அமெரிக்க இசைப்போட்டியில் தமிழ் பாடலுக்கு வெற்றி தேடித்தந்த எஸ்.ஜே.ஜனனி!

0

Loading

*உலக அமைதிக்காக ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து பணியாற்றும் தமிழ் பெண் இசையமைப்பாளர்

*உலக அமைதிப் பாடல் விருது பெற்ற இசையமைப்பாளர் ஜனனிக்கு அக்-2௦ல் பாராட்டு விழா நடத்தும் பிரம்மா குமாரிகள் அமைப்பு

*பிரபா பட இசையமைப்பாளர் செய்த உலக சாதனை ; அக்-2௦ல் பிரம்மா குமாரிகள் அமைப்பு பாராட்டு விழா

இசையை ஒரு கடல் என்று சொல்வார்கள்.. ஆனால் ஐந்து வயதிலிருந்து இசை பயிற்சி பெற்று இளம் வயதிலேயே பாடகி, இசை தொகுப்பாளர், இசையமைப்பாளர் என இசைக்கடலில் முங்கி முத்தெடுத்து பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் தான் எஸ்.ஜே.ஜனனி. கர்நாடக, இந்துஸ்தானி, பஜன் என இசையில் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த இவர் இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளை நடத்தியுள்ளார் என்றால் இதைவிட மிகப்பெரிய சாதனை வேறு ஏதும் இருக்க முடியாது. அதேபோல இளமணி விருது, தேசிய விருது, தமிழக அரசு விருது, சமீபத்தில் கூட கலைமாமணி விருது என இந்திய விருதுகள் பலவற்றுக்கு சொந்தக்காரரான இந்த எஸ்.ஜே.ஜனனி இசைத்துறையில் எந்த பின்னணியும் இல்லாமல் தானாகவே முன்னேறி இவ்வளவு சாதனைகளை செய்துள்ளார் என்பதுதான் இதில் ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம்.

சிறுவயதிலேயே இவர் உருவாக்கிய பூங்காற்று என்கிற ஆல்பத்தில் அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார் என்பது இன்னுமொரு ஆச்சரியம் இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் அதுமட்டுமல்ல இவரே இசையமைத்து பாடிய, புதிய உலகம் மலரட்டுமே என்கிற பாடலுக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் “க்ளோபல் பீஸ் சாங் விருதுகள்” (Global Peace Song Awards) அமைப்பு “உலக அமைதிப் பாடல் விருதினை வழங்கியுள்ளது. இந்தியாவில் அதில் தமிழகத்திலிருந்து சென்ற ஒரு தமிழ் பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது மிகப் பெருமையான விஷயம்..

அதுமட்டுமல்ல கலிபோர்னியாவில் உள்ள “ப்ராஜக்ட பீஸ் ஆன் எர்த்” (Project Peace On Earth) என்கிற அமைப்பு இவரை உலக அமைதி இசை தூதுவர்களில் ஒருவராகவும் அந்த அமைப்பின் ஆலோசனை குழுவில் உறுப்பினராகவும் நியமித்துள்ளது. ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்கள் இடம் பெற்றுள்ள அந்த குழுவில் இந்தியாவிலிருந்து பங்கேற்றுள்ள ஒரே நபர், அதிலும் ஒரு பெண் உறுப்பினர் என்கிற பெருமையும் தமிழகத்தை சேர்ந்த ஜனனிக்கு கிடைத்துள்ளது.

மேலும் பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழக மாணவியான இவருக்கு தற்போது விருது பெற்றுத்தந்துள்ள ‘புதிய உலகம் மலரட்டுமே’ என்கிற இந்தப்பாடல் பிரம்மா குமாரிகள் பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் அமைதியை பரப்பும் விதமாக நடத்தப்படும் இந்த போட்டியில் கலந்து கொள்ள உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பாடல்கள் பங்கு பெற்றன. அதில் முதல் பத்து இடத்தில் நாமினேட் செய்யப்பட்டு, மக்கள் வாக்கெடுப்பின் மூலம் இந்த பாடல் இறுதிப்போட்டியிலும் தேர்வாகி இந்த விருதை பெற்றுள்ளது.. இதையடுத்து எஸ்.ஜே.ஜனனியை கௌரவிக்கும் விதமாக பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகம் அமைப்பின் சார்பாக வரும் அக்டோபர் 20ஆம் தேதி அவருக்கு பாராட்டு விழா நடத்துகின்றனர்.. சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் இந்த விழா நடைபெற இருக்கிறது.

நிறைய விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ள ஜனனி, கடந்த டிசம்பரில் வெளியான பிரபா என்கிற படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.. மறைந்த இசை மேதை பாலமுரளிகிருஷ்ணா கடைசியாக பாடல் பாடியது இந்த படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல மகாகவி பாரதியாரின் வந்தே மாதரம் என்கிற இசை ஆல்பத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த ஆல்பத்தில் உள்ள மன்னன் இமயமலை எங்கள் மலையே என்கிற பாடலை கேட்டுவிட்டுத்தான் இவருக்கு பிரபா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு தேடி வந்ததாம்.

“ஐந்து வயதில் இருந்தே எல்லாவிதமான மேடை கச்சேரிகளும் செய்து வருவதால், அனைத்து விதமான பாடல்களுடனும் இசையுடனும் பயணித்து வருவதாலும் சினிமாவில் இசை அமைப்பதற்கு எனக்கு எந்த வித சிரமமும் ஏற்படவில்லை.. அதுமட்டுமல்ல எனது குரு பாலமுரளிகிருஷ்ணா எனக்கு நிறையவே ஊக்கம் தந்தார்” என்கிறார் எஸ்.ஜே.ஜனனி. மேலும் இஅவரது மாமா சங்கர் கணேஷ் இவரது ஒவ்வொரு முயற்சியிலும் இவரை உற்சாகப்படுத்தி பின்னணியில் மிகப்பெரிய தூணாக இருந்து வருகிறார். இதையடுத்து சில படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தாலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து இசையமைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் எஸ்.ஜே.ஜனனி.

Share.

Comments are closed.