Friday, May 1

ஹேப்பி ராஜ் _ விமர்சனம்

Loading

ஹேப்பி ராஜ் விமர்சனம்

ஜி வி பிரகாஷின் தந்தை ஜார்ஜ் மரியனை ‘குதிரை முட்டை’ என்று ஊர் மக்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இதனால் ஜிவிக்கு ஏற்படும் வருத்தம் வடுவாக மாறி, அவருடனேயே சேர்ந்து வளர்கிறது.

படித்து முடித்த பிறகு பெங்களூருவில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேரும் ஜிவி பிரகாஷ், அங்கே டீம் லீடராக இருக்கும் ஸ்ரீ கௌரி பிரியாவுடன் இணைந்து பணியாற்றும் சூழல் ஏற்படுகிறது.

அந்த நவநாகரீக அலுவலக சூழலுடனும் உடன் பணியாற்றுபவர்களுடனும் ஒத்துப்போக முடியாமல் தடுமாறும் ஜீவி பிரகாஷ் மீது ஸ்ரீகௌரி பிரியாவுக்கு ஒரு சாஃப்ட் கார்னர் ஏற்படுகிறது.

இருவருக்கும் இடையே ஏற்படும் கெமிஸ்ட்ரி காதலாக மாறி திருமணம் என்ற அடுத்த கட்டத்திற்கு நகரும்போது எதிர்பாராத பிரச்சனைகள் முளைக்கின்றன.

ஸ்ரீகௌரி பிரியாவின் தந்தை அப்பாஸ் மிகப்பெரிய செல்வந்தராக, சோசியல் ஸ்டேட்டஸ் மிக்கவராக இருக்கும்போது அவருக்கு சம்பந்தியாக வர இருக்கும் ஜார்ஜ் மரியன் வெள்ளந்தி கிராமத்து மனிதராக இருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நிச்சயதார்த்தத்தின் போது சம்பந்திகளுக்கு இடையே இருக்கும் சோசியல் ஸ்டேட்டஸ் முரண்பாடுகளால் திருமணத்தையே நிறுத்தும்படி ஆகிறது. விளைவு?  காதலர்கள் பிரிகின்றனர்.

சம்பந்தி ஆக வேண்டிய இருவரும் எப்படி சமரசத்திற்கு வந்தார்கள்? காதலர்கள் இருவரும் இறுதியில் எப்படி இணைந்தார்கள்? என்பதுதான் ஹாப்பி ராஜ் படத்தின் கதை.

ஹேப்பி ராஜ் என்று படத்தின் டைட்டில் இருப்பதாலோ என்னவோ படம் முழுக்க பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் வகையில் ஹேப்பியான காட்சிகள் நிரம்பவே இருக்கின்றன.

குறிப்பாக முதல் பாதி முழுவதும் நகைச்சுவை கலாட்டாக்களால் களை கட்டுகின்றன.

இரண்டாம் பகுதி அதற்கு நேர் மாறாக சென்டிமென்ட் காட்சிகளால் நெகழ வைக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும், குணசித்திர பாத்திரங்களிலும் முத்திரை பதித்த ஜார்ஜ் மரியன் ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தி முத்திரை பதித்திருக்கிறார்.

இந்த ஆண்டு சிறந்த குணச்சித்திர நடிகர்கள் தேர்வு பட்டியலில் இடம்பெறப் போகும் அனைவருக்கும் ‘ஹாப்பி ராஜ்’ படத்தின் மூலம் பயங்கர ‘டஃப்’ கொடுப்பார் ஜார்ஜ் மரியான் என்பது உறுதி.
ஜிவி பிரகாஷின் உயிரோட்டமான  நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.

வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்  பாடல் காட்சிகளிலும் அட்டகாசமாக நடனமாடி அசத்தியிருக்கிறார் ஜீவி.

ஜஸ்டின் பிரபாகர் இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

மதன் கிறிஸ்டபரின் வண்ண ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

“குதிரை முட்டை… குதிரை முட்டை… என்று எல்லோரும் என்னை கிண்டல் செய்கிறார்களே தவிர குதிரை எப்படிடா முட்டை போடும் என்று யாராவது ஒருத்தராவது கேட்பார்கள் என்று பார்த்தால் ஒருவர்கூட கேட்கவில்லை” என்று ஜார்ஜ் மரியான் சொல்லும் காட்சி நெகிழ வைக்கிறது.

உருவ கேலியால் அடங்கிப் போய் முடங்கி விடாமல் நம்பிக்கையுடன் உயர்ந்து எழுந்து சாதிக்கும் ஒருவனின் கதையை நகைச்சுவை என்ற சுகர் கோட்டிங்கில் கொடுத்திருக்கும் இயக்குனர் மரியா ராஜா இளம் செழியனுக்கு தனி பாராட்டு.

மதிப்பெண் 3.5 5