![]()
பைசன்_ விமர்சனம்
சமூகப் பிரக்ஞை உள்ள மிகச் சில இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் மிகுந்த பொறுப்புணர்வுடன் திரைப்படங்களை உருவாக்குவதில் வல்லவர்.
தென் தமிழகத்தில் தலை விரித்தாடும் ஜாதிய மோதல்களை கபடி விளையாட்டின் பின்னணியில் எந்த சார்பு நிலையும் இன்றி அற்புதமான படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
கபடி விளையாட்டுக்காக இந்திய அரசிடமிருந்து அர்ஜுனா விருதை பெற்ற கபடி வீரர் மணத்தி சண்முகம் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான கதை பைசன்.
கபடி விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட துருவ் விக்ரம் தன் தந்தை பசுபதி, மற்றும் மூத்த சகோதரி ரதிஷா விஜயன், ஆகியோருடன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணத்தி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.
கபடி விளையாட்டு தன் மகனின் வாழ்க்கையில் “விளையாடி” விடக் கூடாது என்பதற்காக துருவ் கபடி ஆடுவதை தடுக்க முயல்கிறார் தந்தை பசுபதி.
ஆயினும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அருவி மதன், துருவ் சிறப்பான பயிற்சிகளைப் பெற அனைத்து உதவிகளையும் செய்கிறார்.
கபடியைத் தவிர வேறு எதுவும் தன் வாழ்க்கையில் கிடையாது என்பதைப் போல் வெறிகொண்டு அவ்விளையாட்டை கற்றுத் தேர்ந்து தொடர்ந்து முன்னேறி வருகிறார் துருவ்.
இறுதியில் பாகிஸ்தானுடன் ஜப்பான் நாட்டின் நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார்.
துருவ் விக்ரம் ஏற்று நடித்த கிட்டான் என்ற கபடி வீரன் பாத்திரத்திற்கு அவர் செலுத்தி இருக்கும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
நிஜமான கபடி விளையாட்டு வீரரை போல் தேர்ந்த லாவகத்துடன் துருவ் கபடி ஆடுவதும், ரைடு போகும்போது இடது காலையும் வலது காலையும் மாறி மாறி சற்றே முன்னும் பின்னும் வைத்து ஆடி, எதிரணி வீரரை அவுட் செய்யும் காட்சிகளில் அபாரமாக நடித்திருக்கிறார்.
தனக்குப் பிடித்த பெண்ணின் காதலைக்கூட ஏற்றுக் கொள்ள முடியாமல், கபடி கற்றுக் கொள்வதை ஒரு வேள்வி போல் செய்யும் துருவ் நடிப்பு அற்புதம்.
பாசமிகு தந்தையாக இருந்து பக்குவமாக மகனுக்கு புத்தி சொல்லி ஆபத்திலிருந்து அவனைக் காப்பாற்றும் முயற்சியை தன் அனுபவ மிக்க நடிப்பால் மெருகேற்றி இருக்கிறார் பசுபதி.
தம்பிக்காக அப்பாவிடம் பரிந்து பேசி வாதாடும் ரதிஷா விஜயனும் தன் வேடத்தை நிறைவாகவே செய்திருக்கிறார்.
சமூகத் தலைவர்களாக வரும் இயக்குநர் அமீர் மற்றும் லால் இருவரும் தேர்ந்த நடிப்பால் தங்கள் வேடத்தை நன்கு நியாயப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆசிரியர் வேடத்தில் வரும் அருவி மதன் பாத்திரப்படைப்பு என்றென்றும் மறக்க இயலாது. மாணவர்கள் கையில் கட்டப்பட்டிருக்கும் பல வண்ண கயிறுகளை அவர் வெட்டி விடும் ஒரு காட்சி போதும் அவரது பாத்திரப்படைப்பை புரிய வைக்க.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவான பாடல்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. குறிப்பாக “தீ கொளுத்தி…” “சீனி கல்லு…”. ஆகிய பாடல்களை சொல்லலாம்.
ஒளிப்பதிவாளர் எழிலரசன் திறமைக்கு கபடி காட்சிகளும் சண்டை காட்சிகளுமே சான்று. பருந்துப்பார்வை கோணத்தில் கிராமத்து அழகை அப்படியே அள்ளி வந்து திரையில் காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் எழிலரசன்.
உண்மைக்கு நெருக்கமாக நின்று காட்சிகளை மிக யதார்த்தமாக படமாக்கி இருப்பதால் சம்பவங்களை நாம் நேரில் பார்ப்பது போல் அமைந்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.
மிக கவனத்துடன் ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். குறிப்பாக சீர்திருத்த தமிழ் எழுத்து அமலுக்கு வராத முன்பிருந்த காலகட்டத்தை காட்சிகளில் “லை”” ளை” என்ற எழுத்துக்கள் பேனர்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும், கடையில் தொங்கும் நாளிதழின் போஸ்டரில் ஹர்ஷத் மேத்தா ஊழல் செய்தி ஆகி இருப்பதையும் சொல்லலாம்.
சமூக சிக்கல், உறவுகளின் தடைக் கற்கள் என எல்லாவற்றையும் கடந்து இலக்கை நோக்கி முன்னேறுவதே மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இறுதியில் வெற்றி பெறும் பைசன் படத்தை குடும்பத்தில் உள்ள அனைவரும் கண்டு மகிழலாம்.
மதிப்பெண் 4/5


