“பையா டைட்டிலுக்கு இப்போது வரை அர்த்தம் தெரியாது” ; இயக்குநர் N.லிங்குசாமி!

0

Loading

பையா டைட்டிலுக்கு இப்போது வரை அர்த்தம் தெரியாது” ; இயக்குநர் N.லிங்குசாமி!

இயக்குநர் N.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆன படம் ‘பையா’. தற்போது புதிய டெக்னாலஜி அடிப்படையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு, வரும் ஏப்ரல்-11ஆம் தேதி ‘பையா’ ரீ ரிலீஸ் ஆகிறது.. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் ஸுபாஸ்ஜ்ஹ சந்திர போஸ் இதற்கான பணிகளை கவனித்து வருகிறார்.

இந்தநிலையில் பையா ரீ ரிலீஸ் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குநர் N. லிங்குசாமி பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் N. லிங்குசாமி கூறுகையில், “18 நாட்களில் ‘பையா’ திரைப்படத்தின் கதையை தயார் செய்தேன். ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த கார்த்தியிடம் போய் இந்த கதையை கூறினேன். முதல் காட்சியில் சிரிக்க ஆரம்பித்தவர் முழு கதையையும் கேட்டு கலகலகவென்று சிரித்தபடி இதை நாம் செய்வோம் என்று கூறினார்.

இந்த கதை உருவாகும்போதே ‘பையா’ என்கிற டைட்டிலும் கிடைத்து விட்டது. நிஜத்தை சொல்ல வேண்டுமென்றால் ஒரு டைட்டிலை பற்றி யோசிக்கும் போது உண்மையிலேயே நம் கண் முன்னாடி அது ‘ரோலிங்’ ஆக நிறைய ஓடும். ஒரு படத்திற்கு எல்லாமே கிடைத்துவிடும்.. ஆனால் டைட்டில் மட்டும் கிடைக்காது.. சில நேரம் வஞ்சகமே இல்லாமல் டைட்டில் கிடைக்கும்.

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்பதுதான் என்னுடைய முதல் படத்திற்காக நான் வைத்த டைட்டில். ஆனால் அந்த டைட்டிலை பதிவதற்காக சென்றபோது பிரியாத வரம் வேண்டும் பட தயாரிப்பாளர் கிருஷ்ணா ரெட்டி சேரனின் இயக்கத்தில் உருவாக்குவதற்காக அதை பதிந்து வைத்திருந்தார்கள். நம் கம்பெனியில் பணியாற்றி இருக்கிறாரே அவரிடம் கேட்டால் கொடுத்து விடுவார் என்கிற எண்ணத்தில் சேரனிடம் சென்று கேட்கச் சொன்னார் தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி. சேரனிடம் சென்று கேட்டபோது, “என் கையில் எதுவும் இல்லை. தயாரிப்பாளரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அவரை போய் பாருங்கள்” என்று கூறினார். அவரை சென்று சந்தித்தபோது நாங்கள் இந்த படம் பண்ணுவதற்காக தான் வைத்திருக்கிறோம் யோசித்து சொல்கிறேன் என கூறிவிட்டார்..

முதல் படத்தில் டைட்டிலையே ஓகே பண்ண முடியாதவன் என்ன டைரக்ட் பண்ணப் போகிறான் என சவுத்ரி சார் சொல்லி விடுவாரோ என பயந்தேன். முதல் படம் என்பதால் எல்லா விஷயத்துக்கும் பயம் இருக்கும். அந்த சமயத்தில் ஒரு நாள் எங்கள் டிஸ்கஷன் அறையில் படுத்திருந்தபோது தாங்கள் எழுதி இருந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்கிற டைட்டிலில் விளையாடும் வீடு என்கிற பெயர் மறைத்து ஆனந்தம் என்கிற பெயர் மட்டும் கண்களில் பட்டது. அப்போது கதாசிரியர் பிருந்தாவை எழுப்பி நமக்கான டைட்டில் கிடைத்து விட்டது. ஆனந்தம் தான் டைட்டில் என்றேன்.

