Monday, April 20

L S S விமர்சனம்

Loading

L S S விமர்சனம்

கல்லூரியில் பயிலும் ஆதவ் கிருஷ்ணா மிகவும் புத்திசாலி மாணவர்.

எந்த அளவுக்கு புத்திசாலி என்றால் தன்னுடன் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்தி, விளக்கமாக புரியும்படி சொல்லித் தரும் அளவுக்கு புத்திசாலி.

மாணவி சிம்ரன் அத்வானியும் ஆதவ் கிருஷ்ணாவும் காதலிக்கின்றனர்.

மிகப்பெரும் செல்வந்தர் வீட்டு பெண்ணான சிம்ரனின் தாயார், தன் கணவரை விட்டுப் பிரிந்து காசியில் வசித்து வருகிறார்.

தன் காதலைப் பற்றி தாயாரிடம் சொல்லி அவருடைய ஆசீர்வாதத்தை வாங்க வேண்டும் என்பதற்காக ஆதவ் கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு காசிக்கு செல்கிறார் சிம்ரன்.

அங்கு எதிர்பாராமல் ஒரு விபத்தில் சிக்கியதால் மூளைச் சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

தன் மகளை ஆதவ்கிருஷ்ணா கடத்திச் சென்று விட்டார் என்று சிம்ரனின் தந்தை போலீசில் புகார் செய்கிறார்.

ஆதவ் கிருஷ்ணாவை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம் என்ற பெயரில் மிகக் கடுமையாக தாக்குகின்றனர் காசி காவல்துறையினர்.

சிம்ரனின் தாய் தந்தை இருவரும் பிரிந்து இருக்க காரணம் என்ன?

மூளை சாவு ஏற்பட்ட சிம்ரன் குணமடைந்தாரா?

காதலர்கள் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா என்பது படத்தின் பிற்பகுதி.

இளமை ததும்பும் காதல் படமாக உருவாகி இருக்கும் ‘எல் எஸ் எஸ்’ படத்தின் நாயகன் ஆதவ் கிருஷ்ணா, நாயகி சிம்ரன் அத்வானி இருவரும் நிஜ காதலர்களைப் போலவே மிக இயல்பாக நடித்திருக்கின்றனர்.

ஆதவன் தந்தையாக வரும் படவா கோபியும், தாயாராக வரும் வினோதினி வைத்தியநாதனும் பாசமுள்ள பெற்றோராக நெஞ்சில் நிறைகின்றனர்.

ஆனால் இளைய மகனாக வரும் ஆதவ் கிருஷ்ணாவின் தம்பி பேசும் வசனங்களும் வயதுக்கு மீறி செய்யும் காரியங்களும் தான் ஓவராக இருக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என் எஸ் சதீஷ்குமாரின் ஒளிப்பதிவுதான். வாரணாசி பட காட்சிகளும் அதை ஒளிப்பதிவாளர் படமாக்கிய நேர்த்தியும் சில நாட்கள் நாமே அங்கு தங்கி இருந்துட்டு வந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

அமிர்தராஜ் கதை வசனத்தில் உருவான இந்தப் படத்தை ஆர் மகாலட்சுமி முருகன் இயக்கியிருக்கிறார்.

வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் அதை சற்று மாறுபட்ட முறையில் திரைக்கதை அமைத்து இயக்குனர் சொல்லி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் பல காட்சிகளின் நீளத்தை குறைத்து, விறுவிறுப்பை கூட்டி திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் சிறப்பான படமாக உருவாகி இருக்கும்.

மதிப்பெண் 3/5