மேடை நடன கலைஞர்களின் பசியை போக்குங்கள்! – மன்சூரலிகான் கோரிக்கை

0

Loading

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க அரசு மேற்கொண்டிருக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையால், தமிழகம் பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்தாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கும், கூலித்தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கி வரும் நிலையில், மேடை நடன கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வருக்கு நடிகர் மன்சூரலிகான் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா காலத்தில் திறம்பட செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு என் பாராட்டுகளும், நன்றிகளும்.

தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான மேடை நடன கலைஞர்கள் இருக்கிறார்கள். தற்போதைய ஊரடங்கினால், இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, உணவுக்கே வழியின்று தவித்து வருகிறார்கள். இவர்கள் மட்டும் அல்லாமல், மேடை நாடக நடிகர்கள், சினிமா துணை நடிகர்கள் உள்ளிட்ட சினிமா துறையில் உள்ள தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு பொதுமக்களுக்கும் மற்றும் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் போல, மேடை நடன கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்களுக்கும் வழங்க வேண்டும், என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது கோரிக்கையில் நடிகர் மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

Share.

Comments are closed.