![]()
பராசக்தி _ விமர்சனம்
60களின் மத்தியில் தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரிந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களுடன் சில கற்பனை கதாபாத்திரங்களையும் உலவ விட்டு ஓர் அழகான, ஆழமான, அற்புதமான படத்தை வழங்கி இருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.
இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக புறப்படும் மாணவ சக்தியை ஒருங்கிணைத்து தலைமை தாங்குகிறார் மாணவர் சிவகார்த்திகேயன்.
இந்தப் போராட்டத்தில் நெருங்கிய நண்பன் உயிரிழந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத சிவகார்த்திகேயன், இனி எந்த உயிரையும் இழக்கக்கூடாது என்ற முடிவுடன் போராட்டத்தை கைவிடுகிறார்.
ஆனால் சில ஆண்டுகளிலேயே மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக இறங்க காலம் அவரை கட்டாயப்படுத்துகிறது.
அதிகார வர்க்கத்தின் ஆக்டோபஸ் கரங்களாக நீளும் போலீஸ் அதிகாரி ரவி மோகன் மிகத் தீவிர முனைப்புடன், சிவகார்த்திகேயன் உட்பட அனைத்து போராட்டக்காரர்களையும் அழித்தொழிக்க இறங்குகிறார்.
அவரை எதிர்கொண்டு போராட்ட களத்தில் சிவகார்த்திகேயன் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் பராசக்தி படத்தின் கதை.
மாணவர் தலைவர் செழியன் வேடத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஆதிக்கம் செலுத்த முயலும் இந்தி மொழிக்கு எதிராக அனல் தெறிக்க அவர் பேசும் வசனங்கள் அரங்கையே அதிர வைக்கின்றன.
நேர்மறை பாத்திரங்களிலேயே பார்த்து பழக்கப்பட்ட ரவி மோகன் எதிர்மறை வேடம் ஏற்றாலும் தன் நேர்த்தியான நடிப்பால் அந்தப் பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.
இதேபோல் அதர்வா முரளியும் சிவகார்த்திகேயன் தம்பியாக துடிப்பான வேடத்தில், துள்ளலாக நடித்து நம் நெஞ்சில் நிறைகிறார்.
மூன்று கதாநாயகர்கள் இருக்கும் படத்தில் கதாநாயகிக்கு என்ன பெரிதாக வாய்ப்பு இருந்து விடப் போகிறது என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கி விடுகிறது ஸ்ரீ லீலாவின் பாத்திரப்படைப்பு. போராட்டத்திற்கு உதவி செய்யும் வலுவான வேடம் அவருக்கு.
சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் ‘கற்பகம்’ படத்தின் போஸ்டர்கள் தொடங்கி நீராவி ரயில் இன்ஜின் வரை ப்ரொடக்ஷன் டிசைனர் கார்த்திக் ராஜ்குமாரின் கைவண்ணம் தெரிகிறது.
ரயிலில் நடக்கும் சண்டைக் காட்சிகள் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் திறமைக்கு சான்று.
ஆர்ட் டைரக்ஷன் டிபார்ட்மென்ட்டும் கேமரா டிபார்ட்மெண்ட்டும் கைகோர்த்து கதை நடக்கும் காலகட்டத்திற்கு பார்வையாளர்களையும் அழைத்துச் சென்று விடுகிறார்கள்.
கதை ஓட்டத்திற்கு இடையூறு செய்யாத பாடல் காட்சிகளும், ஜி வி பிரகாஷின் பின்னணி இசையும் படத்துக்கு வெகுவாக பலம் சேர்த்து இருக்கின்றன.
“ரத்தினமாலா…” பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.
அறிஞர் அண்ணா, கலைஞர், ஜவஹர்லால் நேரு ஆகியோரை பாத்திரங்களாக படத்தில் பார்ப்பது ஒருவித பரவசத்தை தருகிறது என்பதில் ஐயமில்லை.
படத்தின் துவக்கத்திலேயே பார்வையாளர்களை ஒன்ற வைத்து விடும் திரைக்கதை, படம் முடியும் வரை அதே விறுவிறுப்புடன் அமைக்கப்பட்டு இருக்கிறது.
படம் முழுக்க ரசிக்க தகுந்த காட்சிகள் ஏராளம்… உதாரணத்திற்கு ஆக்ரோஷமான சண்டையில் ஆரம்பித்து, அன்பான அரவணைப்பில் முடியும் அண்ணன் தம்பி சண்டையை சொல்லலாம்.
சிவகார்த்திகேயன் புகழ் கிரீடத்தில் மற்றுமோர் ஒளி வீசும் வைரமாக ஜொலிக்கும் ‘பராசக்தி’ இன்றைய இ(ளை)ணைய தலைமுறை கண்டிப்பாக தவற விடாமல் பார்க்க வேண்டிய படம்.
மதிப்பெண் 4.75/5


