Thursday, May 14

காக்கி சர்க்கஸ்: இணைய தொடர் விமர்சனம்

Loading

காக்கி சர்க்கஸ்: இணைய தொடர் விமர்சனம்

சிறைச்சாலை என்றாலே பொது புத்தியில் ஒரு பிம்பம் பதிந்திருக்கும்.

ஆனால், ஒரு கிளைச் சிறைச்சாலையை மையமாக வைத்து, அங்கு நடக்கும் ஒரு விசித்திரமான திருட்டை மிக சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை உணர்வோடும் காட்சிப்படுத்தியிருக்கிறது இந்த ‘காக்கி சர்க்கஸ்’ இணையத் தொடர்.

ஒரு கிளை சிறைச்சாலையில் ஜெயிலராக பணி புரியும் முனீஷ்காந்த் எழுத்தாளராகவும் இருக்கிறார். புத்தக வாசிப்பு பழக்கம் என்பது கைதிகளை மனமாற்றம் செய்து, அவர்களை திருத்தும் என்று திடமாக நம்புகிறார். சிறைச்சாலையை வெறும் தண்டனைக்கூடமாகப் பார்க்காமல், மனிதர்களைப் பண்படுத்தும் இடமாக நினைக்கிறார்.

கைதிகளுக்காக நூலகம் அமைப்பதும், தான் எழுதும் புத்தகங்கள் மூலம் அவர்களைத் திருத்த முயல்வதும் என ஒரு வித்தியாசமான அதிகாரியாக அவர் கவனம் ஈர்க்கிறார்.

அவருக்கு நேர்மாறாக, காவல் சீருடையின் கம்பீரத்தையும் அதிகாரத்தையும் மட்டுமே விரும்பும் ஒரு இளைஞனாக சுபாஷ் செல்வம் வருகிறார்.

இவர்களுக்கு இடையில், பாதுகாப்பைத் தாண்டி சிறைக்குள் இருக்கும் கோவில் உண்டியலிலேயே ஒருவன் கைவரிசை காட்ட, அந்தத் திருட்டு போலீஸின் மானப் பிரச்சினையாக மாறுகிறது.

அந்தப் பணத்தை மீட்க சுபாஷ் செல்வம் எடுக்கும் முயற்சிகளும், அதில் குறுக்கிடும் எதிர்பாராத சிக்கல்களுமே காக்கி சர்க்கஸ் இணைய தொடர்.
நடிகர் முனீஷ்காந்த் தனது வழக்கமான உடல்மொழியைக் குறைத்துக் கொண்டு, ஒரு முதிர்ச்சி மிக்க அதிகாரியாகவும், எழுத்தாளராகவும் தன்னை உருமாற்றிக் கொண்ட விதம் பாராட்டுக்குரியது.

சுபாஷ் செல்வம், திருடனைப் பிடிக்கத் துடிக்கும் காட்சிகளில் காட்டும் வேகமும் படபடப்பும் தொடருக்கு ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் அளவுக்கு சுவையைக் கூட்டுகிறது.

குறிப்பாக, திருடனாக வரும் மலையாள நடிகர் ராஜேஷ் மாதவன், மிக அமைதியாக வலம் வந்தாலும் தனது தனித்துவமான நடிப்பால் திரை முழுக்க ஆதிக்கம் செலுத்துகிறார்.

பணத்திற்காக இல்லாமல், ஒருவித த்ரில்லிங் அனுபவத்திற்காக திருடன் தொடங்கும் ஒருவன் பின்னர் பணத்தை கொள்ளையடிக்க ஆரம்பிக்கும் ‘தொழில் வளர்ச்சி’ சுவையான திரைக்கதை மூலம் சின்னத்திரையில் சொல்லப்படுகிறது. வின்சு ஷாம், கெளதமி எனத் தொடரில் வரும் மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி, சிறைச்சாலையின் சூழலைச் சலிப்புத் தட்டாத வகையில் தனது கேமரா கண்களால் அழகாகக் கடத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் சேவியர் மற்றும் விபின் பாஸ்கர் ஆகியோரது பின்னணி இசை, நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பு கலந்த காட்சிகளுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது.

இயக்குநர் அமீன் பாரிப், ஒரு சாதாரணக் கருவை எடுத்துக் கொண்டு அதில் பல கிளைக்கதைகளைப் பின்னியது அவரது திறமையைக் காட்டுகிறது.

குறிப்பாக, ஒரு ஜடப்பொருளான கோவில் உண்டியலை ஒரு கதாபாத்திரமாகவே உருவகப்படுத்தி, அதற்கான பின்னணி கதையைச் சொல்லியிருப்பது புதுமை.

புத்தக வாசிப்பு அவசியம் என்றாலும், வாழ்க்கையை எதார்த்தமான சூழல்களே அதிகம் கற்றுக்கொடுக்கும் என்ற ஆழமான கருத்தை எளிய முறையில் இந்தப் படைப்பு பதிவு செய்திருக்கிறது.

சில இடங்களில் எடிட்டிங் இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம் என்றாலும், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு கலகலப்பான பொழுதுபோக்குத் தொடராக இது மிளிர்கிறது.

மொத்தத்தில், இந்த ‘காக்கி சர்க்கஸ்’ கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு பொழுதுபோக்கு சித்திரம்.