![]()
‘டிசி’ என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜை நடிகராக அவதாரம் எடுக்க வைத்து திரையரங்குகளில் ஒரு அதிரடி விருந்தை படைத்திருக்கிறது.
காவல்துறையின் ஆயுதங்களை திருடியதுடன், அதிகாரியையும் கொன்றுவிட்டு தப்பிக்கும் தாஸ் என்னும் தேவதாஸாக லோகேஷ் கனகராஜ் மிரட்டுகிறார்.
ஒரு விடுதியில் தலைமறைவாகும் போது பார்வதியை சந்திக்கிறார். அந்த காதல் நொடிப் பொழுதில் முடிவுக்கு வர, காவல் துறையின் பிடியில் இருந்து தப்பிக்கும் தாஸின் வாழ்க்கையில் சந்திரா நுழைகிறார்.
பாலியல் தொழிலாளியான சந்திராவுக்கும் தாஸுக்கும் இடையிலான இந்த பயணம், வன்முறை நிறைந்த பாதையில் எப்படி நகர்கிறது என்பதே கதை.
அர்பணிப்பு மிக்க நடிப்பால் படத்தை வேறு உயரத்திற்கு கொண்டு சென்று திரையரங்க அனுபவத்தை அற்புதமமாக்கி இருக்கிறார் நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இயக்குநராக வெற்றி கண்ட லோகேஷ் கனகராஜ், நடிகராகவும் தன் அறிமுக படத்திலேயே மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உணர்ச்சிகளை இன்னும் ஆழமாக காட்ட வேண்டிய இடங்களில் சிறிய தடுமாற்றம் இருந்தாலும், ஒரு மாஸ் கதாநாயகனாக தன் பங்களிப்பை கச்சிதமாக செய்திருக்கிறார்.
சந்திராவாக வரும் வாமிகா கேபிக்கு இது முக்கியமான கதாபாத்திரம். குறிப்பாக அவர் முதல் முறை துப்பாக்கியை ஏந்தும் இடத்தில் அரங்கம் அதிர்கிறது. பார்வதியாக வரும் சஞ்சனாவின் தாக்கம் படம் முழுக்க நீடிக்கிறது.
கதாபாத்திரங்களின் பின்னணியும் மனித உணர்வுகளும் அழகாக கையாளப்பட்டிருப்பது படத்தின் பெரிய பலம்.
வழக்கம்போல் ரசிகர்களின் செவிப்பறை கிழிந்து போகும் அளவுக்கு இசை மழை பொழிந்து தள்ளி இருக்கிறார் அனிருத்.
முந்தைய ஆண்டு சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்ற இயக்குனர் அருண் மாதேஸ்வரன், அந்த விருதை அரசாங்கம் தட்டிப் பறித்துக் கொள்ளாது என்ற தைரியத்தில்தான், முதல் வரிசை பார்வையாளன் மீது ரத்தம் தெறிக்க விடும அளவுக்கு இவ்வளவு வன்முறைக் காட்சிகள் நிறைந்த படத்தைக் கொடுத்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அதீத வன்முறை, சில இடங்களில் உரையாடல்கள் இயல்பு மீறி இருப்பது போன்ற குறைகள் இருந்தாலும், லோகேஷ் மற்றும் வாமிகாவின் மாஸ் தருணங்களுக்காகவும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் தாராளமாகக் கண்டு களிக்கலாம்.


