போன பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி நட்டி நடராஜிடம் உத்தரவிட, அவரும் தன் உதவியாளர்களுடன் தேடுதல் வேட்டை நடத்துகிறார்.
படத்தின் துவக்கத்தில் வரும் இந்தக் காட்சிகளுக்குள் இருக்கும் தொடர்பு என்ன என்று ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி பார்வையாளர்களை இருக்கை நுனிக்கே இழுத்து வருகிறது யூகி திரைப்படம்.
பிரதாப் போத்தன் அனுப்பியதாகச் சொல்லி, நரேனிடம் வந்து சேரும் கதிரும் அவருடன் சேர்ந்து காணாமல் போன பெண்ணைத் தேடும் வேட்டையில் இறங்குகிறார்.
நரேனின் மற்றொரு உதவியாளரான பெண்ணுடன் சேர்ந்து ஒரு கட்டத்தில் நரேனையே சந்தேகப்படுகிறார் கதிர்.
காணாமல் போன பிரதாப் போத்தனின் மகள் என்ன ஆனாள்? ஜான் விஜயை யார் எதற்காகக் கொன்றார்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை படத்தின் இரண்டாம் பகுதியில் சொல்லப்படுகிறது.
துவக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பான முறையில் கதையை கொண்டு செல்கிறார் கதாசிரியர் பாக்கியராஜ் (இவர் நம்ம ஊர் பாக்கியராஜ் இல்லை. மலையாள கதாசிரியர் பாக்கியராஜ்)
பாக்கியராஜின் பரபரப்பான கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதையும் அமைந்து விட்டதால் ஜெட் வேகத்தில் பறக்கிறது யூகி திரைப்படம். எந்த இடத்திலும் சற்றும் தொய்வின்றி படத்தை இயக்கியிருக்கிறார் ஜாக் ஹாரிஸ்.
பொதுவாக ஒரு படத்தில் ஏதேனும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் இரண்டு மூன்று சஸ்பென்ஸ்களை வைத்து இறுதியில் அந்த சஸ்பென்ஸ்களை ஒரு புள்ளியில் இணைக்கும் உத்தி அருமை. கடைசிவரை பார்வையாளர்கள் யூகிக்க முடியாத அளவுக்கு படத்தை கொண்டு சென்று வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ஜாக் ஹாரிஸ்.
வாடகைத் தாய் என்ற கருவை மையப்படுத்திய படத்தை வித்தியாசமான கோணத்தல் யோசித்து புதுமையான முறையில் திரையில் படைத்திருக்கிறது படக்குழு.
புஷ்பராஜ் சந்தோஷின் ஒளிப்பதிவு, ஜோமின் செய்திருக்கும் படத்தொகுப்பு, ரஞ்சித் ராஜின் இசை ஆகியன படத்துக்கு பக்க பலமாக நின்று இயக்குநருக்கு உதவியிருக்கின்றன
சஸ்பென்ஸ் பட ரசிகர்களை மட்டுமின்றி சென்டிமெண்ட் காட்சிகளும் இருப்பதால் பெண்களையும் இப்படம் கவரும் என்பதில் ஐயமில்லை.
மதிப்பெண் 3 5
