![]()
16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இம்மாதம் 13ஆம் தேதியிருந்து 20ஆம் தேதிவரை சென்னையில் நடக்கவிருக்கிறது. மாநில அரசு நிதியுதவியுடன், ஐ.சி.ஏ. பவுண்டேஷன் என்னும் தனியார் அமைப்பு நடத்தும் இந்த விழா குறித்து அறிவிப்புகள் வந்ததுமே பிரச்னைகளும் ஆரம்பித்துவிட்டன.
காரணம் போட்டிப் பிரிவில் கலந்து கொள்ள 20 படங்கள் விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறது ஐ.சி.ஏ.
இப்படங்கள் எந்த விதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன, தேர்வு செய்த குழுவினர் யார் என்றெல்லாம் கேள்விகள் எழுப்பத்தொடங்கியிருக்கின்றனர் தமிழ்ப்படவுலகினர்.
இது குறித்து நம்மிடம் பேசிய ஒரு பிரமுகர் கூறியதாவது…
சென்னை சர்வதேசப் படவிழாவுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் நதியுதவி மட்டும் கூடிக்கொண்டேபோகிறது. ஆனால் ஏற்பாட்டாளர்கள் அலட்சியப்போக்குடனேயே விழாவை நடத்திவருகின்றனர்.
இந்த ஆண்டு இவர்கள் வெளியிட்டிருக்கும் போட்டிப் பிரிவு தமிழ்ப்படப்பட்டியலைப் பார்த்தாலே, இவர்கள் நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவின் தரம் எ்ப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
போட்டிப் பிரிவுக்கு எங்களுக்கு வந்த விண்ணப்பங்களிலிருந்துதான் நாங்கள் தேர்ந்தெடுக்க முடியும் என்று வக்கணையாக விளக்கம் சொல்வார்கள்.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஜீனியஸ் படம் போட்டிப் பிரிவில் வருகிறது. தன் மகனை ஜீனியஸாக உருவாக்க, ஓய்வின்றி அவனை படிக்கச் சொல்வதும், கட்டாயப்படுத்தி பல பயிற்சிகளுக்கு அனுப்புவதாகவும் இருக்கிறார் தந்தை. விடுமுறையைக்கூட அனுபவிக்காமல் படிக்கும் அவன் வேலைக்குப்போய் கை நிறைய சம்பாதிக்கிறான். ஆனால் மனநிலை பாதிக்கப்படுகிறான். அவனை குணப்படுத்த தந்தையின் நண்பரே பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணிடம் அழைத்துச் செல்கிறார். அந்தப் பெண்ணின் அன்பான உபசரிப்பாலும் கனிவான அணுகுமுறையாலும் குணமடைந்து அவளையே திருமணம் செய்துகொள்கிறான் நாயகன்.
மனநிலை பாதிப்பிலிருந்து மீள்வதற்கு எப்படிப்பட்ட தீர்வு சொல்லியிருக்கிறார் பாருங்கள் சுசீந்திரன்.
மேற்குத் தொடர்ச்சி மலை படத்தை சிறப்புத் திரையிடல் என்ற பிரிவில் திரையிடுவார்களாம். அது போட்டிப் பிரிவில் வராதாம். என்ன ஒரு அபத்தம் பாருங்கள்….
பத்திரிகைகளின் ஏகோபித்த பாராட்ப்பெற்ற, பரியேறும் பெருமாளுக்கு நோ என்ட்ரியாம்.
தமிழக அரசு இதுபோன்ற அமைப்புகளுக்கு நிதியுதவி செய்து சர்வதேசப்படவிழா நடத்துவதற்கு பதில், குழு ஒன்றை அமைத்து அரசு சார்பிலேயே சிறப்பாக நடத்தலாம் என்றார் அந்தப் பிரமுகர்.