ஆர்.பி சவுத்ரியின் ஆனந்தம் என்று சொல்லி இதை ஓகே பண்ணலாம் என நினைத்தோம். அதற்கு முன்பாக அந்த டைட்டிலாவது கிடைக்குமா என செக் பண்ணிக் கொள்வதற்காக சென்றால் மணிரத்னம் சார், தான் இயக்கிய இருவர் படத்திற்காக முதலில் அதைத்தான் பதிவு செய்து வைத்திருந்தவர் அதன்பின் அதை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு வந்தார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்த டைட்டில் காலாவதி ஆகி இருந்தது. உடனடியாக அந்த டைட்டிலை பதிவு செய்துவிட்டு சவுத்ரி சாரிடம் சென்றேன்.

அவரிடம் சென்று டைட்டிலில் சின்ன மாற்றம் என்று கூறி ‘ஆர்.பி சவுத்ரியின் ஆனந்தம்’ என டைட்டிலை சொன்னேன். உடனே சவுத்திரி சார், இந்த கம்பெனியில் இப்போது ஆனந்தம் ( அப்போது அவரது இரண்டு படங்கள் போகவில்லை ) மட்டும் தான் இல்லை என்று சமாசாக ஸொலை.. தாராளமாக இதை வை என்று கூறினார்.

இதே சண்டக்கோழி பட டைட்டில் அதன் கதை உருவாக்கும்போதே எனக்கு கண் முன்னாடி டைட்டில் கார்டில் போடுவது போல ஓடுகிறது. அதேபோல ரன் படத்திற்காக ‘பிடிச்சிருக்கா’ என்கிற டைட்டிலை தான் முதலில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் கூறினேன். ஆனால் அவரோ சந்தேக தொனியுடன் ஒரு டைட்டில் வேண்டாம்.. படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது பிடிச்சிருக்கா பிடிக்கலையா என அது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும். இப்படித்தான் எஸ் ஜே சூர்யா குஷி படத்திற்கு முத்தம் என முதலில் டைட்டில் வைத்திருந்தார். யாராவது தியேட்டரில் டிக்கெட் எடுக்கும் போது முத்தம் இரண்டு கொடுங்கள் எனக்கு கேட்பார்களா? பெண்கள் எப்படி வந்து டிக்கெட் கேட்பார்கள் ? அதனால் டைட்டிலை மாற்றுங்கள் என்று கூறி அதன் பிறகு வைக்கப்பட்டது தான் ‘குஷி’ என்ற ஏ.எம்.ரத்னம் தான் ‘ரன்’ என்கிற டைட்டிலையும் வைத்தார்.

பையா டைட்டில் யோசிக்கும்போது, ஏற்கனவே கார்த்திக்கு பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் என கொஞ்சம் பெரிய பெரிய வார்த்தைகளில் டைட்டில் இருக்கிறது. இது கொஞ்சம் சிறிதாக, கூலாக இருக்க வேண்டும் என நினைத்தோம். இது போன்ற விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த டைட்டிலை கூறினேன். என்ன அர்த்தம் என்று கேட்டார்கள்.. எனக்கு அப்போதும் சரி இப்போதும் சரி பையாவுக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியாது.

கியூப் நிறுவனத்தைச் சேர்ந்த ‘மூவி பப்’ எந்த படத்தை ரீ ரிலீஸ் செய்யலாம் என ரசிகர்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் அனைவரும் தேர்ந்தெடுத்த படம் ‘பையா’. அதை சோதனை ஓட்டமாக நான்கு நகரங்களில் மட்டும் ரிலீஸ் செய்தார்கள். நாங்களும் தியேட்டர்களுக்கு சென்று பார்த்தோம். படம் முதல் முறை ரிலீஸ் ஆகும்போது அவ்வளவு சந்தேகங்கள். டென்ஷன் இருந்தது. இந்த முறை படம் பார்த்தபோது ரொம்பவே ரிலாக்ஸ் ஆக இருந்தது. ஒவ்வொரு பட ரிலீஸும் ரீ ரிலீஸ் போல இருந்து விட்டால் எப்படி இருக்கும் என நினைத்தேன்.

