Tuesday, February 17

ராஜா சாப்_ விமர்சனம்

Loading

ராஜா சாப்_ விமர்சனம்

தாய் தந்தை இல்லாமல் தன் பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறார் பிரபாஸ்.

ஞாபக மறதி நோயால் அவதிப்படும் பாட்டிக்கோ இளம் வயதில் தன்னை விட்டு பிரிந்து போன கணவரை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்பது ஆசை.

காணாமல் போன தாத்தா,  சார்மினார் பக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் இருப்பது தெரிந்து, அவரை தேடி அங்கு செல்கிறார் பிரபாஸ்.

அங்கே கன்னியாஸ்திரி ஆக மாற இருக்கும் நிதி அகர்வாலைப் பார்த்ததும் அவர் மீது காதல் கொள்கிறார்.

சமுத்திரகனியின் பேத்தியான மாளவிகா மோகனனும் ஒரு பணப்பெட்டியுடன் பிரபாஸுக்கு உதவ வந்து அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

போலீஸ்காரராக இருக்கும் விடிவி கணேஷ் உதவியுடன் பிரபாஸ் ஒரு வழியாக இறந்து போனதாக நம்பப்படும் தாத்தாவின் ஆவி நடமாடும் பேய் பங்களாவுக்குள் நுழைந்து விடுகிறார்.

இதுவரை இதுவரை ரொமான்டிக்காக சென்ற ராஜா சாப் திரைப்படம் ட்ராக் மாறி மாய மந்திர தந்திர காட்சிகள் நிரம்பிய அம்புலிமாமா கதையாகி விடுகிறது.

மாய மந்திர தந்திர கதை என்றால் இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என்பதால், இயக்குனர் மாருதி ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு படத்தை நகர்த்துகிறார்.

பிரபாஸை நம்பியதை விட அதிகமாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளைத் தான் இயக்குனர் மாருதி நம்பி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

பிரபாஸின் கால்ஷீட்டை வீணடித்தது போதாது என்று மும்பையில் இருந்து சஞ்சய் தத்தை வரவைத்து வில்லனாகி, அவரையும் வீணாக்கி இருக்கிறார்கள்.

படம் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும் படத்தை உட்கார்ந்து பார்க்கும்படி செய்திருப்பது ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியின் கேமராதான்.

மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோருடன் பிரபாஸின் ரொமான்டிக் காட்சிகள் முதல் பாதியை நகர்த்த பெருமளவில் உதவி இருக்கின்றன.

ராம் லக்ஷ்மன் மற்றும் கிங் சாலமன் ஆகியோர் அமைத்திருக்கும் சண்டை காட்சிகள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கின்றன.

தமன் இசையில் உருவான பாடல்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் ரசிக்க வைக்கின்றன. ஆனால் பின்னணி இசைதான் காதை வதம் செய்கிறது.

பிரபாஸின் ரசிகர்களை குறி வைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவான ராஜா சாப் எதிர்பார்த்த அளவு இல்லை என்று தான் கூற வேண்டும்.