![]()
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சோனியா அகர்வாலிடம், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்கு மாடி வீட்டின் உரிமையை கோரி ஓர் இளம் பெண் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் விசாரணைக்கு வருகிறது.
இறந்து போன, வயது முதிர்ந்த அந்த வீட்டின் சொந்தக்காரர் உறவினராக இல்லாத ஒரு இளம் பெண்ணுக்கு தன் வீட்டை எழுதி வைத்தது குறித்து நீதிபதி சோனியாவுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
இதுகுறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்ராந்த்துக்கு உத்தரவிடுகிறார்.
வீட்டுக்கு உரிமை கோரிய இளம் பெண் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பொய் என்று தெரிய வருகிறது.
அதைத்தொடர்ந்து உண்மையான வாரிசுதாரர் யார் என்பதை தேடிச் செல்கிறார் விக்ராந்த்.
பொய்யாக அந்த வீட்டுக்கு உரிமை கொண்டாடிய பெண்ணுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்?
இறந்த முதியவருக்கும் உயில் மூலம் தனது வீட்டை எழுதி வைத்த இளம் பெண்ணுக்கும் என்ன தொடர்பு? என்பதுதான் வில் திரைப்படத்தின் கதை.
படத்தின் துவக்கத்திலும் இறுதியிலும் மட்டுமே வரும் சோனியா அகர்வாலுக்கு பெரிதாக நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றாலும் கொடுத்த வேடத்தை குறைவின்றி செய்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் விக்ராந்த்துக்கு அவரது கம்பீரமான தோற்றமும், உடல் மொழியும் நன்கு ஒத்துழைத்து பாத்திரத்திற்கு பலம் சேர்க்கின்றன.
இறந்த பெரியவர் தன் பெயரில் உள்ள வீட்டை எழுதி வைத்ததாக கூறப்படும் அலக்கியாதான் மொத்த படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார்.
சற்றும் விருப்பம் இல்லாமல் பணத்துக்காக வயதானவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் இளம் பெண்ணின் மன ஓட்டங்களை தன் நடிப்பால் அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார் அலக்கியா.
பிரசன்னாவின் ஒளிப்பதிவும், சவுரவ் அகர்வாலின் இசையும் சுமார் ரகம்தான்.
ஆங்கில படத்துக்கு வந்து விட்டோமோ என்று எண்ணத்தக்க வகையில் துவக்கத்தில் வரும் நீதிமன்ற காட்சிகளில் தொடர்ச்சியாக இடம்பெறும் ஆங்கில வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.
குழந்தை தேவையில்லை என்று கருக்கலைப்பு செய்யும் தாய்மார்களையும், தாய்மை அடைய வேண்டும் என்பதற்காக குழந்தை வேண்டி தவம் இருக்கும் பெண்களையும் ஒரு புள்ளியில் இணைத்து சமூகப் பார்வையுடன் இயக்குனர் எஸ் சிவராமன் வில் படத்தை உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரியது.


