![]()

பேட்டைக் காளி வலைத் தொடர் விமர்சனம்
இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமாரின் இயக்கத்தில் வலைத் தொடராக மலர்ந்திருக்கிறது பேட்டைக் காளி.
பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நாம் பார்த்துப் பழகிய வேல ராமமூர்த்தி பிரதான வேடத்தில் நடித்திருக்கும் இத்தொடரில் கலையரசன், கிஷோர், ஷீலா ராஜ்குமார் போன்றவர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்திருக்கும் ஜல்லிக் கட்டுதான் இத்தொடரின் அடிநாதம்.
பண்ணையார் செல்வசேகரன் வேடத்தில் படு கெத்தாக நடித்திருக்கிறார் வேல ராமமூர்த்தி. தன் வளர்ப்பு மாட்டை ஜல்லிக்கட்டில் யாராவது பிடித்து விட்டாலே தன் செல்வாக்கு சரித்து விடும் என்று நினைக்கும் செல்வசேகரன் தன் மகனுக்குகூட தன்னுடன் சேர்த்து பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யக்கூடாது என்று மறுக்கும் மமதை மிக்கவர்.
இதன் காரணமாக பெற்ற மகனே தந்தையின் மமதையை அடக்கி தன் சுயத்தை நிரூபிக்க நினைக்கிறார். மாமன் ஸ்தானத்தில் இருந்து வளர்த்த பெண்ணையே திடீரென பண்ணையார் திருமணம் செய்து கொள்ளவே, அந்தப் பெண்ணின் அண்ணனுக்கும் அவர் எதிரியாகிறார்.
பண்ணையாரின் மகனும் கலையரசனும் நண்பர்கள். பண்ணையாரின் மாட்டை ஜல்லிக்கட்டில் பிடிக்கச் சொல்லி ஒரு நாள் கலையரசனை பண்ணையாரின் எதிரிகள் கொம்பு சீவிவிட, எப்படிப்பட்ட காளையையும் களத்தில் பிடித்து விடும் கலையரசன் பண்ணையார் மாட்டையும் பிடித்து விடுகிறார்.
இதனால் ஏற்படும் பிரச்னையில் கலையரசன் கொல்லப்படுகிறார். கலையரசன் கொலைக்கு பழி வாங்க, கிஷோர் பண்ணையாரை வெடி குண்டு வீசி கொல்ல முற்பட, அவர் கண்கள் மட்டும் பறி போக உயிர் தப்பி விடுகிறார்.
ஆற்றில் அடித்து வரப்பட்ட கன்றுக் குட்டியைக் காப்பாற்றி அதற்கு பேட்டைக்காளி என்று பெயரிட்டு வளர்த்து ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்கிறார் ஷீலா ராஜ்குமார்.
தன் விருப்பத்துக்கு மாறாக தன்னை கட்டாயத் திருமணம் செய்து கொண்ட பண்ணையாரை பழி வாங்க காதலன் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள் அந்த இளம் மனைவி, அது தெரிந்தும் பண்ணையார் அவளை ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறார்.
இப்படி அடுத்து என்ன நடக்குமோ என ஆர்வத்தைத் தூண்டும் விதமாக விறுவிறுப்பாகச் செல்கிறது பேட்டைக் காளி வலைத் தொடர்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்துக்கு மிகப் பெரிய பலம்.
ஜல்லிக்கட்டுக்கு மாட்டை தயார் செய்யும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. நிஜ ஜல்லிக்கட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளையும் படத்தில் ஆங்காங்கே இணைத்திருப்பது சிறப்பாக அமைந்திருக்கிறது. எது உண்மையான ஜல்லிக்கட்டில் படமாக்கப்பட்ட காட்சி, எது படப்பிடிப்பு நடத்தப்பட்ட காட்சி என்றே கண்டு பிடிக்க முடியாத வையில் காட்சிகள் இருப்பது ஒளிப்பதிவாளரின் திறமைக்கு சான்று.
திரைப்படத்தைப்போல் நிறைய சிரம்ப்பட்டு நிறைய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட பேட்டைக்காளி அனைவரையும் கவர்வான் என்பது நிச்சயம்.
