Thursday, May 14

மனிதன் தெய்வமாகலாம் _ விமர்சனம்

Loading

மனிதன் தெய்வமாகலாம்_ விமர்சனம்

கிராமத்தில் மிக எளிய வாழ்க்கை நடத்தி வரும் நாயகன் செல்வராகவனுக்கும் நாயகி குஷிக்கும் திருமணம் நிச்சயமாகிறது.

குஷியின் அண்ணனுக்கு, தன் தங்கையை செல்வராகவனுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை என்றாலும், தங்கையின் விருப்பத்துக்காக திருமணத்துக்கு ஒத்துக் கொள்கிறார்.

செல்வ ராகவனின் புறத்தோற்றத்தை விட அவரது நல்ல மனசும், நேர்மையான நடவடிக்கைகளையும் கவனித்த காரணத்தால்தான் குஷி மிகவும் விருப்பப்பட்டு செல்வராகவனை மணந்து கொள்கிறார்.

திருமணத்துக்குப் பின் தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக நெடுஞ்சாலையில் ஒரு உணவு விடுதியை ஆரம்பிக்கிறார் செல்வராகவன்.

எம் எல் ஏ ஒய் ஜி மகேந்திராவின் மைத்துனரான மைம் கோபி அந்த உணவு விடுதியில் மது அருந்த வரும்போது செல்வ ராகவன் அதைத் தடுக்கிறார். இதனால் இருவருக்கும் உரசல் ஏற்படுகிறது.

பின்னர் வேறு ஒரு பிரச்சனை தொடர்பாக ஒய் ஜி மகேந்திராவை மைம் கோபி கன்னத்தில் அறைகிறார்.
செல்வராகவனும் அப்போது அங்கே இருந்ததால், அவரால்தான் தன் மாமா ஒய் ஜி மகேந்திரா தன்னை அடித்து அவமானப்படுத்தியதாகக் கருதுகிறார் மைம் கோபி.

கிராமத்தில் சிறியதொரு தொழிலகம் ஒன்றை நடத்தி வரும் மைம் கோபி அங்கு பணிபுரியும் பெண்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து, அவர்கள் பணத்தை திருப்பிச் செலுத்த திணறும்போது, பாலியல் பலாத்காரம் செய்து அவர்கள் வாழ்க்கையை அழிக்கிறார்.

இதனால் பல பெண்கள் காணாமல் போகிறார்கள். சிலர் மரணமான முறையில் இறந்து போகிறார்கள்.

மனைவியை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் கணவன் புகார் செய்யப் போனால், போலீசாரே “என்னையா… உங்க ஊர்ல மட்டும் பொம்பளைங்க இப்படி நிறைய பேர்  காணாமல் போறாங்க?” என்று கேட்கும் அளவுக்கு மைம் கோபியின் லீலைகள் இருக்கின்றன.

இந்த சூழலில் செல்வராகவனின் அக்கா மகளான சிறுமி திடீரென மர்மமான முறையில் இறந்து கிடக்கிறாள்.

ஒரு நாள் உணவு விடுதியில் இருக்கும்போது மனைவி இறந்து விட்டதாக செல்வ ராகவனுக்கு தகவல் வருகிறது.
அதிர்ந்து போய் வீட்டுக்கு வந்தால், மனைவி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வருகிறது.

குஷியின் தற்கொலைக்கு காரணம் என்ன?
மனைவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை செல்வராகவன் எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் கதை.

அப்பாவி கிராமவாசி வேடத்திற்கு செல்வராகவன் கச்சிதமாக பொருந்துகிறார். அவரது உடல் மொழியும் வசன உச்சரிப்பும் இந்த பாத்திரத்திற்கு நன்றாகவே பலம் சேர்த்திருக்கிறது.

பக்கத்து வீட்டு பெண் போல் இயல்பான தோற்றத்தில் இருக்கும் நாயகி குஷி கணவன் மீது பாசத்தை பொழியும் காட்சிகளில் நினைவில் நிற்கிறார்.

பாதை, பள்ளிக்கூடம், உட்பட அடிப்படை வசதிகள் இல்லாத தன் கிராமத்துக்கு சலிக்காமல் மனு எழுதிக் கொடுத்து நடையாய் நடக்கும் பெரியவர் என்றென்றும் மனதில் நிற்கும் அருமையான பாத்திரம்.

கிராமத்து வாழ்வியலை அழகாக படம் பிடித்திருக்கும் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத், அடுத்த தலைமுறைக்காக தாய் மண்ணை காக்க வேண்டிய அவசியத்தையும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

ரவிவர்மாவின் ஒளிப்பதிவு அந்த கிராமத்தில் நாமே வசித்த அனுபவத்தை தருகிறது.

ஏகே பிரியன் இசையில் உருவான பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன.

ஃபேக்டரி வேலைக்கு செல்லும் பெண்கள் கரடு முரடான சாலையில் வாகனத்தில் பயணிக்கும் போது இடுப்பு வலியை பற்றி இரட்டை அர்த்தம் தொனிக்க பேசும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது சாதாரண கிராமத்து மனிதரான செல்வராகவன் மூலம் சொல்லியிருப்பதை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்திருதால் சிறப்பாக அமைந்திருக்கும்.