![]()
வேடுவன்_ வெப் சீரிஸ் விமர்சனம்
ஜீ 5 தொலைக்காட்சியில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகும் வெப் தொடரான வேடுவன் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வரும் இளம் திரைப்பட நடிகர் கண்ணா ரவிக்கு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ஒரு திரைப்படத்தில் வாய்ப்பு வருகிறது.
வலுவான கதை, கம்பீரமான தனது பாத்திரம் இரண்டுமே அருமையாக அமைந்த இந்தப் படம், தனக்கு கண்டிப்பாக பெரிய வெற்றியைத் தேடித் தரும் என்ற நம்பிக்கையில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடிக்க தொடங்குகிறார் கண்ணா ரவி.
ஆனால் கதைப்படி இறுதிக்காட்சியில் துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் நடிப்பதற்கு மறுக்கிறார் கண்ணா ரவி.
என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டான இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும், உண்மையில் அவரது இறப்பில் வேறு ஏதோ மர்மம் இருக்கிறது என்று நினைக்கும் கண்ணா ரவி நடிப்பதை நிறுத்திவிட்டு உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிய புறப்படுகிறார்.
அவருக்கு தெரியவரும் உண்மை அதிர்ச்சி அளிக்கிறது.
என்கவுண்டர் இன்ஸ்பெக்டர் மரணத்தின் இருக்கும் மர்மம் என்ன?
அந்த பயோபிக் படம் வெற்றி பெற்றதா என்பதுதான் வேடுவன் படத்தில் கதை.
என்கவுண்டர் இன்ஸ்பெக்டர் வேடத்திற்கு கண்ணா ரவி தனது துடிப்பான நடிப்பால் வலு சேர்த்து இருக்கிறார்.
கிட்டத்தட்ட கதாநாயகனுக்கு இணையான பலமான பாத்திரத்தில் வரும் சஞ்சீவ் அமைதியான ஆனால் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார்.
கண்ணா ரவியின் மனைவியாக வரும் லாவண்யா மற்றும் முன்னாள் காதலி வேடத்தில் வரும் வின்ஷா தேவி இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
அண்டர் கவர் ஆபரேஷனில் இருக்கும் கணவன், தன் முன்னாள் காதலியை சந்தித்த செய்தியை மனைவியிடம் சொல்லிய பிறகு, வேண்டுமென்றே கணவனை சீண்டி விட்டு மனைவி கலாய்ப்பது ரசிக்கத்தக்க காட்சி.
விபின் பாஸ்கரின் பின்னணி இசை தொடருக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.
சீனிவாசன் தேவராஜன் ஒளிப்பதிவு, சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் இயற்கையாக அமைந்திருக்கிறது.
ஊர் மக்கள் அனைவருக்கும் நல்லது மட்டுமே செய்வது போல் காட்டப்படும் சஞ்சீவ் என்கவுண்டர் செய்யப்படும் அளவுக்கு அப்படி என்ன குற்றங்கள் செய்தார் என்று சொல்லாதது ஒரு குறைதான்.
என்கவுண்டர் இன்ஸ்பெக்டர் தற்கொலையில் இருக்கும் மர்ம முடித்து அவிழும் காட்சி சற்றும் எதிர்பாராதது.
பவன் குமார் இயக்கத்தில் துவக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பாக செல்லும் வேடுவன் வெப் தொடர் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.