பாடல்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதிலும் “அடடா மழை டா’ பாடலுக்கு ஒன்ஸ்மோர் போட சொன்னார்கள். கடைசியில் என்ட் கார்டில் போடப்படும் பாடலுக்கு கூட ஒன்ஸ்மோர் கேட்டு பல பேர் அங்கேயே நின்று விட்டார்கள். தமன்னாவின் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கை தட்டுகிறார்கள். அந்த பாடல் காட்சியை சாலக்குடியில் படமாக்கிய போது அடுத்தடுத்து உடைகளை மாற்ற வேண்டும் என்றால் கொஞ்சம் தூரத்தில் இருக்கும் கேரவனுக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்கு நேரமாகும் என்பதால் இரண்டு பெண்களை அழைத்து சேலையை மறைப்பாக பிடிக்க சொல்லி எந்த தயக்கமும் இன்றி உடனடியாக உடை மாற்றிக் கொண்டு வந்து நடித்தார்.

இந்த படத்திற்கு இந்த இரண்டு நடிகர்களின் ஒத்துழைப்பும் ரொம்பவே முக்கியம். பையா படத்தில் தமன்னா நடிக்கும் போது அவருக்கு 18 வயது தான்.. அவருக்கு முதல் பெரிய ஹிட் பையா தான். பருத்திவீரன் பாடி லாங்குவேஜில் இருந்து மாறுவதற்கு கார்த்தி ரொம்பவே சிரமப்பட்டார்.

இந்த படத்திற்காக மூன்று கார்களை வாங்கினோம். ஒரு பெரிய ‘ட்றக்’ ஒன்றை மும்பையில் இருந்து வரவழைத்து கார்களை எங்கள் வசதிக்கேற்ற மாதிரி பிரித்து அதில் காட்சிகளை படமாக்கினோம். படம் வெளியான பிறகு இயக்குநர் பிரியதர்ஷன் என்னிடம் ஒருமுறை பேசும்போது, இது போன்ற டிராவல் படங்களில் பல காட்சிகளை ஒரே இடத்தில் எடுத்து வைத்துக் கொள்வார்கள் ஆனால் ஒரு ஷாட் கூட நீ ஏமாற்றி எடுக்கவில்லை என்று கூறினார். அவ்வளவு பெரிய இயக்குநர் அப்படி கூறியபோது சந்தோசமாக இருந்தது. அந்த அளவுக்கு டெக்னிக்கலாக இந்த படத்தை எடுத்தோம்.

கனல் கண்ணன் மாஸ்டர், பிருந்தா சாரதி வசனம், யுவன் சங்கர் ராஜா இசை, பாடலாசிரியர் நா முத்துக்குமார், ஆர்ட் டைரக்டர் ராஜீவன், காஸ்ட்யூம் டிசைனர் பிரியா என இவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்லும் ஒரு நேரமாக தான் இதை நினைக்கிறேன்.

பையா 2 படத்திற்கான கதையை கார்த்தியிடம் சொல்லி விட்டேன். 14 வருடங்கள் ஆகிவிட்டதே இப்போதுதான் தெரிகிறது. ஆனால் இந்த 14 வருடங்களில் கார்த்தியின் நடிப்பில், தோற்றத்தில் ஒரு மெச்சூரிட்டி வந்துவிட்டதால், ஒரு குழந்தைக்கு அப்பாவாக கூட நடித்து விட்டார் என்பதால் மீண்டும் பையா கதாபாத்திரத்தை திரும்பி பண்ண வேண்டுமா என யோசிக்கிறார். அதனால் இதற்கு பதிலாக வேறு ஏதாவது பண்ணலாமா என்று கேட்டுள்ளார்.

பையா 2 படத்தில் கார்த்தி சார் நடிக்கவில்லை என்றால் வேறு ஒரு ஹீரோவை வைத்து படமாக்கும் விதமாகத்தான் அதை எழுதியுள்ளேன். ஆனால் பையா 2விலும் கார் இருக்கும்.. ஆனால் வேறு காதலர்கள் இருப்பார்கள்” என்று கூறினார்.

 

Share.

Comments are closed.