Monday, April 20

நீ Forever _ விமர்சனம்

Loading

நீ Forever _ விமர்சனம்

நாயகன் அஜய் புதிதாக காதல் தொடர்பான செயலி (app) ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.

ஆனால் அவருக்கு காதல் அனுபவம் இல்லாததால் அந்த செயலியை வெற்றிகரமாக அவர் நினைத்த அளவுக்கு உருவாக்க இயலவில்லை.

அதே சமயத்தில் நாயகி மதி திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இருக்கிறார்.

நல்லதொரு காதல் கதையை கொண்டு வந்தால் கண்டிப்பாக அதை படம் எடுக்கலாம் என்று சொல்லுகிறார் ஒரு தயாரிப்பாளர்.

காதல் கதைக்காக டேட்டிங் செயலி ஒன்றில் பெயரை பதிவு செய்து ஆண் நண்பரே தேடுகிறார் மதி.

அந்த டேட்டிங் செயலியில் உறுப்பினராக இருக்கும் நாயகன் அஜய், ஐஸ்வர்யா என்ற பொய் பெயரில் இருக்கும் கதாநாயகி மதியை சந்தித்து பழக ஆரம்பிக்கிறார்.

இவர்கள் இருவரது நட்பு வட்டமும் ‘உரம்’ போட்டு வளர்த்து இந்த காதல் பயிரை செழிப்பாக்குகின்றன.

நாயகன் அஜய், நாயகி மதியை நிஜமாகவே காதலிக்க ஆரம்பிக்கிறார்.

ஆனால் மதியோ டேட்டிங் செயலியில் உள்ள தன் கணக்கை முடித்துக் கொண்டு கம்பி நீட்டி விடுகிறார்.

திடீரென காணாமல் போன மதி கிராமத்தில் உள்ள அஜய் வீட்டுக்கு சென்று அவர்கள் குடும்பத்துடன் பழக ஆரம்பிக்கிறார்.

எல்லா விஷயத்திலும் கண்டிப்பு காட்டும் அஜயின் தாத்தா ஏன் அவ்வாறு இருக்கிறார் என்பது ஒரு பிளாஷ்பேக் மூலம் சொல்லப்படுகிறது.

அஜய் உண்மையான காதலை மதி புரிந்து கொண்டாரா?

அவர் இயக்குனராக வேண்டும் என்ற கனவு நிறைவேறியதா என்பது படத்தின் பிற்பகுதி.

இளைய (இணைய) தலைமுறை தற்போது பயன்படுத்தும் டேட்டிங் செயலியை மையமாக வைத்து இந்த கதையை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் அசோக் குமார்
கலைவாணி.

புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நாயகன் அஜய் வேடத்தில் சுதர்சன் கோவிந்த் திறம்பட நடித்திருக்கிறார். உயரம் இவரது பிளஸ் பாயிண்ட்.

நாயகி மதியாக வரும் அர்ச்சனா ரவி முற்பகுதியில் இளமை ததும்பும் நடிப்பிலும், பிற்பகுதியில் முதிர்ச்சியான நடிப்பிலும் ஜொலிக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ராஜா பட்டாச்சார்ஜின் தரமான ஒளிப்பதிவு தான். வண்ணமயமான ஒளிப்பதிவில் நகர காட்சிகளில் வசீகரிக்கும் இவரது கேமரா கிராமத்து அழகையும் அள்ளி எடுக்கத் தவறவில்லை.

கு.கார்த்திக்கின் பாடல்களும், அஸ்வின் ஹேம்நாத் இசையும் ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன.

கதைக்குள் ஒரு கதையாகவும்,  திரைப்படத்துக்குள் ஒரு திரைப்படமாகவும் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

இளமை ததும்பும் இந்தக் காதல் கதை இளைய தலைமுறையை மட்டுமல்ல எல்லோரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.

மதிப்பெண் 3.5/5