![]()
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு _ விமர்சனம்
வறுமையின் பிடியில் சிக்குண்ட கிராமத்து இளைஞன் வெற்றியின் வாழ்க்கை சூழலே கதையின் மையப்புள்ளி.
தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் தவிக்கும் அவருக்கு, பொறுப்பின்றி அலையும் தந்தை கூடுதல் பாரம்.
தாயின் சொற்ப வருமானத்தில் நகரும் குடும்பத்தை, கந்து வட்டிக்காரனின் கொடூர நெருக்கடி நிலைகுலையச் செய்கிறது.
கடன் சுமையால் தள்ளாடி, கோடு தாண்டும் வெற்றியின் பயணம், அடுத்து வரும் திருப்பங்களால் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கதாநாயகனாக வரும் வெற்றி, கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முனைந்திருக்கிறார்; இயக்குநரின் வழிகாட்டலும் அதில் தெளிவாகத் தெரிகிறது.
கதாநாயகி பிரிகிடா இயல்பான நடிப்பால் கவர்கிறார். “நேர்மையான திருடன்” என்று நாயகனைக் கேலி செய்வதிலும், “கடைசியா ஒரு திருட்டு பண்ணுப்பா… வட்டிக்கு இல்லை, அசலை முடிக்க” என்று ஆவேசப்படுவதிலும் தனித்து நிற்கிறார். பாடல்களிலும் கவனத்தை ஈர்க்கிறார்.
அதிகார மையமாக வரும் ரங்கராஜ் பாண்டே மற்றும் வெற்றி இடையேயான காட்சிகள் சுவாரசியம். இருவரின் நடிப்பிலும் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், அந்த உரையாடலின் ஆழம் பார்வையாளர்களின் மனதில் அழுத்தமாகப் பதிகிறது.
மரண தண்டனையை நிறைவேற்றும் ‘ஹேங்மேன்’ கதாபாத்திரத்தில் வரும் சுப்ரமணிய சிவா, தடுமாறும் நடை, வெற்றுப் பார்வையால் மிரட்டுகிறார். “கயிற்றுல நெய் தடவியிருக்கேன் சாமி… வலிக்கக் கூடாதுல” என்று அவர் பேசும் வறண்ட தொனி உறைய வைக்கிறது.
நாயகனின் நண்பனாக வரும் லொள்ளு சபா மாறன், நள்ளிரவு வயல்வெளியில் திருடும் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் காட்சியில் சிரிக்க வைக்கிறார். தாயாராக நடித்தவர், கந்து வட்டிக்காரராக வரும் கவிதா பாரதி, கன்யா பாரதி, லிஸ்ஸி ஆண்டனி என அனைவரும் திரைக்கதைக்குத் தேவையான இயல்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கூர்மையான வசனங்கள்தான். “அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாகும் போது வராத கூச்சம், திருடன் மகன் திருடனாகும் போது ஏன் வர வேண்டும்?”, “திருடன்னு ஒப்புக்கிற அளவுக்கு நேர்மை இருக்கு… ஆனா நேர்மையே இல்லாம திருடுறீங்களே”, “நம்ம மக்களுக்கு அடுத்தவன் விஷயம்னா அத்தனை ஆர்வம்” போன்ற வரிகள் ஒவ்வொன்றும் சிந்திக்க வைக்கின்றன.
சாதாரண திருட்டில் தொடங்கி மரண தண்டனையின் நியாயம் வரை விவாதிக்கும் பாங்கு, இயக்குநரின் சமூகப் பொறுப்பையும் கலை உணர்வையும் காட்டுகிறது.
தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. ‘உசுருக்கு விலை என்ன’ பாடல் கேள்விகளை எழுப்ப, பாரதியின் ‘ஆதலினால் காதல் செய்வீர்’, பாரதிதாசனின் ‘முத்தம் கொடு’ ஆகிய பாடல்கள் உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளன. பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்குப் பெரும் பலம்.
எம்.வி. பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவில் சிறை அறை, வீடு என மிகக் குறைந்த இடங்களே முதன்மையாக வந்தாலும், சலிப்பு தட்டாத கோணங்களால் காட்சிகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். சிறையின் மேலிருந்து எடுக்கப்பட்ட பறவைப்பார்வைக் காட்சிகளும், வெளிப்புறக் காட்சிகளும் பார்வைக்கு விருந்து.
தயாள் பத்மநாபனின் திரை உருவாக்கத்தில் இது மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்.
எளிய குடும்பப் பின்னணியில் மெதுவாகத் தொடங்கும் கதைக்களம், அரசின் அதிகாரப்பூர்வ உயிர்ப்பலி என்ற புள்ளியை தொட்டதும் வேகம் எடுக்கிறது.
வட்டிக்கடைக்காரனைக் குத்தியவுடன் “அய்யோ” என்று நாயகன் கண்களை மூடித் தவிக்கும் அந்த ஒரு விநாடி, இயக்குநரின் நுட்பமான உருவாக்கத்திற்கு சான்று.
சாதி, பணம், அதிகாரம் ஆகிய அமைப்புகள் நீதித்துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சூழலில், மரண தண்டனை எந்த அளவுக்குப் ஆபத்தானது என்பதை இந்தப் படம் ஆழமாக விவாதிக்கிறது.
மனித உரிமைகள் மற்றும் நாகரிகச் சமூகத்தின் முக்கியக் கேள்வியை எழுப்பியிருக்கும் இந்தத் திரைப்படம், அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படைப்பு.


