பயணிகள் கவனிக்கவும் – விமர்சனம்
சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பதிவிடுவதும், அதன் உண்மைத் தன்மையைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் பலர் பகிர்வதும் எவ்வளவு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கும் மிகச் சரியான உதாரணம் பயணிகள் கவனிக்கவும்.
பேசும் திறன் குறைந்த மாற்றுத் திறனாளியான விதார்த், உடல் நலமின்றி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் மகளை இரவு முழுக்க உறக்கமின்றி கவனித்துக் கொள்கிறார். இந்த அசதியில் மெட்ரோ ரயிலில் பயணிக்கையில் அசந்து தூங்கி விடுகிறார். இதை கருணாகரன் வீடியோ எடுத்து, குடிபோதையில் பயணி ஒருவர் தூங்குவதாக சமூக வலைதளத்தில் பதிவிட, அதை பலரும் பகிர்கின்றனர். விளைவு தொலைக்காட்சியில் செய்தியாக வரும் அளவுக்கு இந்தப் பதிவு பரபரப்பாகிறது.
இதன் காரணமாக விதார்த் வேலை பார்க்கும் இடத்தில் சிக்கல் ஏற்படுவதில் துவங்கி, அவரது மகன் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாக முடியாத அளவுக்கு பிரச்னைகள் உருவாகின்றன.
தன்னை அவதூறாக சித்தரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி காவல் துறையில் புகார் கொடுக்கிறார் விதார்த். அவர் வசிக்கும் வீட்டு உரிமையாளர் மகள், விதார்த் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை சமூக வலைதளத்தில் ஒரு பதிவு மூலம் உண்மையை விளக்குகிறார்.
இதற்கிடையில் கருணாகரன் தான் காதலித்த பெண்ணையை பெற்றார் ஆசியுடன் திருமணம் செய்து கொள்கிறார். தனது தவறான பதவி குறித்த உண்மைகள் கருணாகரனுக்கும் தெரிய வரவே, திருமண மகிழ்ச்சியைக்கூட அனுபவிக்க முடியாமல் குற்ற உணவர்வில் கூனிக் குறுகுகிறார். இறுதியில் இந்தப் பிரச்னை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதே பயணிகள் கவனிக்கவும் படத்தின் கதை.
வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக முகபாவங்கள் மூலமும், உடல் மொழி மூலமும் முத்திரை பதிக்கும் வகையில் நடித்து நம் நெஞ்சில் நிறைகிறார் விதார்த். வித்தியாசமான கதைக் களன் கொண்ட படங்களிலும் தரமான படங்களிலுமே நடிப்பவர் விதார்த் என்பது இந்தப் படத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
விதார்த்தின் மனைவியாக அவருக்கு ஈடுகொடுத்து, முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலியும் கவனம் ஈர்க்கிறார். கருணாகரனின் ஜோடியாக நடித்திருக்கும் மாசும் ஷங்கர் காதலித்த கணவன் திருமணத்துக்குப் பின் தன்னிடம் சரியாக முகம் கொடுத்து பேசாமல் விலகியிருப்பதன் காரணத்தை அறிய முடியாத காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.கருணாகரனுக்கும் கதாநாயகன் அளவுக்கு வெயிட்டான வேடம். காதலியிடம் பேசவதற்கு தடுமாறுவதாகட்டும், தன் தவறை உணர்ந்து குற்ற உணர்ச்சியில் அவஸ்த்தை படுவதாகட்டும் அனைத்தையும் பிரமாதமாக செய்து தன் நடி்புத் திறனை நிரூபித்திருக்கிறார்.மற்றும் கவிதாலயா கிருஷ்ணன், பிரேம் குமார், மூணார் ரமேஷ் ஆகியோரும் சிறிய வேடங்களில் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
எஸ்.பாண்டிகுமாரின் ஒளிப்பதிவும். ஷாமந்த் நாகின் இசையும் படத்துக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கின்றன. தொய்வின்றி நேர்த்தியாக படத்தை தொகுத்து வழங்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர்.எஸ்.சதீஷ்குமார்.
சாலையிலும் பொது இடங்களிலும் மது அருந்துபவர்களை படமெடுத்து சமூக
ஊடகங்களில் பதிவிடுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ரயிலில் தூங்கும் ஒரு
பயணியை வீடியோ எடுத்து குடிபோதையில் தூங்குகிறார் என்று யாராவது
பதிவிடுவார்களா என்ற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.பி.சக்திவேலுக்கு இதுதான் முதல் படம் என்றாலும், படைப்பாளிக்குரிய பொறுப்பை உணர்ந்து தரமானதொரு நல்ல படத்தைத் தந்ததற்காக அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய நல்ல படம் பயணிகள் கவனிக்கவும்
மதிப்பெண் 3.5/ 5